கரூர் அரசு மருத்துவமனையில் இறந்தவர்கள் உடலுக்கு நேற்று அஞ்சலி செலுத்திய பின் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நிருபர்களுக்கு அளித்த பேட்டி: தொண்டர்களின் பாதுகாப்பை கட்சி தலைவர் கூர்ந்து கவனிக்க வேண்டும். ஒரு நேரத்தை குறிப்பிட்டால் அந்த நேரத்திலேயே பரப்புரையை நடத்த வேண்டும். பல மணி நேரம் கழித்து வந்து பரப்புரை மேற்கொள்ளும்போது சில பிரச்னைகள் ஏற்படுகிறது.
இதை தவிர்த்து கொள்ள வேண்டும். இந்த நேரத்தில் யாரையும் குற்றம் சொல்வது பொருத்தமாக இருக்காது. தற்போது தமிழகத்தில் மட்டுமல்ல, இந்தியாவிலேயே ஒரு அரசியல் கட்சி நடத்துகிற பரப்புரையில் இவ்வளவு அதிக உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள பல அரசியல் கட்சிகளுக்கு அனுபவம் இருப்பதால் பொதுக்கூட்டம் நடத்தும் இடத்தில் தள்ளுமுள்ளு ஏற்படும் போது அதை ஒழுங்குபடுத்தி கொள்கிறார்கள்.
அதை மற்றவர்களும் கடைபிடிக்க வேண்டும். விஜய் பேசிய போது ஆம்புலன்ஸ் வந்தது பற்றி முழுமையாக விசாரிக்க வேண்டும். இனிமேல் எதிர்காலத்திலும் இப்படிப்பட்ட நிகழ்வு நடக்காமல் பார்த்து கொள்ள வேண்டும். தற்போது நடந்ததை ஒரு கொடூரமான நிகழ்வாகத்தான் நான் பார்க்கிறேன். மிக மிக வேதனையான ஒரு அதிர்ச்சியான நிகழ்வாகும். இவ்வாறு அவர் கூறினார்.