Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

விஜய் பிரச்சார கூட்ட நெரிசலில் 40 பேர் உயிரிழந்த விவகாரத்தில் விசாரணை ஆணையம் விசாரணையை தொடங்கியது

கரூர்: கரூர் வேலுச்சாமிபுரத்தில் தவெக தலைவர் விஜய் பிரச்சார கூட்ட நெரிசலில் 40 பேர் உயிரிழந்த விவகாரத்தில் அருணா ஜெகதீசன் தலைமையில் விசாரணை துவங்கப்பட்டுள்ளது. கரூர் மாவட்டம், வேலுச்சாமிபுரம் பகுதியில் தவெக தலைவர் விஜய், ‘வாகை சூடும் வரலாறு திரும்புகிறது; உங்க விஜய் நான் வரேன்’ எனும் பிரச்சாரக் கூட்டத்தை மேற்கொண்டார். குறித்த நேரத்தில் விஜய் அங்கு வராததன் காரணமாக அந்தப் பகுதியில் தொடர்ந்து கூட்ட நெரிசல் அதிகரித்தது.

பின்னர் தாமதமாக வந்த விஜய், தனது வாகனத்தில் இருந்து வெளியே வந்து தனது பேச்சை துவங்கினார். அவர் பேச்சை துவங்கும்போதே, அங்கு பலரும் மயக்கமடைந்து விழ துவங்கினர். அதனைத் தொடர்ந்து அவசர ஊர்த்திகள் ஒன்றன் பின் ஒன்றாக வேகமாக வந்தது. இதனையடுத்து உடனே விஜய் தனது பேச்சை முடித்துக்கொண்டு அங்கிருந்து கிளம்பி சென்றார்.

பின்னர், அடுத்தடுத்து கூட்டத்தில் இருந்தவர்கள் மரணம் எனும் செய்திகள் வெளியாகின. இந்தச் சம்பவம் நேற்று பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. உடனடியாக சென்னையில் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்ட முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், மருத்துவச் சிகிச்சையை துரிதப்படுத்த உத்தரவிட்டார். அதனையடுத்து நிவாரணம் அறிவித்த முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், ஓய்வு பெற்ற நீதியரசர் அருணா ஜெகதீசன் தலைமையில் ஒரு நபர் விசாரணை ஆணையத்தை அமைத்தார்.

தொடர்ந்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேற்று இரவே கரூர் சென்று பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். இந்நிலையில், கரூரில் கூட்ட நெரிசல் ஏற்பட்ட இடத்தில் முன்னாள் நீதிபதி அருணா ஜெகதீசன் இன்று விசாரணையை தொடங்கினார். அதன்படி விஜய் பிரச்சாரம் செய்த கரூர் வேலுசாமிபுரத்தில் ஆய்வு செய்த முன்னாள் நீதிபதி அருணா ஜெகதீசன், அங்கு ஆய்வை முடித்துவிட்டு, கரூர் அரசு மருத்துவமனை சென்று அங்கும் தனது ஆய்வை மேற்கொண்டார்.

கரூர் வேலுச்சாமிபுரம் பகுதியில் தவெக தலைவர் விஜய் மேற்கொண்ட பரப்புரையில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 40 பேர் உயிரிழந்தனர். இதில் கரூர் மாவட்டத்தில் மட்டும் 27 பேர் தங்களது இன்னுயிரை இழந்தனர். ஈரோடு, திண்டுக்கல் மற்றும் திருப்பூர் மாவட்டங்களைச் சேர்ந்த தலா இருவரும், சேலத்தைச் சேர்ந்த ஒருவரும் உயிரிழந்தார். குறிப்பாக, கரூர் மாவட்டத்தில் ஒரே கிராமத்தைச் சேர்ந்த 5 பேர் பலியாகி உள்ளனர்.