விஜய் கூட்ட நெரிசலில் 41 பேர் பலி கரூர் மாநகர தவெக பொறுப்பாளரும் கைது: விடிய விடிய போலீஸ் விசாரணை; புஸ்ஸி ஆனந்த், நிர்மல் குமாரை கைது செய்ய தீவிரம்
கரூர்: கரூரில் விஜய் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியான சம்பவம் தொடர்பாக மாவட்ட செயலாளர் மதியழகன் கைது செய்யப்பட்ட நிலையில், நேற்றுமுன்தினம் நள்ளிரவில் மாநகர பொறுப்பாளர் பவுன்ராஜ் அதிரடியாக கைது செய்யப்பட்டார். அவர்களிடம் போலீசார் விடிய விடிய விசாரணை நடத்தினர். பொது செயலாளர் புஸ்ஸி ஆனந்த், இணை செயலாளர் நிர்மல்குமார் ஆகிய 2 பேரையும் கைது செய்ய தனிப்படை போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர்.
கரூர் வேலுச்சாமிபுரத்தில் கடந்த 27ம் தேதி தவெக தலைவர் விஜய் பிரசாரம் மேற்கொண்டார்.
அப்போது ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 18 பெண்கள், 13 ஆண்கள், 5 ஆண் குழந்தைகள், 5 பெண் குழந்தைகள் என மொத்தம் 41 பேர் உயிரிழந்தனர். இந்த கூட்ட நெரிசலில் காயமடைந்த 110 பேர்களில் 104 பேர் குணமடைந்து அவர்களுடைய வீடுகளுக்கு திரும்பியுள்ளனர். மீதமுள்ளவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் தொடர்பாக கரூர் டவுன் போலீசார், தவெக பொது செயலாளர் புஸ்ஸி ஆனந்த், இணை செயலாளர் நிர்மல்குமார், கரூர் மேற்கு மாவட்ட செயலாளர் மதியழகன், மத்திய மாநகர பொறுப்பாளர் பவுன்ராஜ் உள்ளிட்டோர் மீது மரணத்திற்கு உடந்தையாக இருத்தல் உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். இதில் மதியழகன் முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளார். அவரை தனிப்படை போலீசார் தேடி வந்தனர்.
இந்நிலையில் நேற்றுமுன்தினம் இரவு திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறையில் உறவினர் வீட்டில் பதுங்கி இருந்த மதியழகனை தனிப்படை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். அதேபோல் கரூர் வெங்கமேட்டை சேர்ந்த மத்திய மாநகர பொறுப்பாளர் பவுன்ராஜ் என்பவரையும் நேற்றுமுன்தினம் நள்ளிரவில் கைது செய்தனர். இந்த வழக்கில் கைதான2 பேரையும் நேற்று அதிகாலை 2.30 மணி அளவில் கரூர் டவுன் காவல் நிலையத்திற்கு போலீசார் அழைத்து வந்தனர். பின்னர் அங்கு எஸ்பி ஜோஸ் தங்கையா மற்றும் டிஎஸ்பி செல்வராஜ் ஆகியோர் இருவரிடமும் விசாரணை நடத்தினர். காலை 8 மணிவரை விசாரணை நீடித்தது. காவல் நிலையத்தை சுற்றி 50க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இதேபோல் தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், இணை செயலாளர் நிர்மல்குமார் ஆகிய 2 பேரையும் கைது செய்ய போலீசார் தீவிரம் காட்டி வருவதாக கூறப்படுகிறது.
* மதியழகனை மனைவியிடம் காட்டிய போலீஸ்
தவெக மாவட்ட செயலாளர் மதியழகன் கடந்த 3 நாட்களாக தலைமறைவாக இருந்தார். நேற்றுமுன்தினம் இரவு அவரது மனைவி தனது கணவர் உயிருக்கு ஆபத்து உள்ளது. அஜித்குமார் போல் மற்றொரு சம்பவம் நடந்துவிடக்கூடாது என சமூக வலைதளங்களில் பேட்டியளித்தார். இந்நிலையில் திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறையில் மதியழகனை கைது செய்த தனிப்படை போலீசார், நள்ளிரவு அவரது வீட்டுக்கு அழைத்து சென்று அவரது மனைவியிடம் காட்டினர். பின்னர் மதியழகன் உடல் நலத்துடன் நன்றாக இருப்பதாக எழுதி மனைவியிடம் கையெழுத்து வாங்கிக்கொண்டு பின்னர் அவரை காவல் நிலையத்துக்கு அழைத்து வந்தனர்.
