விஜய் கூட்ட நெரிசலில் 41பேர் பலி தொடர்பாக உயிரிழந்தவர்கள், காயமடைந்தவர்கள் வீட்டிற்கு சென்று சிபிஐ விசாரணை
கரூர்: கரூரில் விஜய் பிரசார கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியான சம்பவம் தொடர்பாக வேலுச்சாமிபுரத்தில் இருந்த கடைக்காரர்கள, பொதுமக்கள், பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார், ஆம்புலன்ஸ் டிரைவர்கள், உரிமையாளர்கள், சம்பவத்தில் காயமடைந்தவர்கள் என பலதரப்பட்டவர்களிடம் சிபிஐ அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டனர். இந்நிலையில், நேற்று காலை 11 மணியளவில் சிபிஐ விசாரணை அலுவலகத்தில் இருந்த அதிகாரிகளை கரூர் டிஆர்ஓவின் நேர்முக உதவியாளர் அமுதா சந்தித்து பேசினார்.
பின்னர் மாலை 3 மணி அளிவில் 3 கார்களில் வேலுச்சாமிபுரம் சென்ற சிபிஐ அதிகாரிகள் அங்கிருந்து 3 குழுக்களாக பிரிந்து கூட்ட நெரிசலில் காயமடைந்து நேரில் வரமுடியாதவர்களின் வீடுகளுக்கே சென்று விசாரணை நடத்தினர். குறிப்பாக ஒரே குடும்பத்தை சேர்ந்த பழனியம்மாள், கோகிலா ஆகியோர் இறந்த வீட்டிற்கு சென்று சிபிஐ அதிகாரிகள் அஙகு இருந்தவர்களிடம் விசாரணை நடத்தினர்.
அதே போல் சம்பவம் நடைபெற்ற இடத்திற்கு நேர் பின்னால் இருக்கும் வேலுச்சாமிபுரம் நான்காவது கிராஸ் பகுதிக்கு சென்ற சிபிஐ அதிகாரிகள் கையில் பெயர் பட்டியலை வைத்துக்கொண்டு ஒவ்வொருவராக விசாரணை நடத்தினர். இந்நிலையில், சிபிஐ விசாரணை அலுவலகத்திற்கு நேற்று மாலை ஒரு வாகனத்தில் ஜெராக்ஸ் மெஷின், லேப்டாப், கூடுதல் டேபிள்கள், சேர்கள் கொண்டு வரப்பட்டன.


