கிருஷ்ணகிரி: தமிழகம் முழுவதும் `உள்ளம் தேடி இல்லம் நாடி’ என்ற பெயரில் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இவர் நேற்று முன்தினம் இரவு கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனஹள்ளி தொகுதிக்குட்பட்ட ராயக்கோட்டை, சூளகிரி, நடுசாலை, வேப்பனஹள்ளி உள்ளிட்ட பகுதிகளில் தொண்டர்கள் மற்றும் மக்களை சந்தித்தார். நடுசாலை கிராமத்தில் பேசிய பிரேமலதா விஜயகாந்த், `வருகிற ஜனவரி மாதம் முதல் தேமுதிக 2.0 ஆரம்பமாக உள்ளது. துரோகிகள் அனைவரும் வெளியேறி விட்டனர்.
தற்போது விசுவாசிகள் நிறைந்த இந்த கட்சி, வரக்கூடிய தேர்தலில் போட்டியிடும் இடங்களில், மகத்தான வெற்றி பெறும் என்றார். இவர் பேசுகையில், ஆகஸ்ட் 25ம் தேதி விஜயகாந்தின் பிறந்தநாள் என்று கூறுவதற்கு பதிலாக, டிசம்பர் 25ம் தேதி விஜயகாந்த் பிறந்தநாள் என்று கூறியதோடு அன்று தேமுதிக சார்பில் பல்வேறு நலத்திட்டங்கள் மக்களுக்கு வழங்கப்படும் என்று குறிப்பிட்டார். இதனால் அங்கு கூடியிருந்த தொண்டர்களிடையே குழப்பம் ஏற்பட்டது. கூட்டத்தில் இருந்து ஒரு சிலர் அது டிசம்பர் மாதம் அல்ல ஆகஸ்ட் மாதம் என சத்தமிட்டனர்.