விஜய் கூட்ட நெரிசலில் 41 பேர் பலியில் கைதான தவெக மாவட்ட செயலாளருக்கு 2 நாள் எஸ்ஐடி காவல்: கரூர் நீதிமன்றம் அனுமதி
கரூர்: விஜய் கூட்ட நெரிசலில் 41 பேர் பலியான சம்பவத்தில் திருச்சி சிறையில் உள்ள தவெக மாவட்ட செயலாளர் மதியழகனை 2 நாள் கஸ்டடியில் விசாரிக்க எஸ்ஐடிக்கு கரூர் நீதிமன்றம் நேற்று அனுமதி வழங்கியது. கரூர் வேலுச்சாமிபுரத்தில் கடந்த 27ம்தேதி விஜய் பிரசார கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்ட கரூர் மேற்கு மாவட்ட செயலாளர் மதியழகன், இவருக்கு அடைக்கலம் தந்த கரூர் மாநகர பொறுப்பாளர் பவுன்ராஜ் ஆகியோர் கைது செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்நிலையில் திருச்சி மத்திய சிறையில் உள்ள மதியழகனை 5 நாள் காவலில் எடுத்து விசாரிக்க சிறப்பு புலனாய்வு குழுவினர் (எஸ்ஐடி) முடிவு செய்தனர். இதற்காக கரூர் மாவட்ட தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றம்1ல் நேற்று காலை மனுதாக்கல் செய்தனர். இதனைத்தொடர்ந்து திருச்சி மத்திய சிறையில் இருந்து பலத்த பாதுகாப்புடன் மதியழகன் தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்துக்கு நேற்று பிற்பகல் 12 மணியளவில் அழைத்து வரப்பட்டு நீதிபதி பரத்குமார் முன்பு ஆஜர்படுத்தப்பட்டார்.
சிறப்பு புலனாய்வு குழுவினர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், கூட்டு சதி நடந்ததா என்பது குறித்து விசாரணை நடத்த வேண்டும், ட்ரோன், சிசிடிவி கேமரா பதிவுகள் குறித்தும், பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்தும் விசாரணை மேற்கொள்ள வேண்டும். இதற்காக 5 நாள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி வழங்க வேண்டும் என வாதாடினார். தவெக தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், ஏற்கனவே உள்ளூர் போலீசார் மதியழகனை கைது செய்து விசாரணை செய்ததற்கான ஆவணங்கள் மற்றும் வீடியோக்கள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளனர். எனவே, 5 நாள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கொடுக்க கூடாது.
மேலும், சிறப்பு புலனாய்வு குழு விசாரணை வேண்டாம் என்ற மனுவின் மீதான விசாரணை உச்சநீதிமன்றத்தில் நாளை (இன்று) விசாரணைக்கு வரவுள்ளது என நீதிபதி முன்பு வாதாடினர். சிறப்பு புலனாய்வு குழுவினரின் வழக்கறிஞர்கள், அந்த விசாரணை வரும் போது வரட்டும், இப்போது 5 நாள் கஸ்டடிக்கு அனுமதி வழங்க வேண்டும் என வாதாடினர். இரு தரப்பினரின் விவாதங்கள் 20 நிமிடங்கள் நடைபெற்ற நிலையில், விசாரணையை நீதிபதி பரத்குமார் ஒத்தி வைத்தார். இதனைத்தொடர்ந்து 3.30 மணியளவில் மீண்டும் விசாரணை துவங்கியது.
அப்போது நீதிபதி, மதியழகனை அவரது வழக்கறிஞர்கள் சந்திக்க அனுமதி வழங்க வேண்டும், உடல்நலம் குறித்து பரிசோதிக்க மருத்துவமனைக்கு அனுமதிக்க வேண்டும், கஸ்டடியின் போது துன்புறுத்தல் கூடாது என்ற நிபந்தனைகளுடன் 2 நாள் கஸ்டடிக்கு அனுமதி வழங்கியதோடு, வரும் 11ம்தேதி மதியம் 3.30 மணியளவில் நீதிமன்றத்தில் மீண்டும் ஆஜர்படுத்த வேண்டும் எனவும் உத்தரவிட்டார். இதையடுத்து பலத்த பாதுகாப்புடன் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள பயணியர் விடுதிக்கு விசாரணைக்காக மதியழகன் அழைத்து செல்லப்பட்டார். அங்கு அவரிடம் சிறப்பு புலனாய்வு குழுவினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
* மூன்று பிரிவுகளாக பிரிந்து விசாரணை
வடக்கு மண்டல ஐஜி அஸ்ரா கார்க் தலைமையில் 2 எஸ்பிக்கள், 1 ஏடிஎஸ்பி, 5 இன்ஸ்பெக்டர்கள் கொண்ட சிறப்பு புலனாய்வு குழுவினர் கடந்த 5ம் தேதி முதல் கரூரில் தங்கி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நேற்று 2வது நாளாக உள்ளூர் டிவி சேனல்களின் உரிமையாளர்கள் 3 பேரிடம் காலை 10 மணி முதல் பிற்பகல் 12மணி வரை விசாரணை நடந்தது. இந்நிலையில் 3 குழுக்களாக பிரிந்து, அதில் ஒரு குழுவினர் கரூர் பயணியர் மாளிகையிலும், மற்றொரு குழுவினர் கலெக்டர் அலுவலகம் அருகே பொதுப்பணித்துறை திட்ட அலுவலகத்திலும், மற்றொரு குழுவினர் கரூர் புகளூரில் உள்ள டிஎன்பிஎல் ஆலை வளாகத்தில் உள்ள ஒரு அலுவலகத்திலும் தங்கி விசாரணையை மேற்கொண்டுள்ளனர்.
* ஆம்புலன்ஸ் டிரைவரை தாக்கிய தவெக மாவட்ட செயலாளர் கைது
விஜய் பிரசாரத்தில் உயிருக்கு போராடியவர்களையும், காயமடைந்தவர்களையும் மீட்க செல்ல வந்த ஆம்புலன்ஸ் டிரைவர்களை தவெகவினர் தாக்கினர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிந்து, தவெக பிரமுகர் மணிகண்டனை கைது செய்தனர். இந்நிலையில் இதே வழக்கில், சேலம் கிழக்கு மாவட்ட தவெக செயலாளர் வெங்கடேசன் மீது கரூர் டவுன் போலீசார் வழக்கு பதிந்து தேடி வந்த நிலையில் நேற்று மதியம் சேலத்தில் வைத்து அவரை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.
* 450 கிலோ செருப்புகள்
நெரிசல் ஏற்பட்ட வேலுச்சாமிபுரத்தில் சிதறிக்கிடந்த செருப்புகள் விசாரணைக்காக அகற்றப்படாமல் இருந்தது. இந்நிலையில் அந்த செருப்புகளை அகற்றும் பணி மாநகராட்சி சார்பில் தொடர்ந்து நடந்து வந்தது. இதில் நேற்று வரை அகற்றப்பட்ட செருப்புகளின் எடை மொத்தம் 450 கிலோ என்று மாநகராட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டது.