சென்னை: விஜயகாந்தை அரசியலுக்காக, வாக்குகளுக்காக விஜய் பயன்படுத்தினால் மக்களும் ஏற்க மாட்டார்கள். நாங்களும் ஏற்க மாட்டோம் என்று பிரேமலதா கூறினார். கடந்த 2006ம் ஆண்டு முதல் தேமுதிக தலைவர் விஜயகாந்தின் பிறந்த நாளான ஆகஸ்ட் 25ம் தேதி ‘வறுமை ஒழிப்பு தினமாக’ கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் மறைந்த விஜயகாந்தின் 73வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது.
இதையொட்டி கட்சியின் தலைமை கழகத்தில் மருத்துவ முகாம், ரத்ததான முகாமை நேற்று பிரேமலதா தொடங்கி வைத்தார். அப்போது பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. பொதுமக்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது. அப்போது பிரேமலதா பேசியதாவது: தேமுதிக தலைவர் விஜயகாந்த் பாதையில் இருந்து தவறாமல் அவர் செய்ததை போலவே எப்போதுமே தேமுதிக செய்யும்.
தேமுதிக முதல் கட்ட பிரசார பயணம் வெற்றி கரமாக முடித்துள்ளோம். போகும் இடம் எல்லாம் மக்களிடையே அன்பும் ஆரவாரமும் கிடைத்தது. நாங்கள் 20 ஆண்டு கட்சி. எதிர்க்கட்சியாகவும் இருந்து இருக்கிறோம். கேப்டன் இடத்தை யார் நினைத்தாலும் பிடிக்க முடியாது. விஜயன் கேப்டனின் பெயரை சொல்கிறார். கேப்டனின் வாக்குகளை அவர் எடுத்துக்கொள்கிறார் என்றால் மக்கள் அதை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.
கட்சி தொண்டர்களும் அதை பொருட்படுத்த மாட்டார்கள். லட்சக்கணக்கான தொண்டர்களை கேப்டன் உருவாக்கி இருக்கிறார். எனவே வேறு யாரும் கேப்டனை பயன்படுத்துவதை மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். இவ்வாறு அவர் பேசினார்.