விஜய் கூட்டத்தில் பலியானோர் எண்ணிக்கை 40 ஆனது ஒரு நபர் ஆணையம் விசாரணை: புஸ்ஸி ஆனந்த் உள்பட 3 பேர் மீது வழக்கு
கரூர்: கரூரில் நடந்த விஜய் பிரசார கூட்டத்தில் நெரிசலில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 40 ஆனது. இதுதொடர்பாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அமைத்த ஒரு நபர் ஆணையம் விசாரணையை தொடங்கியுள்ளது. இதனிடையே உயிரிழப்பு தொடர்பாக தவெக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் உள்பட 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. வருகிற 2026 சட்டமன்ற தேர்தலுக்காக தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் மக்கள் சந்திப்பு பிரசாரத்தை கடந்த 13ம் தேதி முதல் ஒவ்வொரு சனிக்கிழமையும் நடத்துவதாக அறிவித்தார்.
அதன்படி கடந்த 13ம் தேதி திருச்சியில் பிரசாரத்தை தொடங்கினார். 3வது சனிக்கிழமையான நேற்று முன்தினம் நாமக்கல் மற்றும் கரூரில் விஜய் பிரசாரம் செய்தார். கரூர் பிரசாரத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 8 குழந்தைகள், 16 பெண்கள் உள்பட 39 பேர் உயிரிழந்தனர். மேலும், அரசு மருத்துவமனையில் 50 பேரும், தனியார் மருத்துவமனையில் 60 பேர் என 110 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதில் 30 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளனர். இந்நிலையில் நேற்று 31 வயது நபர் ஒருவர் உயிரிழந்தார். இதனால் பலி எண்ணிக்கை 40 ஆக உயர்ந்தது. தகவலறிந்த முதலமைச்சர், உடனடியாக நேற்று முன்தினம் இரவே சென்னை, தலைமைச் செயலகத்திற்கு சென்று, அமைச்சர்கள், உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார்.
மருத்துவ சிகிச்சைக்கான சிறப்பு ஏற்பாடுகளை துரிதப்படுத்த மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி மற்றும் திருச்சி, சேலம் மற்றும் திண்டுக்கல் மாவட்ட ஆட்சித் தலைவர்கள் மருத்துவக் குழுக்களுடனும், காவல் துறை தலைமை இயக்குநர் மற்றும் சட்டம் ஒழுங்கு கூடுதல் காவல் துறை தலைமை இயக்குநர் ஆகியோரை அனுப்பிவைத்து போர் கால நடவடிக்கை மேற்கொண்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய உதவிகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தினார்.
அதைத் தொடர்ந்து, முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று முன்தினம் நள்ளிரவே கரூர் மாவட்டத்திற்கு நேரில் சென்றார். நேற்று அதிகாலையில், கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், அமைச்சர்கள், மாவட்ட ஆட்சித் தலைவர்கள், மருத்துவ அலுவலர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார். சிகிச்சை பெற்று வருபவர்களின் விவரங்களையும், தேவைப்படும் உதவிகள் குறித்தும் மருத்துவர்களிடம் முதல்வர் கேட்டறிந்தார்.
மேலும், பாதிக்கப்பட்டவர்கள் ஒவ்வொருவரின் நிலை குறித்து கேட்டறிந்து, தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்றுவருபவர்களைத் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். உயிரிழப்புகள் ஏற்படாதவாறு கவனத்துடன் செயல்பட வேண்டும் என்று அறிவுறுத்தினார். மேலும், அருகில் உள்ள மாவட்டங்களிலிருந்து வரும் மருத்துவர்கள், செவிலியர்கள் தேவையான மருத்துவ உபகரணங்களுடன் வரவழைத்துப்பட்டு, அவர்களுடன் ஒருங்கிணைந்து தீவிர சிகிச்சைகள் மேற்கொள்ள வேண்டும் என்று மருத்துவர்களுக்கு அறிவுறுத்தினார.
