லண்டனில் கிளப்பில் பிறந்தநாள் கொண்டாட்டம்; லலித் மோடியுடன் சேர்ந்து விஜய் மல்லையா கும்மாளம்: தேடப்படும் குற்றவாளிகளின் சொகுசு வாழ்க்கை
லண்டன்: இந்தியாவில் நிதி மோசடி புகார்களில் சிக்கி லண்டனில் தஞ்சம் புகுந்துள்ள லலித் மோடி, தனது பிறந்தநாளை விஜய் மல்லையாவுடன் ஆடம்பரமாகக் கொண்டாடிய வீடியோ வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் முன்னாள் தலைவரான லலித் மோடி மற்றும் வங்கிக் கடன் மோசடி வழக்கில் தேடப்படும் தொழிலதிபர் விஜய் மல்லையா ஆகியோர் மீது இந்தியாவில் பல்வேறு நிதி மோசடி வழக்குகள் நிலுவையில் உள்ளன. சட்ட நடவடிக்கைகளுக்குப் பயந்து இருவரும் லண்டனில் தஞ்சம் புகுந்துள்ள நிலையில், ஏற்கனவே கடந்த ஜூலை மாதம் இவர்கள் இருவரும் ஒன்றாகச் சேர்ந்து பாட்டுப் பாடிய வீடியோ வெளியாகிப் பெரும் விமர்சனங்களை எழுப்பியிருந்தது.
நெருங்கிய நண்பர்களான இவர்கள், இந்திய அதிகாரிகளின் பிடியில் சிக்காமல் வெளிநாட்டில் இருந்தபடியே தொடர்ந்து சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில், லலித் மோடி தனது 63வது பிறந்தநாளை லண்டனின் மேஃபேர் பகுதியில் உள்ள ‘மேடாக்ஸ்’ என்ற மிக உயர்தரமான கிளப்பில் வெகு விமரிசையாகக் கொண்டாடினார். இந்த விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட விஜய் மல்லையா, லலித் மோடியுடன் இணைந்து உற்சாகமாக நடனமாடினார். இதுகுறித்த வீடியோவை சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ள லலித் மோடி, விழாவை ஏற்பாடு செய்த தனது தோழி ரீமா பூரிக்கு நன்றியைத் தெரிவித்துள்ளார். அந்த வீடியோவில் ‘புன்னகை மன்னன் லலித் மோடிக்குப் பிறந்தநாள் வாழ்த்துக்கள்’ என்ற பாடல் ஒலிக்க, அவர் கேக் வெட்டிக் கொண்டாடுகிறார்.
‘எனது இனிய நண்பர் மல்லையா ஆரம்பக்காலம் தொட்டே எனக்கு ஆதரவாக இருந்துள்ளார்’ என்று லலித் மோடி தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார். தேடப்படும் குற்றவாளிகள் இவ்வளவு ஆடம்பரமாகக் கொண்டாட்டத்தில் ஈடுபட்டிருப்பது இணையத்தில் பேசுபொருளாகியுள்ளது.

