சென்னை: தமிழக முதல்வருக்கு சவால் விடுத்துள்ள த.வெ.க. தலைவர் விஜய்க்கு திமுக வர்த்தக அணி மாநில செயலாளர் காசிமுத்து மாணிக்கம் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: மிசாவையே வலிய சென்று ஏற்றுக்கொண்டவர் தளபதி மு.க.ஸ்டாலின். மணிக்கணிக்கில் கூட தாங்காது, ஆனால் மாத கணக்கில் சிறையை தாண்டியவர் எங்கள் தளபதி. தான் அரசியலில் இல்லை என கூறியிருந்தால் அன்றே அவர் வெளியே வந்திருப்பார். கரூரில் நிகழ்வு நடந்த ஒரு நிமிடத்தில் தமிழக வெற்றி கழகத்தை சார்ந்த ஒருவரும் அங்கு இல்லை. வேங்கைக்கு வெட்டுக்கிளி சவாலா; யானைக்கு பூனை சவாலா, புலிக்கு எலி சவாலா? எங்கள் தளபதியை எதிர்த்து சவால் விட்டவன் ஆவான் திவாலா. அறிக்கை வெளியிட்டு விட்டு அறிவாலயத்தில் ஒளிந்து கொள்வார் என தவெக கட்சியை சேர்ந்த ஆதவ் பேசுகிறார்.
ஆலிவர்ரோட்டில் தலைவரை கைது செய்யப்போகிறோம் என அரசோ, நீதிமன்றமோ தகவல் கொடுத்தா கைது செய்தது. திடீரென நள்ளிரவில் கைது. தளபதியோ, தங்கை விட்டுக்கு பெங்களூர் சென்று இருந்தார். பக்கத்திலிருந்த கனிமொழி எம்.பி. தன் தந்தையுடன் சிறை முன் தரையில் அமர்ந்து போராடினார். இதய சிகிச்சைக்காக பேஸ்மேக்கர் வைத்திருந்த முரசொலிமாறன் ஓடோடி வந்து தடுத்தார். அவர்மீது விழுந்த அடியை பொறுத்துக்கொண்டு போராடினார். வழக்கில் கைது செய்வது வேறு, கைது செய்தபின் தான் வழக்கை ஜோடித்தார்கள். 10 மேம்பாலத்தில் 9 கட்டி மீதி தொகையை அரசுக்கு திருப்பி கொடுத்தவர் தளபதி. பெங்களூரிலிருந்து நேராக நீதிபதி அசோக்குமார் விட்டுக்கே சென்று சரண்டர் ஆனவர் தளபதி. ஜெயிலுக்கு போனார்.
விடுதலை ஆனார். சிறை என்ற உடன் ஓடிப்போனவர் இல்லை எங்கள் தளபதி. சிறை என்ற உடன் ஓடோடி வந்தவர் தான் தளபதி. திமுகவில் பத்தாண்டு இருந்தேன் என்கிறார் ஆதவ். பக்கத்து வீட்டுக்கே அன்று தெரியாத ஆதவ். வள்ளலை கொலைக்காரன் என்றும், காந்தியை கோட்சே என்றும், புயல் வேக செயலன் செந்தில்பாலாஜியை ரவுடி என்றும் கூறுகிறார். நீ ரவுடி ஆனால், அண்ணன் செந்தில் பாலாஜி உழைப்பின் காலடி, தமிழின் நாலடி, உனது உறவு 41 பேர் இறந்தார்கள் என்கிறாயே, அது 91 ஆகாமல் பார்த்துக் கொண்டவர் தளபதி. அதற்கு துணையாக இருந்தவர் செந்தில் பாலாஜி. இதுபோல, பேசும் போக்கை ஆதவ் மாற்றிக் கொள்ள வேண்டும். இவ்வாறு தனது கண்டனத்தில் கூறியுள்ளார்.

