திருச்சி: தவெக தலைவர் விஜய் வருகிற 13ம் தேதி திருச்சியில் பிரசாரத்தை தொடங்குகிறார். இதற்கு அனுமதி கேட்டு தவெக பொதுச்செயலாளர் ஆனந்த், திருச்சி கமிஷனர் அலுவலகத்தில் கடிதம் வழங்கினார். தமிழக வெற்றிக் கழகம் தலைவர் நடிகர் விஜய் அரசியல் கட்சி தொடங்கிய பின் முதன்முறையாக தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்து மக்களை சந்திக்க உள்ளார். இதற்காக வரும் 13ம் தேதி திருச்சியில் இருந்து பிரசார சுற்றுப்பயணத்தை துவங்க உள்ளார். இந்த நிலையில், தவெகவின் பொதுச்செயலாளர் ஆனந்த், நேற்று திருச்சி மாநகர காவல் ஆணையகரத்தில் பிரசாரத்திற்கு அனுமதி கோரி கடிதம் வழங்கினார். அதில், ‘தவெக தலைவர் விஜய் வரும் 13ம் தேதி அரசியல் சுற்றுப்பயணத்தை மேற்கொள்ள உள்ளார். மக்களுக்கோ, போக்குவரத்திற்கோ எவ்வித இடையூறும் ஏற்படாத வகையில் விதிகளை பின்பற்றி பிரசார பயணத்தை நடத்துவோம்.
மேலும், 13ம் தேதி காலை 10.35 மணிக்கு திருச்சி டிவிஎஸ் டோல்கேட், தலைமை அஞ்சலக ரவுண்டானா, மேலப்புதூர், பாலக்கரை ரவுண்டானா, மரக்கடை மற்றும் இறுதியாக சத்திரம் பேருந்து நிலையத்தில் விஜய் உரையாற்றுகிறார்’ என தெரிவிக்கப்பட்டு இருந்தது. முக்கியமாக, சத்திரம் பஸ் நிலையத்தில் பிரசாரத்திற்கு போலீசார் அனுமதி மறுத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. சத்திரம் பஸ் நிலையத்தில் போக்குவரத்து எப்போதும் அதிகமாக இருக்கும், மக்களின் நடமாட்டம் அதிகமாக இருக்கும் என்பதால், அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. மேலும், திருச்சி மரக்கடையில் பிரசாரத்திற்கு அனுமதி வழங்கப்படலாம் என கூறப்படுகிறது. திருச்சியை தொடர்ந்து, அரியலூர் பழைய பேருந்து நிலையம், பெரம்பலூர் குன்னம் பேருந்து நிலையம் ஆகிய இடங்களில் தவெக தலைவர் விஜய் உரையாற்ற உள்ளதாக தெரிகிறது.