மதுரை: யாரும் கட்சி ஆரம்பித்து கூட்டம் கூட்டலாம். ஆனால் மக்கள் தெளிவானவர்கள்’ என்று விஜயபிரபாகரன் தெரிவித்தார். மதுரையில் நேற்று நடந்த தேமுதிக நிர்வாகி இல்ல விழாவில் கலந்து கொண்டு தேமுதிக இளைஞரணி மாநிலச் செயலாளர் விஜய பிரபாகரன் பேசும்போது, ‘‘யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம், யார் வேண்டுமானாலும் கட்சி ஆரம்பித்து கூட்டம் கூட்டலாம். ஆனால் மக்கள் தெளிவானவர்கள். யாருக்கு ஓட்டு போடலாம் என்று அவர்களுக்கு தெரியும்’’ என்றார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறும்போது, ‘‘தேமுதிக எந்தக் கூட்டணிக்கு செல்கிறதோ அந்த கட்சிக்கு தான் வெற்றி வாய்ப்பு அதிகமிருக்கும்.
தற்போது தேமுதிக, மக்களுடன் கூட்டணியில் இருக்கிறது. யாருடன் நாங்கள் கூட்டணி என்பதை வரும் ஜனவரி 9ம் தேதி நடக்கும் மாநாட்டில் பிரேமலதா அறிவிப்பார். விஜயகாந்த் ட்ரெண்டிங்கில் இருந்தபோது, நாம் தமிழர் சீமான் விஜயகாந்தை திட்டியதால்தான் ஓட்டு வாங்கினார். அரசியலில் நிரந்தர நண்பனும் இல்லை, எதிரியும் இல்லை. விஜயகாந்தின் ரசிகர்கள், தொண்டர்கள் அவ்வளவு முட்டாள்கள் அல்ல. அதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். அவர்கள் எப்போதும் தேமுதிகவிற்கு பின்னால்தான் நிற்பார்கள். விஜய் எந்த கணக்கில் பேசினாரோ தெரியவில்லை. அதற்காக விஜய் எங்கள் எதிரியல்ல’’ என்றார்.