விஜய் பிரசார நெரிசலில் சிக்கி 41 பேர் பலியான கரூர் வேலுச்சாமிபுரத்தில் சிபிஐ 6 மணி நேரம் விசாரணை: 3 பேரிடம் கிடுக்கிப்பிடி, சாலையை 3டி லேசர் ஸ்கேனர் கருவியால் அளவீடு, சிசிடிவி காட்சிகள் சேகரிப்பு
கரூர்: கரூரில் விஜய் பிரசாரத்தில் 41 பேர் பலியான சம்பவத்தில் கூட்ட நெரிசல் ஏற்பட்ட இடத்தில் சிபிஐ அதிகாரிகள் 6 மணி நேரம் விசாரணை நடத்தினர். மேலும் சாலையை லேசர் ஸ்கேனர் கருவி மூலம் அளந்த அவர்கள், அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளையும் ஆய்வு செய்து சேகரித்தனர். சம்பவம் தொடர்பாக 3 பேருக்கு சம்மன் அனுப்பியும் விசாரணை நடத்தினர்.
கரூரில் கடந்த மாதம் 27ம் தேதி தவெக தலைவர் விஜய் பிரசாரத்தின் போது கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த வழக்கை சிபிஐ அதிகாரி பிரவீன்குமார், ஏடிஎஸ்பி முகேஸ்குமார், டிஎஸ்பி ராமகிருஷ்ணன், இன்ஸ்பெக்டர் மனோகரன் உள்ளிட்டோர் விசாரித்து வருகின்றனர். தீபாவளி விடுமுறைக்கு சொந்த ஊர் சென்ற அதிகாரிகள், 11 நாட்களுக்கு பின் நேற்றுமுன்தினம் காலை 8 மணியளவில் கரூர் திரும்பினர். இதனைத்தொடர்ந்து பயணியர் விடுதிக்கு வந்த கரூர் டவுன் இன்ஸ்பெக்டர் மணிவண்ணனிடம் ஒரு மணி நேரம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
அப்போது, விஜய் பேசும்போது முதலில் ஆம்புலன்ஸ் எதற்காக வந்தது? அதன்பின் அந்த ஆம்புலன்ஸ் எங்கு போனது? சம்பவம் நடந்தபோது ஆம்புலன்ஸ் எத்தனை மணிக்கு வந்தது? எவ்வளவு ஆம்புலன்ஸ் வந்தது? அப்போது நீங்கள் என்ன செய்து கொண்டிருந்தீர்கள்? என்று விசாரணை நடத்தினர். இந்நிலையில், சிபிஐ சார்பில் வேலுச்சாமிபுரத்தை சேர்ந்த பொதுமக்களில் ஒருவரான கனகராஜ், அந்த பகுதியில் டிபார்ட்மென்ட் ஸ்டோர் உரிமையாளர் ஆனந்த் மற்றும் காவல்துறைக்கு வீடியோ எடுத்து கொடுத்த புகைப்படக்காரர் ராஜசேகரன் ஆகியோரை 31ம்தேதி (நேற்று) விசாரணைக்கு ஆஜராகும்படி சம்மன் அனுப்பப்பட்டது.
அதன்படி நேற்று காலை சம்மனுடன் 3 பேரும் பயணியர் விடுதிக்கு சென்றனர். அங்கு அவர்களை தனித்தனியாக அழைத்து சிபிஐ ஏடிஎஸ்பி முகேஷ்குமார் தலைமையிலான அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அதில் சம்பவம் நடந்த வேலுச்சாமிபுரத்தில் அதிகளவில் கூட்டம் கூடியது எப்படி, திடீரென தள்ளுமுள்ளு ஏற்பட்டது எப்படி, இந்த துயர சம்பவம் நடந்ததற்கான காரணம் என்ன என்று அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பினர். அப்போது 3 பேரும் அவர்களது கருத்துகளை தெரிவித்தனர்.
இதனைத்தொடர்ந்து சிபிஐ அதிகாரி பிரவீன்குமார் தலைமையில் ஏடிஎஸ்பி முகேஷ்குமார், டிஎஸ்பி ராமகிருஷ்ணன் உள்பட 6 பேர் குழுவினர், இதேபோல் மதுரையில் இருந்து ஒரு காரில் வந்த சிபிஐ அதிகாரிகள் 6 பேர் என 12 பேர் நேற்று காலை 11 மணியளவில் 2 கார்களில் சம்பவம் நடைபெற்ற வேலுச்சாமிபுரத்துக்கு சென்றனர். கரூர் டவுன் டிஎஸ்பி செல்வராஜ், இன்ஸ்பெக்டர் மணிவண்ணன் ஆகியோரை சம்பவம் நடந்த இடத்துக்கு வரவழைத்த சிபிஐ அதிகாரிகள், தவெக தலைவர் விஜய் எந்த இடத்தில் நின்று பேசினார், எந்த வழியாக அங்கு வந்தார்.
ஜெனரேட்டர் எங்கு வைக்கப்பட்டிருந்தது, எந்த இடத்தில் கூட்டம் அதிகமாக இருந்தது என தீவிரமாக விசாரித்தனர். பின்னர் 11.30 மணியளவில் கரூர் - ஈரோடு சாலையில் முனியப்பன் கோயிலில் இருந்து வேலுச்சாமிபுரம் வழியாக கோதூர் பிரிவு சாலை வரை சுமார் 600 மீட்டர் தூரத்துக்கு வாகனங்கள் வரமுடியாதபடி சாலையை போலீசார் அடைத்து இருந்ததோடு அங்கு தீவிர பாதுகாப்பு பணியை மேற்கொண்டனர்.
