சென்னை: ஆவடியில் காங்கிரஸ் சார்பில் பாஜ வாக்குத்திருட்டில் ஈடுபடுவதாக குற்றச்சாட்டை முன்வைத்து கையெழுத்து இயக்கம் தொடங்கப்பட்டது. இந்த இயக்கத்தில் திருவள்ளூர் காங்கிரஸ் எம்பி சசிகாந்த் செந்தில் கலந்து கொண்டார். இதற்காக வருகை தந்த அவர் ஆவடியில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அத்துடன் கையெழுத்து இயக்கத்தை தொடங்கி வைத்து பொதுமக்கள், வணிகர்களிடம் வாக்கு திருட்டு குறித்து எடுத்துரைத்து கையெழுத்து பெற்றார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், தேர்தல் ஆணையத்தின் ஒருதலைபட்சமான செயலை கண்டித்தும், பாஜவிற்கு ஆதரவாக செயல்படும் போக்கினை கண்டித்தும் இந்த கையெழுத்திய இயக்கம் இந்தியா முழுவதும் நடத்தப்படுகிறது. தவெக தலைவர் விஜய் தன்னுடைய எண்ணத்தை வெளியில் வந்து கூறிக்கொண்டு இருக்கிறார். அவர் எந்த கொள்கையை சார்ந்து இருக்கிறார் என்பதில் தெளிவில்லை. அதுமட்டுமின்றி விஜய்யின் பேச்சில் ஆரம்பத்திலிருந்து அரசியல் மாண்பு என்பது இல்லை. இதனை தமிழக மக்கள் ஏற்க மாட்டார்கள் என்று கூறினார்.