மதுரை: கரூரில் விஜய் பிரசார நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த நிலையில், அவரை விமர்சித்து ‘‘தமிழகத்தின் தவிர்க்க வேண்டிய துயரம் விஜய்’’ என மதுரையில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்களால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கரூரில் தவெக தலைவர், நடிகர் விஜய் கடந்த 27ம் தேதி பிரசாரம் செய்தபோது, நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. மேலும், பலியானோரின் உறவினர்களுக்கு ஆறுதல் தெரிவிக்காமல் விஜய் சென்னைக்கு சென்றது பொதுமக்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் மதுரையில், விஜயை விமர்சித்து ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதில், ‘தமிழகத்தின் தவிர்க்க வேண்டிய துயரம் விஜய்’ என்னும் தலைப்பின் கீழ் நெரிசலில் பலியான அனைவரின் படங்களும் இடம்பெற்றுள்ளன. அதற்கு கீழே, ‘யார் முகம் பார்க்க காத்திருந்தேனோ, யாரை முதல்வராக்க உழைத்து, நசுங்கி, மூச்சடைத்து உயிர் துறந்தேனோ, அவரே என் முகம் பார்க்க வரவில்லையே!....’ என்றும் அதன் கீழ் மதுரை வழக்கறிஞர்கள் மற்றும் சட்டக்கல்லூரி மாணவர்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது. மதுரை முழுவதும் ஒட்டப்பட்டுள்ள இந்த போஸ்டர்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.