இதில் குறிப்பிட்ட தூரம் வரை வாகன போக்குவரத்துக்கு தடை விதிக்கும் வகையில் கயிறு கட்டி தடுப்பும் ஏற்படுத்தப்பட்டு இருந்தது. இந்த சாலையின் வழியாக பேருந்து உட்பட அனைத்து வாகன போக்குவரத்துக்கும் தடை விதிக்கப்பட்டது. இதனால் கரூர்- ஈரோடு இடையில் செல்லும் அனைத்து வாகனங்களும் மாற்று வழியில் திருப்பி விடப்பட்டன.
தொடர்ந்து சிபிஐ அதிகாரிகள், இரண்டு பிரிவுகளாக பிரிந்து, பாதுகாக்கப்பட்ட பகுதிகளில் உள்ள அனைத்து கடைகளுக்கும் சென்று, சம்பவம் நடைபெற்ற போது அவர்களது கடைகளில் இருந்த சிசிடிவி கேமராக்களில் பதிவுகள் இருக்கா? இல்லையா என கேட்டதோடு, அப்படி இருந்தால் தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டனர். மேலும், அருகில் உள்ள சில ஐடி கம்பெனிகளுக்கும் சென்ற சிபிஐ அதிகாரிகள், சிசிடிவி கேமரா பதிவுகளை தர வேண்டும் என கேட்டுக்கொண்டனர்.
மேலும் தடுப்புகள் ஏற்படுத்தப்பட்ட 600 மீட்டர் தூரப்பகுதியில் உள்ள சாலைப்பகுதிகளில் உள்ள நீளம் மற்றும் அகலம் போன்றவற்றை 3டி லேசர் ஸ்கேனர் கருவி மூலம் அளவிடும் பணியில் ஒரு குழுவினர் ஈடுபட்டனர். காலை 11.30 மணிக்கு தொடங்கிய இந்த விசாரணை மாலை 5.30 மணிவரை 6 மணிநேரம் தொடர்ந்து நடந்தது. பின்னர் அவர்கள் அனைவரும் பயணியர் விடுதிக்கு புறப்பட்டு சென்றனர். இதை தொடர்ந்து தடை விதிக்கப்பட்ட அந்த பகுதியில் மீண்டும் போக்குவரத்து தொடங்கியது. மதுரையில் இருந்து கூடுதலாக சிபிஐ அதிகாரிகள் 6 பேரும், ஏற்கனவே வந்த 6 பேருடன் இணைந்துள்ளதால் வழக்கு விசாரணை சூடுபிடித்துள்ளது.
* ஆச்சரியத்துடன் பார்த்த மக்கள்
கரூர் வேலுச்சாமிபுரத்தில் சிபிஐ அதிகாரிகள் 3டி லேசர் ஸ்கேனர் கருவியை பயன்படுத்தி அளவீடு செய்ததை அந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் ஆச்சரியத்துடன் பார்வையிட்டனர். மேலும், இந்த கருவி, குற்றங்கள் மற்றும் விபத்துக்கள் நடந்த இடத்தின் நீளம் அகலம் மற்றும் காட்சிகளின் பதிவு போன்றவற்றை பதிவு செய்யும் திறன் கொண்டது குறிப்பிடத்தக்கது.
* 40 நாட்களாகியும் தொந்தரவா?
சிபிஐ அதிகாரிகள் தடுப்புகள் வைத்து விசாரணை மேற்கொண்டிருந்த போது, போதையில் அந்த வழியாக பைக்கில் வந்த 40 வயது மதிக்கத்தக்க நபர், சம்பவம் நடந்த 40 நாட்களாகி விட்டது. திரும்பவும் இந்த பகுதிக்கு வந்து பொதுமக்களுக்கு தொந்தரவு தருகிறார்கள். உள்ளூர் மக்கள் செல்ல முடியாத அளவுக்கு பெரிய தொந்தரவாக உள்ளது என தனது ஆதங்கத்தை அங்கு நின்றிருந்த டிவி நிருபர்களிடம் பேட்டி கொடுத்து கொண்டிருந்தார். பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார், குடித்திருக்கிறாயா? ஊது பார்ப்போம் எனக்கூறி அந்த நபரை, பைக்குடன் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.
* நெரிசல் பகுதிக்கே வரவழைத்து 3 பேரிடம் விசாரணை
பயணியர் விடுதியில் காலையில் விசாரணை நடத்திய 3 பேரையும் காரில் கூட்ட நெரிசல் ஏற்பட்ட இடத்துக்கு வரவழைத்த சிபிஐ அதிகாரிகள், அவர்களிடம் விசாரணை நடத்தினர். இதில் வீடியோ எடுத்த ராஜசேகரிடம் எந்த கோணத்தில் நின்று வீடியோ எடுத்தீர்கள், ஒரே இடத்தில் நின்று வீடியோ எடுத்தீர்களா என்று கேட்டனர். டிபார்ட்மென்ட் ஸ்டோர் உரிமையாளர் ஆனந்திடம் கடை முன்பு எவ்வளவு பேர் கூடியிருப்பார்கள், கூட்டம் அதிகமாக வந்த நேரத்தில் கடை திறந்து வைத்திருந்தீர்களா, பூட்டிவிட்டீர்களா என்று கேட்டனர்.
