சிவகாசி: விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அதிமுக வடக்கு ஒன்றிய பாக முகவர்களுக்கான பயிற்சி கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி பேசியதாவது: விருதுநகர் நாடாளுமன்ற தேர்தலில் சிவகாசி வடக்கு ஒன்றிய பகுதியில் வெகு தொலைவில் இருந்த வாக்குச்சாவடிகளுக்கு உட்பட்ட பகுதியில் வாக்காளர்களுக்கு வாகன வசதியை நாம் செய்து கொடுக்காமல் விட்டதால் சுமார் 7 ஆயிரம் வாக்குகள் பதிவாகாமல் போனதே விஜயபிரபாகரனின் தோல்விக்கு காரணம். 7 ஆயிரம் வாக்குகள் பதிவாகியிருந்தால் 2 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருப்பார். வெற்றியை கோட்டை விட்டு விட்டோம்.
வெற்றியை எங்கு தவற விட்டோம் என கண்காணிக்கும்போது எனது கண்ணுக்கு வெளிச்சமாக தெரிந்தது. வடக்கு ஒன்றியத்தில் நமக்கு கிடைக்க வேண்டிய 7 ஆயிரம் வாக்குகள் பதிவாகாதது என்பது தெரியவந்தது. மேலும், 50 ஆயிரம் முதல் 1 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவோம் என்ற மமதையில் இருந்துவிட்டோம். அதுபோல் எப்போதும் இருக்க கூடாது என்பதற்கு கடந்த நாடாளுமன்ற தேர்தல் நமக்கு ஒரு படிப்பினை. கவனமாக இருந்திருந்தால் விஜயபிரபாகரன் வெற்றி பெற்று நாடாளுமன்றம் சென்றிருப்பார். அவரை அனுப்பி வைத்த பெருமையை நாம் பெற்றிருப்போம். வரும் சட்டமன்ற தேர்தலில் கவனமாக செயல்பட வேண்டும். இவ்வாறு பேசினார்.
ஒன்றிய அரசுக்கு எடப்பாடி அடிமையா?
விருதுநகரில் நேற்று நடந்த அதிமுக வாக்குச்சாவடி முகவர்களுக்கான பயிற்சி கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேசியதாவது: கள்ள ஓட்டு, போலி வாக்காளர்களை களைவதற்காக இந்திய தேர்தல் ஆணையம் எடுத்துள்ள முடிவை எடப்பாடி வரவேற்றுள்ளார். அதிமுகவுக்கு யாரை கண்டும் பயம் கிடையாது. மக்களுக்கு பயப்படுவோம். வேறு எந்த கொம்பனுக்கும் பயப்பட மாட்டோம். எடப்பாடியை ஏமாற்றலாம், கழற்றி விடலாம், ஒழித்து விடலாம் என்று சில சதிகாரர்கள் சதி, சூழ்ச்சி செய்தனர்.
அந்த சதி, சூழ்ச்சிகளை எல்லாம் அடித்து நொறுக்கி முழு பவுர்ணமி நிலவாக ஒளிர்கிறார் எடப்பாடி. அதிமுக தேச பக்தி உள்ள இயக்கம். நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் பாஜவுடன் எடப்பாடி, கூட்டணி வைத்துள்ளார். பாஜவோடு தேச-தெய்வீக பக்தன் எடப்பாடி கூட்டணி வைத்ததில் எந்தத் தவறும் இல்லை. இந்த கூட்டணி ஆன்மீக பலம் பொருந்தியது. ஒன்றிய அரசுக்கு யார் அடிமை. எப்போது எதிர்க்க வேண்டுமோ? அதை தயங்காமல் எதிர்க்கக் கூடியவர் எடப்பாடி. இவ்வாறு பேசினார்.
