விஜய் பிரசாரத்தில் 41 பேர் பலி சம்பவத்தை விசாரிக்காமல் தீபாவளி பண்டிகையை கொண்டாட சொந்த ஊர் சென்ற சிபிஐ அதிகாரிகள்
கரூர்: கரூர் துயர சம்பவம் தொடர்பான விசாரணைக்காக கரூரில் 2 நாள் தங்கியிருந்த சிபிஐ அதிகாரிகள் சொந்த ஊருக்கு நேற்று புறப்பட்டு சென்றனர். பாதிக்கப்பட்டவர்களிடம் தீபாவளிக்கு பின் விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளனர். கரூர் வேலுச்சாமிபுரத்தில் கடந்த 27ம்தேதி நடந்த தவெக தலைவர் விஜய் பிரச்சாரத்தின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இதுதொடர்பாக உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி அஜய் ரஸ்தோகி மேற்பார்வையில் சிபிஐ விசாரணைக்கு கடந்த 13ம்தேதி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
இதையடுத்து, குஜராத் கேடரை சேர்ந்த ஐபிஎஸ் அதிகாரி பிரவீன்குமார் தலைமையிலான சிபிஐ குழுவினர் கடந்த 17ம்தேதி அதிகாலை கரூர் வந்தனர். இந்த குழுவினரிடம் எஸ்ஐடி குழுவினர் வழக்கு ஆவணங்களை ஒப்படைத்தனர். கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகே பொதுப்பணித்துறைக்கு சொந்தமான பயணியர் விடுதியில் முகாமிட்டு இருந்த சிபிஐ குழுவினர், நேற்றுமுன்தினம் மாலை 5.15 மணியளவில் சம்பவம் நடந்த வேலுச்சாமிபுரத்திற்கு காரில் சென்றனர்.
அங்கு 5 நிமிடம் காருக்குள்ளே இருந்தபடியே அந்த இடத்தை பார்வையிட்டதோடு யாரிடமும் விசாரிக்காமல் பயணியர் விடுதிக்கு திரும்பினர். இந்நிலையில், 20ம்தேதி (இன்று) தீபாவளி பண்டிகையை கொண்டாடுவதற்காக கரூர் பயணியர் விடுதியில் இருந்து சிபிஐ அதிகாரிகள் நேற்று காலை 11 மணியளவில் தங்களது சொந்த ஊருக்கு புறப்பட்டு சென்றனர்.
தீபாவளி பண்டிகை முடிந்து கரூர் திரும்பும் சிபிஐ அதிகாரிகள், பாதிக்கப்பட்ட மக்களை பயணியர் விடுதிக்கு அழைத்து விசாரணை நடத்த திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது.
* வேறு அலுவலகம் தேடும் சிபிஐ
தமிழ்நாடு அரசு அறிவித்த ஒரு நபர் ஆணையமும், சென்னை உயர்நீதிமன்றம் அறிவித்த எஸ்ஐடி குழுவினரும் கரூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள பயணியர் மாளிகையில் தான் தங்கியிருந்து தங்களின் முதற்கட்ட விசாரணையை துவக்கினர். பின்னர், பயணியர் மாளிகைக்கு பல்வேறு துறை அதிகாரிகள் வந்து சென்றதால் தங்களின் விசாரணை பாதிக்கப்படும் எனக்கருதிய எஸ்ஐடியினர், வேறு அலுவலகத்துக்கு மாறி சென்றனர்.
இதேபோல், சிபிஐ அதிகாரிகளும் கடந்த 17ம்தேதி வந்து பயணியர் மாளிகையில் தங்கியிருந்தனர். அப்போதும், வேலை நிமித்தமாக பல்வேறு துறை அதிகாரிகள் வந்து செல்வதால் வழக்கு தொடர்பாக பலரை அழைத்து விசாரிப்பதற்கு இது உகந்த இடமாக இருக்காது என்று சிபிஐ அதிகாரிகள் நினைக்கிறார்களாம். எனவே கரூரில் ஒன்றிய அரசுக்கு ெசாந்தமான கட்டிடம் ஏதும் இருக்கிறதா என்று தேடி வருகிறார்களாம்.
* ‘தீபாவளியை கொண்டாடுங்க...ஒரு வாரம் ஆகும்’: சிபிஐ அதிகாரிகள் மெசெஜ்
பொதுப்பணித்துறை பயணியர் விடுதியில் இருந்து நேற்று காலை 8 மணியளவில் வாக்கிங் செல்வதற்காக 3 சிபிஐ அதிகாரிகள் கைலியுடன் வெளியே வந்தனர். அப்போது அங்கு நின்றிருந்த நிருபர்களை பார்த்த சிபிஐ அதிகாரிகள், ‘ஏன் இங்ேகயே நின்று கொண்டிருக்கிறீர்கள். உங்களை பார்க்கும் போது வருத்தமாக உள்ளது.
எஸ்ஐடி வழங்கிய ஆவணங்களை தான் கடந்த 2 நாட்களாக படித்து வருகிறோம். அதை படித்து முடிக்கவே ஒரு வாரம் ஆகும். அதற்கு பிறகுதான் விசாரணையை மேற்கொள்ள உள்ளோம். அதனால், இப்போது காத்திருக்க வேண்டாம், போய் தீபாவளியை கொண்டாடுங்கள்’ என கூறிக்கொண்டு அங்கிருந்து வாக்கிங் சென்றனர்.