பின்னர், கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருபவர்களை நேரில் சந்தித்து அவர்களுக்கு அளிக்கப்பட்டுவரும் சிகிச்சைகள் குறித்து கேட்டறிந்தார். கூட்ட நெரிசலில், உயிரிழந்தவர்களின் உடலுக்கு மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தி, அவர்களின் குடும்பத்தினருக்கும் ஆறுதல் கூறினார். மேலும், முதலமைச்சர், அமராவதி மருத்துவமனைக்கு நேரில் சென்று அங்கு சிகிச்சை பெற்றுவருபவர்களிடம் உடல் நலம் குறித்து விசாரித்தார்.
இந்நிலையில் பலியான 40 பேரின் உடல்களும் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. உடல்களை பார்த்து உறவினர்கள் கதறி அழுதனர். 40 பேர் உடல்களும் அரசு ஏற்பாடு செய்திருந்த ஆம்புலன்ஸ்களில் அவர்களது வீடுகளுக்கு கொண்டு செல்லப்பட்டது. இந்நிலையில், உயிரிழப்பு தொடர்பாக, கரூர் போலீசார் தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், இணை பொதுச்செயலாளர் சிடி நிர்மல்குமார்,
கரூர் மாவட்ட செயலாளர் மதியழகன் ஆகியோர் மீது பிஎன்எஸ் சட்ட பிரிவு கொலைக்கு சமமல்லாத குற்றமற்ற கொலைக்கான தண்டனை(105), குற்றமற்ற கொலை செய்ய முயற்சி (110), மனித உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் அவசர, அலட்சிய செயல்களுக்கு தண்டனை(125),, பொது அதிகாரியின் உத்தரவுக்கு கீழ்ப்படியாமை(223), பொதுச் சொத்துகளுக்கு சேதம் விளைவித்தல்(டிஎன்பிபிடிஎல் சட்டம் பிரிவு-3) ஆகிய 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
இந்த வழக்கில் தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் 2வது குற்றவாளியாகவும், முதன்மை குற்றவாளியாக கரூர் மாவட்ட செயலாளர் மதியழகன், 3வது குற்றவாளியாக நிர்மல்குமார் சேர்க்கப்பட்டுள்ளார். இவர்கள் மீது ஜாமீனில் வெளியே வர முடியாத பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விசாரணை முடிவில் மேலும் சில தவெக நிர்வாகிகள் வழக்கில் சேர்க்கப்பட அதிக வாய்ப்புள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
இந்த நிலையில், கரூர் துயர சம்பவம் குறித்து முறையான விசாரணை மேற்கொண்டு அரசுக்கு அறிக்கை அளிக்க ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒரு நபர் விசாரணை ஆணையத்தை உடனடியாக அமைத்து முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார். நேற்று மாலை 5 மணியளவில் சம்பவம் நடந்த பகுதியான வேலுச்சாமிபுரத்தில் நீதியரசர் அருணா ஜெகதீசன் தலைமயிலான அதிகாரிகள் ஆய்வு செய்தனர். மேலும், சம்பவம் குறித்து காவல் துறையினரிடம் கேட்டறிந்தார்.
அப்போது அங்கு வந்த பொதுமக்களில் சிலர், அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை வைத்தனர். இதற்கு பதிலளித்த அருணா ஜெகதீசன்,‘‘குற்றச்சாட்டுகளை மனுவாக தயார் செய்து அலுவலகத்திற்கு அனுப்பி வையுங்கள். எல்லோருடைய குறைகளையும் கேட்க வேண்டும். ஏனென்றால் குறைபாடுகளை களைந்து திரும்பவும் இந்த சம்பவம் நடக்க கூடாது,’’ என்றார். அப்போது அவரிடம் துரைமாடசாமி என்பவர் கூறுகையில், ‘‘இந்த இடத்தில் அப்படியே (மரத்தை காண்பிக்கிறார்) தொங்குகிறார்கள்.
பெண்கள், குழந்தைகளை நாங்கள் தான் தூக்கி அழைத்து சென்றோம். அப்போது தவெக கட்சியினர் தான் மின்சாரத்தை நிறுத்துங்கள் என கூச்சலிட்டனர். அதற்கு எங்களிடம் ரெக்கார்ட் உள்ளது. அதனால்தான் மின்சாரம் நிறுத்தப்பட்டது. அதற்காக தான் எங்கு பார்த்தாலும் தொங்கினார்கள். அய்யய்யோ அங்கங்கே தொங்குகிறார்கள். மின்சாரத்தை நிறுத்துங்கள் என்றனர். எல்லாத்தையும் பிடித்து தொங்குகின்றனர். அந்த மரத்தை பாருங்கள். என்ன பாடு ஆகியுள்ளது. அந்த மரத்திற்கே இந்த பாடு என்றால் மற்ற இடங்களை நினைத்து பாருங்கள் என்றார்.
