விஜய் கூட்ட நெரிசலில் 41 பேர் பலி வழக்கு சிபிஐ முன் ஆம்புலன்ஸ் டிரைவர்கள், உரிமையாளர்கள் ஆஜராகி விளக்கம்: நீதிபதி தலைமையிலான மேற்பார்வை குழு விரைவில் கரூர் வருகை
கரூர்: கரூரில் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியான வழக்கில் சிபிஐ அதிகாரிகள் 3 குழுவாக பிரிந்து விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர். ஆம்புலன்ஸ் டிரைவர்கள், உரிமையாளர்கள் 11 பேர் நேற்று நேரில் ஆஜராகி விளக்கமளித்தனர். கரூரில் கடந்த செப்டம்பர் 27ம்தேதி தவெக தலைவர் விஜய் பிரசாரத்தின்போது கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த வழக்கை சிபிஜ விசாரித்து வருகிறது. வேலுச்சாமிபுரத்தை சேர்ந்த 306 பேருக்கு விசாரணைக்காக நேரில் ஆஜராகும்படி சம்மன் அனுப்பி இருந்த நிலையில் இதுவரை 28 பேர் மட்டுமே ஆஜராகி விளக்கத்தை பதிவு செய்தனர்.
இதே போல் 8 பெண் போலீஸ் உட்பட 12 காவலர்கள், 10 எஸ்ஐக்கள் ஆஜராகி விளக்கமளித்தனர். இதைதொடர்ந்து, நேற்று மதியம் 3 மணியளவில் சிபிஐ அதிகாரிகள் முன்னிலையில் ஆம்புலன்ஸ் டிரைவர்கள் 5பேர், உரிமையாளர்கள் 6 பேர் என 11 பேர் தனித்தனியாக ஆஜராகி விளக்கமளித்தனர். அவர்களிடம் 3 மணி நேரம் விசாரணை நடந்தது. சம்பவத்தின் போது எத்தனை ஆம்புலன்ஸ்கள் மீட்பு பணியில் ஈடுபட்டது, யார் யார் மூலம் தகவல் தரப்பட்டது,
எந்தெந்த இடத்திலிருந்து காயமடைந்தவர்கள் எத்தனை பேர் ஆம்புலன்சில் கொண்டு செல்லப்பட்டனர், எந்தெந்த மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டிருந்தனர் உள்ளிட்ட பல்வேறு கேள்விகளை கேட்டு அதை வாக்குமூலமாக சிபிஐ அதிகாரிகள் பதிவு செய்தனர். இந்நிலையில் சிபிஐ அதிகாரிகள் 12 பேரில், 3 பேர் மட்டுமே பயணியர் விடுதியில் உள்ளனர். மீதமுள்ள 9 அதிகாரிகள் 3 குழுவாக பிரிந்து விசாரித்து வருகின்றனர்.
சம்பவத்தின் போது பாதிக்கப்பட்டோரின் மனநிலை எப்படி உள்ளது, சம்பவம் குறித்து பொதுமக்கள் என்ன பேசிக்கொள்கிறார்கள் என்பது குறித்த விபரங்கள் சேகரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். சிபிஐ விசாரணையை கண்காணிக்க ஓய்வுபெற்ற நீதிபதி அஜய் ரஸ்தோகி தலைமையில் மூத்த ஐபிஎஸ் அதிகாரிகள் சுமித் சரண், சோனல் பி.மிஸ்ரா ஆகியோர் கொண்ட குழுவை உச்சநீதிமன்றம் நியமித்தது. அதன்படி, சுமித் சரண், சோனல் பி.மிஸ்ரா ஆகியோர் கரூருக்கு விரைவில் வர உள்ளதாகவும் தகவல் வௌியாகியுள்ளது.
* சிசிடிவி ஆதாரத்துடன் ஆதவ் அர்ஜூனா ஆதரவாளர் தலைமறைவு
கரூர் காமராஜபுரம் 3வது தெருவை சேர்ந்த ராம்குமார் தவெக கரூர் நிர்வாகியாக இருந்துள்ளார். மேலும், ஆதவ் அர்ஜூனாவின் சென்னை நிறுவனமான வாய்ஸ் ஆப் காமன்ஸ் மூலம் விஜய்யின் பிரசார நிகழ்வுகளை ஒருங்கிணைக்கும் பொறுப்பிலும் இருந்ததாக கூறப்படுகிறது. செப்டம்பர் 27ம் தேதி கரூரில் விஜய் பிரசாரத்தை ஒருங்கிணைத்ததும் இவர்தான் எனக்கூறப்படுகிறது.
இந்நிலையில் சில நாட்களுக்கு முன் சென்னை பனையூர் தவெக அலுவலகத்துக்கு வந்த சிபிஐ அதிகாரி விஜய் பிரசார பேருந்தில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஒப்படைக்க வேண்டுமென சம்மன் கொடுத்தார். ஆனால் முக்கிய ஆதாரமான நிகழ்ச்சி சம்பந்தமான காட்சிகள் அடங்கிய ஹார்ட் டிஸ்குகள், கூட்ட நெரிசல் தொடர்பான சிசிடிவி மற்றும் வீடியோ ஆதாரங்களுடன் ராம்குமார் தலைமறைவாகிவிட்டதாக கூறப்படுகிறது.
இதனால் இவரது மொபைல் ரிக்கார்டுகள், வங்கி பரிவர்த்தனைகளை தீவிரமாக சோதனை செய்ய சிபிஐ அதிகாரிகள் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. எஸ்ஐடி குழுவிடம் முகவரி மற்றும் செல்போன் விவரங்களை கொடுக்காமல், நெருங்கிய வழக்கறிஞர் ஒருவரின் விவரம் கொடுக்கப்பட்டது விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதனால் ராம்குமாரை சிபிஐ அதிகாரிகள் தீவிரமாக தேடி வருகின்றனர்.
* தவெகவுக்கு ஆதரவாக பதிலளிக்க வக்கீல் பயிற்சி
சிபிஐ சம்மன் அனுப்பியதில், அதிகாரிகள் முன்னிலையில் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கும் வேலுச்சாமிபுரத்தை சேர்ந்தவர்களிடம், விசாரணையின் போது தவெகவுக்கு ஆதரவாக எப்படி பதில் அளிக்க வேண்டும் என தவெகவை சேர்ந்த வழக்கறிஞர் ஒருவர் ஆலோசனை வழங்குவதாக தகவல் தெரிய வந்து உள்ளது. அந்த வழக்கறிஞர் யார் என்று சிபிஐ விசாரித்து வருகிறது.
