கரூர்: கரூர் வேலுச்சாமிபுரத்தல் விஜய் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த போது, கூட்ட நெரிசலில் சிக்கி 5 பேர் ஆபத்தான நிலையில் இருப்பதாக வாய் பேச முடியாத இளைஞர் ஒருவர் செல்பி வீடியோவில் சைகை மூலம் தெரிவிக்கும் வீடியோ தற்போது வௌியாகியுள்ளது. கரூர் வேலுச்சாமிபுரத்தில் கடந்த மாதம் 27ம்தேதி விஜய் பிரசாரத்தின் போது கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தது தொடர்பாக தினமும் பல்வேறு வீடியோக்கள் வௌியாகி வைரலாகி வருகிறது.
அந்த வரிசையில் இப்போது நெகிழ்ச்சியான வீடியோ ஒன்று வௌியாகி அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. பயங்கரமான கூட்ட நெரிசல், தள்ளுமுள்ளு ஏற்பட்டு ரசிகர்களும், தொண்டர்களும் அல்லோலப்பட்டனர். கூட்டத்தில் இருந்து கூக்குரல்களும் அழுகை குரல்களும் கேட்டுக் கொண்டே இருந்தது. பலர் முண்டியடித்துக் கொண்டு கூட்டத்தில் இருந்து வௌியேற முயற்சி செய்து கொண்டிருந்தனர்.
ஆனால் இது எதையுமே கண்டுகொள்ளாமல் தொடர்ந்து விஜய் பிரசார வாகனத்தின் மேல் அங்குமிங்கும் நடந்தபடி பேசிக்கொண்டே இருக்கிறார். இந்நிலையில் பிரசார வாகனத்தின் அருகில் இருந்த வாய் பேச முடியாத இளைஞர் ஒருவர் தனது செல்போனில் செல்பி வீடியோ எடுக்கிறார். அந்த வீடியோவில் வாய் பேச முடியாத நிலையிலும் சைகை மூலம் அங்கிருக்கும் நிலைமையை விளக்குகிறார்.
அதாவது, கூட்ட நெரிசலில் சிக்கி 5 பேர் ஆபத்தான நிலையில் இருப்பதாகவும், 3 குழந்தைகள் மூச்சுத்திணறலால் பாதிக்கப்பட்டு ஆபத்தான நிலையில் இருப்பதாகவும் அவர் சைகை மூலம் சொல்கிறார். இந்த வீடியோ தற்போது வௌியாகி வைரலாகி வருகிறது. கூட்டத்தின் அசாதாரண நிலையை பார்த்து பயந்து போய், பதற்றத்துடன் அந்த வாய்பேச முடியாத இளைஞர் தனக்கு ஏதாவது நேர்ந்து விட்டாலும், அந்த இடத்தில் இருந்த நிலைமையை மற்றவர்களுக்கு விளக்குவதற்காகவே இந்த வீடியோவை வௌியிட்டது போல் உள்ளது.
* நெரிசலில் மகன் உயிரிழப்பு அனாதையாக நிற்பதாக பார்வையற்ற தாய் கதறல்
விஜய் பிரசார கூட்டத்தில் ஈரோடு மாவட்டம் பவானி அடுத்த ஜம்பைச் சேர்ந்த கந்தசாமி- சாந்தி தம்பதியின் மகன் மோகன் (22) உயிரிழந்தார். அவரது பார்வையற்ற தாய் கதறும் அழும் வீடியோ சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. அந்த வீடியோவில், ‘‘என் மகனை கூட்டி வாருங்கள். இல்லையென்றால் என் கட்டிலுக்கு கீழே கயிறு வைத்திருக்கிறேன். நான் தூக்கிட்டு தற்கொலை செய்து கொள்வேன்.
தனது ஒரே மகன், நடிகரின் கூட்டத்துக்கு சென்று உயிரிழந்ததால், அனாதையாக, தனி மரமாக உள்ளதாக சாந்தி அழுது புலம்பினார். படித்து, நல்ல வேலைக்கு சென்று தன்னை காப்பாற்றுவான் என நினைத்த மகன், ஏமாற்றி நடுத்தெருவில் விட்டு சென்றுவிட்டான்’ என கூறி அழும் வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வெளியாகி, பார்ப்போரை கண்கலங்க செய்துள்ளது.