Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

விஜய் காலதாமதமாக வந்ததே கரூர் கூட்ட நெரிசலுக்கு காரணம்: உண்மை கண்டறியும் குழு தகவல்

சென்னை: கரூரில் விஜய் வருவதற்கு கால தாமதம் ஆனதால்தான் கூட்ட நெரிசல் ஏற்பட்டுள்ளதாக பெண்கள் பாதுகாப்பு மற்றும் பாலின நீதிக் கூட்டியக்கத்தின் உண்மை கண்டறியும் குழு தெரிவித்துள்ளது. பெண்கள் பாதுகாப்பு மற்றும் பாலின நீதிக் கூட்டியக்கம் சார்பில் கரூர் சம்பவத்தின் உண்மை அறியும் குழு அறிக்கையை பேராசிரியர் சரஸ்வதி, கீதா உள்ளிட்ட குழுவினர் சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் வெளியிட்டனர். அப்போது அவர்கள் கூட்டாக நிருபர்களிடம் கூறியதாவது:

தமிழக வெற்றிக் கழகத்தின் பரப்புரையின் ஒரு பகுதியாக கரூரில் செப்டம்பர் 27ம் தேதி கட்சித்தலைவர் விஜய் மேற்கொண்ட மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் (18 பெண்கள், 10 குழந்தைகள், 13 ஆண்கள்) உயிரிழந்தனர். அதிலும் கருவுற்ற பெண்களும் கூட இறந்தது அனைவருக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுபோன்ற இறப்பும் பாதிப்புகளும் இனிவரும் காலங்களில் நிகழா வண்ணம் தடுத்து விடும் நோக்குடன், கரூர் சென்று பாதிக்கப்பட்ட குடும்பங்கள், பொதுமக்கள், தொழிலாளர்கள், காவல்துறை அலுவலர்கள் மற்றும் வழக்கறிஞர்களை சந்தித்து உண்மைகளைத் திரட்டி வந்துள்ளோம்.

கரூர் கொடுந்துயர் சம்பவத்திற்கு காரணம் எவருடைய சதியோ, உள்நோக்கமோ இல்லை என்று இந்தக் குழு முழுமையாக நம்புகிறது. இந்த துயர நிகழ்விற்கு முதன்மை காரணம் தவெக தலைவர் விஜய் மிக காலதாமதமாக வந்ததே. காலை 8.45 மணிக்கு நாமக்கலில் பரப்புரையை தொடங்க வேண்டிய விஜய் சென்னையிலிருந்தே 8.45 மணிக்குதான் கிளம்பியிருக்கிறார். இதுதான் அடுத்தடுத்த தாமதத்திற்கு தொடக்கமாக இருந்துள்ளது.

விஜய் ரசிகர் கூட்டத்தை பெருமளவில் கூட்டி, கூட்டம் காட்டும் எண்ணத்தில், நாமக்கல்லில் இருந்து கரூர் வரும் வழிகளில், வேண்டுமென்றே பல இடங்களில் வண்டியை மெதுவாக இயக்கச் செய்திருப்பதாக தெரிகிறது. நாமக்கல்லில் இருந்து கரூர் பைபாஸ் அதிகபட்சம் 45 நிமிட்டத்தில் வர முடியும். அதனை தொலைவைப் பல மணி நேரம் பயணித்து வந்துள்ளார். இது கரூர் கூட்ட நெரிசலுக்கு ஒரு முக்கியமான காரணம். கரூரில் வாகனம் நிறுத்துவதற்கான வசதியுள்ள இடமாகக் கருதப்பட்ட வேலுச்சாமிபுரத்தில், ஒவ்வொரு சந்துக்குள்ளும் ஆயிரக்கணக்கான இருசக்கர வாகனங்கள் நிறுத்தப்படுவதைக் காவல்துறை தடுக்க தவறிவிட்டது.

