கரூர்: கரூர் வேலுச்சாமிபுரத்தில் கடந்த மாதம் 27ம் தேதி விஜய் பிரச்சாரம் செய்தார். அப்போது அங்கு கூடிய விஜய் ரசிகர்களும் தவெக தொண்டர்களும் அந்தப்பகுதியில் உள்ள கடைகள், கட்டிடங்கள் மீது ஏறி நின்றனர். ஏராளமானோர் ஏறி நின்றதால் அந்த பகுதியில் இருந்த கடைகளின் கூரைகள் மற்றும் கட்டிடங்கள் உடைந்து நொறுங்கி சேதமடைந்தன. கடைகளை திறப்பதற்கு போலீசார் அனுமதி அளித்த போதிலும் கட்டிடங்கள், கூரைகள், ஷட்டர்கள் சேதமடைந்தள்ளதால் கடந்த எட்டு நாட்களாக கடைகளை திறக்க முடியாமல் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக கடை உரிமையாளர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
இதுகுறித்து அப்பகுதியில் உள்ள ஒரு கடையின் உரிமையாளர் ஜெயமணி கூறியதாவது: கடந்த வாரம் நிகழ்ந்த அந்த விபத்துக்குப் பிறகு எங்கள் கடைகளை திறக்க முடியாமல் பெரும் சிரமம் அனுபவித்து வருகிறோம். கடைகள் மூடப்பட்டிருப்பதால் அதை வாடகைக்கு எடுத்துள்ளவர்களின் வருமானமும், எங்களுடைய வாழ்வாதாரமும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. எங்கள் கடையை சுற்றி உள்ள பகுதி இன்னும் முழுமையாக சுத்தம் செய்யப்படவில்லை. சுற்றியுள்ள குப்பைகளை அகற்றி, கடைகளை திறப்பதற்கு தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஏற்பட்ட சேதங்களுக்கு உரிய இழப்பீடுகளும் வழங்க வேண்டும். மெடிக்கல் ஷாப் நடத்தும் ஆனந்த்: சென்ற வாரம் சனிக்கிழமை காலை முதல் கடை மூடிய நிலையில் தான் உள்ளது. திறப்பதற்கான அனுமதி வழங்கப்பட்டிருந்தாலும், கடை முன்பு குப்பைகள், கொடி, செருப்பு போன்றவை பெருமளவில் காணப்படுகின்றன. இதனால் பொருளாதார ரீதியாகவும், மனதளவிலும் பெரும் பாதிப்பை எதிர்கொண்டுள்ளோம். மிகப்பெரிய நஷ்டம் ஏற்பட்டுள்ளது.
எனவே அரசு உடனடியாக தலையிட்டு கடை திறப்பதற்கும், பாதிக்கப்பட்ட பொருட்களுக்கு உரிய இழப்பீடு வழங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். கடை உரிமையாளர் சரஸ்வதி: கடையை திறக்க முடியாததால் வியாபாரம் முடங்கியுள்ளது. கடையை திறக்க இன்னும் மூன்று நாட்கள் ஆகும் என கூறப்படுகிறது. இதனால் எங்களுடைய பொருளாதார நிலை மிகுந்த பாதிப்படைந்துள்ளது.
4 லட்ச ரூபாய்க்கும் மேல் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. எங்களுக்கு அரசு உதவி செய்தாலும் சரி அல்லது கூட்டத்தை ஏற்பாடு செய்த தவெக அமைப்பு உதவி செய்தாலும் சரி, எங்களுக்கு உரிய நஷ்டஈடு வழங்க வேண்டும். அரிசி கடை நடத்தி வரும் கலைவாணன்: கூட்ட நெரிசல் ஏற்பட்ட பிறகு எங்கள் பகுதியில் உள்ள நான்கு கடைகளை இதுவரை திறக்க முடியவில்லை.
நாங்கள் மிகுந்த சிரமத்திலும் மனவேதனையிலும் உள்ளோம். கூட்ட நெரிசலின் போது முன் பகுதியில் இருந்த கடைகள் அனைத்தும் சேதமடைந்துள்ளன. இப்போது என்ன செய்வது என்று தெரியவில்லை. மாவட்ட நிர்வாகமும் தமிழக அரசும் இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுத்து, பாதிக்கப்பட்ட கடைகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும். எங்கள் வாழ்வாதாரம் பாதுகாக்கப்பட வேண்டும்.