Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
Chettinad Cements
search-icon-img
Advertisement

விஜயாலய சோழீஸ்வரம் நார்த்தாமலை

தமிழ்நாட்டின் புதுக்கோட்டை மாவட்டத்தில் நார்த்தாமலை எனும் ஊர் அமைந்துள்ளது. திருச்சிராப்பள்ளி-புதுக்கோட்டை நெடுஞ்சாலையில் திருச்சிராப்பள்ளியிலிருந்து 36 கிலோமீட்டர் தொலைவிலும், புதுக்கோட்டையிலிருந்து 17 கிலோமீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளது.

பல சிறிய மலைகளும், சிலைகள் நிறைந்த குகைகள் மற்றும் கற்றளிகளும் இப்பகுதியில் அதிகம் காணப் படுகின்றன. நார்த்தாமலையில் மேல மலை, கோட்டை மலை, கடம்பர் மலை, பறையன் மலை, உவச்சன் மலை, ஆளுருட்டி மலை, பொம்மை மலை, மண் மலை, பொன்மலை என மொத்தம் ஒன்பது குன்றுகள் உள்ளன. இதில் மேல மலையை விஜயாலய சோழீஸ் வரம் என்றும் அழைப்பர். மேல மலை மீது விஜயாலய சோழீஸ்வரம் என்ற கோயில் உள்ளது. இதன் வெளிப்புறச் சுவரில் காணப்படும் கல்வெட்டுமூலம் இக்கோயில் சாத்தன்பூதி என்பவரால் கட்டப்பட்டதாகவும், மழையினால் இது இடிந்துவிடவே, மல்லன் விடுமன் என்பவர் இதை விஜயாலய சோழன் காலத்தில் புதுப்பித்தார் என்றும் அறியப்படுகிறது.

விஜயாலயன் காலம் முதல் இக்கோயில் விஜயாலய சோழீஸ்வரம் என்று வழங்கப்பட்டு வந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது. நார்த்தாமலை என்ற பெயர் ‘நகரத்தார் மலை’ என்ற பெயரிலிருந்து மருவிவந்துள்ளதாகக் கருதப்படுகிறது. நகரத்தார் அல்லது நாட்டுக்கோட்டை செட்டியார் என்பவர்கள் பண்டைய காலத்திலிருந்தே கடல் கடந்து வாணிபம் செய்வோர் ஆவர். அவர்களின் செல்வம் கொழிக்கும், வாணிபம் பெருகும் தலைமையகமாக நார்த்தாமலை இருந்திருக்கிறது. நார்த்தாமலை இன்று உள்ளதுபோல் மொட்டைப் பாறைப் பிரதேசமாக இல்லாமல், பல்லவர் மற்றும் சோழர் காலத்தில் செல்வம் கொழிக்கும், வாணிபம் பெருகும் பகுதியாக, வணிகர்களின் தலைமையகமாக இருந்திருக்கிறது. ஏறக்குறைய ஆயிரத்து முன்னூறு ஆண்டுகளுக்கு முன்பு (கி.பி ஏழாம் நூற்றாண்டு முதல் கி.பி ஒன்பதாம் நூற்றாண்டு வரை) பல்லவ ராஜ்யத்தின் ஒரு பகுதியாக இருந்த நார்த்தாமலை தஞ்சாவூர் முத்தரையர் வம்சத்தின் நேரடி ஆதிக்கத்தில் இருந்திருக்கிறது. கி.பி ஒன்பதாம் நூற்றாண்டில், விஜயாலய சோழன் முத்தரையர்களை வீழ்த்திய பிறகு நார்த்தாமலை சோழர்கள் வசம் வந்திருக்கிறது. அதன்பிறகு சோழர் காலத்திலும், பாண்டியர் காலத்திலும் நார்த்தாமலை சிறப்புப் பெற்று விளங்கியதற்கு முதலாம் ராஜராஜ சோழன் (10-ம் நூற்றாண்டு) மற்றும் மாறவர்மன் சுந்தரபாண்டியன் (13ஆம் நூற்றாண்டு) காலத்துக் கற்றளிகளே சான்றுகள்.