நெறிபட்டு மூச்சுத் திணறி, தப்பிக்க சந்துக்களுக்குள் நுழைந்த மக்கள் இருசக்கர வாகனங்களால் நிலைதடுமாறி விட்டனர். பொருளாதாரத்தில் பின்தங்கிய மக்கள், தலித் மக்கள், பிற்படுத்தப்பட்ட மக்கள் அதிக எண்ணிக்கையில் கலந்துகொண்டிருக்கிறார்கள். பெண்கள், குழந்தைகள் அதிகமாகக் கூடியிருக்கிறார்கள். அந்த நாள் சனிக்கிழமை என்பதாலும், வார சம்பளம் வாங்குகின்ற நாளாக இருந்ததாலும், அன்று மாலை 5 மணிக்கு மேல் வேலை முடிகிற நேரம் என்பதாலும், பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை காலம் என்பதாலும், அந்த நேரத்தில் கூட்டம் அதிகரித்து இருக்கிறது.

விடுமுறை காலம் என்பதால் கூட்டம் பெருமளவில் கூடும் என்பதை உளவுத் துறை கணித்துக் கூறியதா? காவல் துறை அந்த கணிப்பின் அடிப்படையில் நடவடிக்கை எடுத்ததா என்ற கேள்வி எழுகிறது. உள்ளூர் மக்கள் மட்டுமின்றி வெளி மாவட்டங்களில் இருந்தும் மக்கள் கூடியதால் நெரிசல் ஏற்பட்டது. கூட்டம் அதிகரிக்க வேண்டும் என்பதற்காக காலதாமதமாகவே கூட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது, அதுவே நெரிசலுக்கும் உயிரிழப்புக்கும் காரணமாகும்.

தவெக நிர்வாகிகளும், பொறுப்பாளர்களும் எவ்விதப் பொறுப்புணர்வும், மக்கள் மீது எவ்வித அக்கறையும் இல்லாதவர்களாக நடத்தியுள்ளனர். ரசிகர் கூட்டத்தைக் காட்டிக் கட்சி நடத்தி விடலாம் என்ற எண்ணத்தில் உள்ளார்கள் என்பதை வெளிப்படுத்தியுள்ளனர். கரூர் ரவுண்டானாவில் இருந்து வலது பக்க சாலையில் விஜய் வண்டி செல்லத் தொடங்கியது. அவர்கள் கரூர் ஈரோடு சாலை பிரியும் சாலையில் இடது புறம் வந்து யூ டர்ன் போட்டுப் பேசும் இடத்திற்கு வந்திருக்க வேண்டும்.

ஆனால் விஜய் வண்டி வலது சாலையில் சென்றது, அந்த இடத்தில் நின்றிருந்த மக்கள் பின்னோக்கி நகர வேண்டியதாயிற்று, அதற்கு மேல் மேற்கிலிருந்து மக்கள் விஜயைப் பார்க்க முன்னோக்கி நகரத் தொடங்கினர், முன் நின்றிருந்த மக்கள் மூச்சுக் கூட விட முடியாமல் கூட்டத்திலிருந்து வெளியேற முயல, எதற்கும் வழியின்றி சிக்குண்டனர்.

விஜய் மீது கூட்ட நெரிசல் ஏற்பட்ட போது அவரின் கவனத்தை ஈர்ப்பதற்காகத்தான் செருப்பை தூக்கி வீசியதாக அருகில் இருந்தவர்கள் கூறுகின்றனர். கூட்டத்தில் உள்ளவர்களில் சிலர் மயங்கியப் பிறகு கவனத்தை ஈர்ப்பதற்குத்தான் செருப்பை வீசியதாக கூறுகின்றனர். காவல்துறையினர் விஜய் வரும் வரையில் யாரும் வரவில்லை எனவும், சிலர் மயங்கிப் பின்னர் தான் ஆம்புலன்ஸ் உள்ளே வந்துள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினார்.