திருச்சி: விஜய்யை பார்த்து நாங்கள் ஏன் பயப்பட வேண்டும்... எது வந்தாலும் நாங்கள் சந்திப்போம் என அமைச்சர் கே.என்.நேரு கூறியுள்ளார். திருச்சியில் அமைச்சர் கே.என்.நேரு நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டி: கரூர் சம்பவத்திற்கு திமுக தான் பொறுப்பேற்க வேண்டும் என கூறும் எடப்பாடி பழனிசாமியால் வேறு என்ன சொல்ல முடியும். தமிழகத்தில் பல்வேறு பிரச்னைகள் நடைபெற்று வருகிறது. வெள்ளம் வந்தது.
அப்போது வராத பாஜ எம்பிக்கள் குழு உடனடியாக இந்த நிகழ்வுக்கு வருவதற்கு காரணம் என்ன என்று முதல்வர் கேள்வி எழுப்பியுள்ளார். அதுமட்டுமின்றி, பாஜ கூட்டணியில் அதிமுக இருப்பதால் அதுபோன்று தான் பேசுவார். மக்கள் தெளிவாக இருக்கிறார்கள். மக்கள் புரிந்து கொண்டுள்ளார்கள். கரூர் சம்பவம் குறித்து நீதிமன்றத்தில் கூறியதுதான் உண்மை நிலைமை. கரூர் துயர சம்பவம் குறித்து உயர்நீதிமன்றம் சரியாகத்தான் கூறி இருக்கிறது.
விஜய் நேரில் வந்து பார்க்கவில்லை என பத்திரிகை மற்றும் ஊடகங்கள் கூறுகிறது. விஜய் கூட்டத்திற்கு அனுமதி வாங்கியவர்கள் மற்றும் ஒருங்கிணைப்பாளர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. நீதிமன்றம் அக்கட்சி பற்றி கூறி இருக்கிற நிலையில் அவரை (விஜய்யை) பார்த்து நாங்கள் ஏன் பயப்பட வேண்டும். பயந்து நாங்கள் என்ன செய்யப் போகிறோம். எது வந்தாலும் நாங்கள் சந்திப்போம். இவ்வாறு அவர் கூறினார்.