அதற்கு ஓய்வு அருணா ஜெகதீசன் பதிலளிக்கையில்,‘‘குறைபாடுகளை எப்படி களையலாம், எப்படி நிவர்த்தி செய்வது என்பதற்கு தான் ஆணையம். இப்போது நாம் யார் மீதும் குறை சொல்வதற்கு இல்லை. மீண்டும் இந்த சம்பவம் நடக்க கூடாது’’ என்றார். அப்போது துரைமாடசாமி பேசுகையில், ‘‘அதிமுக கூட்டம் நடத்திய போது ஒரு சின்ன பிரச்னை நடந்ததா. அவராகவே வந்தாரு, கூட்டத்தை முடிச்சிட்டு போனாரு.
இவங்க குரங்கு குட்டி மாதிரி தாவினா என்னங்க பண்றது. சின்ன பசங்க எல்லாம் மாறி மாறி தாவுகிறார்கள் என்று சொன்னார். அப்போது, அங்கிருந்த மற்றொரு நபர் இந்த இடத்தை கொடுத்தது தப்பு தானே’’ என்றார். அதற்கு வாக்குவாதம் கூடாது. அவர் தரப்பை கூறுகிறார். உங்கள் தரப்பை நீங்க சொல்லுங்கள் என்று அருணா ஜெகதீசன் தடுத்து நிறுத்தினார். பின்னர் லைட் ஹவுஸ் போன்ற இடங்களில் இடம் கேட்டார்கள். பின்னர் வேண்டாம் என்றனர் என தெரிவித்தார்.
இதற்கு பதில் அளித்த அருணா ஜெகதீசன், உங்கள் தரப்பு வாதத்தை மனுவாக எழுதி ஆணையத்துக்கு அனுப்புங்கள் என்றார். இதற்கு பதில் அளித்த துரைமாடசாமி, எல்லோரும் ஆட்சிக்கு வர வேண்டும் என்று நாம் நினைக்கின்றோம். அதற்காக இப்படி சின்ன பசங்களை கொண்டு வந்து தொங்கவிட்டு அத்தனை பேரை பலி கொடுத்தது எவ்வளவு சங்கடமாக இருக்கும் என தெரிவித்தார்.
இதற்கு இரண்டு பேரையும் மனுவாக ஆணையத்துக்கு எழுதி அனுப்புங்கள் என்று அருணா ஜெகதீசன் கூறி விட்டு சென்றார். தொடர்ந்து கரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் உள்ள பிணவறையை நேரில் பார்வையிட்டார். தொடர்ந்து உள்நோயாளிகளாக சிகிச்சை பெற்று வருபர்களிடம் விசாரணை நடத்தினார். பின்னர் டாக்டர்கள் குழுவிடம் சில விவரங்களை கேட்டறிந்தார்.
* போலீசாரின் கைதுக்கு பயந்து புஸ்ஸி ஆனந்த் தலைமறைவு?
நடிகர் விஜய் பிரச்சார கூட்ட நெரிசலில் இறந்தது தொடர்பாக நிகழ்ச்சி ஏற்பட்டாளரான தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், கரூர் மாவட்ட செயலாளர் மதியழகன், இணை பொதுச்செயலாளர் சிடி.நிர்மல்குமார் ஆகியோர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனால் போலீசார் எந்த நேரத்திலும் அவர்களை கைது செய்யும் நிலை உள்ளது.
இதனால் தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மற்றும் கரூர் மாவட்ட செயலாளர் மதியழகன் ஆகியோர் தலைமறைவானதாக கூறப்படுகிறது. அவர்களை நேற்று முன்தினம் இரவு முதல் தொடர்பு கொள்ள முடியவில்லை என்ற தவெக மாநில நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். இருந்தாலும் அவர்களிடம் சட்ட விதிகளின் படி முறையாக போலீசார் விசாரணை நடத்த முடிவு செய்துள்ளனர்.