நாகப்பட்டினம்: கரூரில் நடந்த பிரசார கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தது தொடர்பாக தவெக தலைவர் விஜய்யை கைது செய்ய வலியுறுத்தி நாகப்பட்டினம் அருகே பிரதாபராமபுரம் கிராமத்தில் சுவரொட்டிகளை சிலர் ஒட்டிக்கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த தவெக நிர்வாகிகள் போஸ்டர் ஒட்டிய நபரை வீடியோ எடுத்து, மிரட்டி யார் ஒட்டசொன்னது என கேள்வி எழுப்பினர். அப்போது எடுக்கப்பட்ட வீடியோவை சமூக வலைதளங்களில் பரப்பினர். இதைத்தொடர்ந்து சுவரொட்டி ஒட்டிய வேளாங்கண்ணி பகுதியை சேர்ந்த பரத்ராஜ்(30), தன்னை மிரட்டியதாக தவெக நிர்வாகிகள் மீது கீழையூர் போலீசில் கடந்த 29ம் தேதி இரவு புகார் அளித்தார். இந்நிலையில் பரத்ராஜ் வேளாங்கண்ணி பகுதியில் உள்ள கீற்றுக்கொட்டகையில் நேற்று முன்தினம் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இது குறித்து வேளாங்கண்ணி போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தினர். இதையடுத்து, பரத்ராஜை வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்ட தவெக கீழையூர் தெற்கு ஒன்றிய செயலாளர் திவாகர் உட்பட அக்கட்சியினர் 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிந்து அவர்களை தேடி வருகின்றனர்.
+
Advertisement