* கரூரிலும் மின்சாரத்தை நிறுத்த தவெகவே கோரிக்கை
கரூரில் விஜய் பிரசாரத்தின் போது மின்சாரம் நிறுத்தப்பட்டதாக புகார் கூறப்பட்டது. ஆனால் மின் விநியோகத்தை நிறுத்த தவெகவே கோரிக்கை வைத்தது இப்போது அம்பலமாகி உள்ளது. கடந்த 26ம் தேதி கரூர் மேற்கு மாவட்ட தவெக செயலாளர் மதியழகன், கரூர் மின்வாரிய மேற்பார்வை பொறியாளருக்கு அனுப்பியிருந்த கோரிக்கை மனுவில், தவெக தலைவர் விஜய் வரும் 27ம் தேதி (சனிக்கிழமை) கரூர் வேலுச்சாமிபுரத்தில் உரையாற்ற உள்ளார். இந்த நிகழ்ச்சிக்கு காவல்துறை அனுமதியுடன் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வேலுச்சாமிபுரம் நெரிசலான பகுதி என்பதாலும், மக்கள் கூட்டம் அதிகமாக வரும் என்பதாலும் விஜய் பேசும் குறிப்பிட்ட நேரம் மட்டும் மின்சாரத்தை நிறுத்தம் செய்து தருமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார். இந்த மனு தற்போது சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.
* தவெகவினரை அனுமதிக்க மாட்டோம்; மக்கள் ஆவேசம்
கூட்ட நெரிசல் ஏற்பட்ட நாள் முதல் இன்று வரை தவெக நிர்வாகிகள் யாரும் அரசு மருத்துவமனைக்கு வரவில்லை. உள்ளூர் நிர்வாகிகள் தலைமறைவாகி விட்டனர். கரூர் மேற்கு மாவட்ட செயலாளர் மதியழகன் அலுவலகம் பூட்டியே கிடக்கிறது. கரூருக்கு அனைத்து அரசியல் கட்சியினரும் நேரில் வந்து குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறி விட்டு சென்ற நிலையில், விஜய் கட்சியினர் மட்டும் வராதது பாதிக்கப்பட்ட மக்களை ஆவேசமடைய வைத்துள்ளது. சொந்த கட்சியினர் உயிரை விட்டிருக்கின்றனர். இறுதி சடங்குக்கோ, ஆறுதல் கூறவோ விஜய் கட்சியை சேர்ந்த ஒரு நிர்வாகி கூட வரவில்லை. இனியும் வர வேண்டாம். வந்தால் அவர்களை அனுமதிக்க மாட்டோம் என்று மக்கள் ஆவேசமாக கூறினர்.
* ஆனந்த், நிர்மல்குமார் முன்ஜாமீன் கோரி மனு
2வது குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ள தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தனக்கு முன்ஜாமீன் கோரி, ஐகோர்ட் மதுரை கிளையில் மனு தாக்கல் செய்துள்ளார். மனுவில், ‘‘கரூர் சம்பவத்திற்கும், எனக்கும் சம்பந்தம் இல்லை. என்னை இந்த வழக்கில் தவறாக போலீசார் சேர்த்துள்ளனர். மாவட்ட எஸ்பி விசாலமான இடத்தை கொடுத்திருந்தால் கூட்ட நெரிசல் ஏற்பட்டிருக்காது. கூட்டத்தில் சிலர் புகுந்து குழப்பத்தை ஏற்படுத்தியதால், கூட்டத்திற்கு வந்தவர்களிடையே நெரிசல் உருவானது. இந்த சம்பவத்தில் என்னை அரசியல்ரீதியாக பழிவாங்கும் வகையில் வழக்கில் சேர்த்துள்ளனர். நான் இங்கு நிரந்தரமாக குடியிருப்பதால், தப்பி ஓட மாட்டேன். என்னை போலீசார் கைது செய்தால், எனது வழக்கமான பணிகள் பாதிக்கப்படும்.
இதனால் எனக்கு ஈடு செய்ய முடியாத இழப்பு ஏற்படும். நான் மற்றும் எனது குடும்பத்தினரின், கவுரவம் மற்றும் மரியாதை சமூகத்தில் பாதிக்கும். நீதிமன்றம் பிறப்பிக்கும் எந்த நிபந்தனையையும் பின்பற்ற தயாராக உள்ளேன். என் மீது வேறு எந்த வழக்கும் இல்லை. நீதிமன்றத்திற்கு தேவைப்படும்போது ஆஜராக தயாராக உள்ளேன். எனவே, எனக்கு இந்த வழக்கில் முன்ஜாமீன் வழங்க வேண்டும்’’ என கூறியுள்ளார். இதேபோல் இணைச்செயலாளர் நிர்மல்குமார் தரப்பிலும் முன்ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனு வரும் 3ம் தேதி ஐகோர்ட் கிளை விடுமுறை கால அமர்வில் விசாரணைக்கு வரவுள்ளது.
* 15 நாள் காவலில் சிறையில் அடைப்பு
கைது செய்யப்பட்ட கரூர் மேற்கு மாவட்ட தவெக செயலாளர் மதியழகன், மத்திய மாநகர பொறுப்பாளர் பவுன்ராஜ் ஆகியோர் கரூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, நீதிபதி பரத்குமார் உத்தரவின்படி 15 நாள் காவலில் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். மாவட்ட செயலாளர் மதியழகனை 15 நாள் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டதையடுத்து, அவரை போலீசார் சிறைக்கு அழைத்து சென்றதை பார்த்து மனைவி கதறி அழுதார்.