Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

விஜய்யால் எவ்வித தாக்கத்தையும் ஏற்படுத்த முடியாது; திமுக ஆட்சி கூட்டணி பலத்துடன் உள்ளது: தொல்.திருமாவளவன் எம்பி பேட்டி

மீனம்பாக்கம்: விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் சென்னை விமான நிலையத்தில் நேற்று செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி: திமுக எதிர்ப்பை மட்டுமே மூலதனமாக கொண்டு ஆட்சியை கைப்பற்றிவிடலாம் என விஜய் கருதுகிறார். திமுக அரசு மீதான விமர்சனங்களுக்கு, உரிய நேரத்தில் திமுக பதிலை தெரிவிக்கும். விஜய் வரவால், தமிழகத்தில் ஆட்சி மாற்றம் நிகழும் என்ற மாயத்தோற்றத்தை சிலர் உருவாக்குகின்றனர். இதில் ஊடகங்களும் பெரும்பங்கு வகிக்கிறது.

எனினும், தமிழ்நாட்டில் திமுக தனித்து ஆட்சி நடத்தவில்லை. கூட்டணி பலத்துடன் ஆட்சியில் இருக்கிறது. அக்கூட்டணி இன்னும் வலுவாக, கட்டுப்பாட்டுடன் இயங்கி வருகிறது. அதே கூட்டணி பலத்துடன் வரும் சட்டமன்றத் தேர்தலையும் சந்திக்கிறது. எங்களுடைய மதசார்பற்ற கூட்டணியை வீழ்த்தி, தமிழகத்தில் ஆட்சிமாற்றம் ஏற்படுத்தக்கூடிய அளவுக்கு விஜய்யால் எவ்வித தாக்கத்தையும் ஏற்படுத்த முடியாது. கூட்டத்தை வைத்து ஆட்சியை கைப்பற்ற முடியாது என்பது அனைவருக்கும் பொருந்தும்.

திமுக, விசிக, கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு வரக்கூடிய லட்சக்கணக்கானோர் கொள்கை, கோட்பாடுடன் இருப்பவர்கள். அரசியலில் நீண்ட காலமாக மக்களுடன் நிற்பவர்கள். அந்த பெருந்திரளுக்கும், விஜய்க்கு வரும் கூட்டத்துக்கும் நிறைய வேறுபாடுகள் உள்ளன. இதை ஒருபொருட்டாக எடுத்து கொண்டு, ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த போகின்றனர் என்ற மாயத்தோற்றத்தை உருவாக்க நினைக்கின்றனர். அரசியலில் மநீம தலைவர் கமல்ஹாசன் அடியெடுத்து வைக்கும்போது, அவர் பார்த்த அரசியல் வேறு. அவர் அரசியல் தலைவராக உருவானபோது அரசியலில் கொள்கை சார்ந்த மாற்றம் ஏற்பட்டது. விஜய் விவகாரத்தில் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

இவ்வாறு திருமாவளவன் தெரிவித்தார். இதேபோல் கோவையில் இருந்து வந் கே.ஏ.செங்கோட்டையன் சென்னை விமானநிலையத்தில் செய்தியாளர்களிடம், ‘அதிமுக இணைப்புக்கு நீங்கள் விதித்த கெடு 2 நாளில் முடியப்போகிறதே என்ற கேள்விக்கு, நல்லதை நினையுங்கள், நல்லதே நடக்கும். என்னை இதுவரை ஓ.பன்னீர்செல்வம், டிடிவி.தினகரன் சந்திக்கவில்லை’ என்று தெரிவித்தார். உங்களை அதிமுகவை விட்டு நிரந்தரமாக நீக்கினால் என்ன செய்வீர்கள் என்ற கேள்விக்கு, அமைதியாக இருப்பேன் என்று பதிலளித்து கிளம்பி சென்றுவிட்டார்.