கரூர்: கரூரில் விஜய் பிரசாரத்தின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தது தொடர்பாக நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட வடக்கு மண்டல ஐஜி அஸ்ரா கார்க் தலைமையிலான சிறப்பு புலனாய்வு குழுவினர் (எஸ்ஐடி) கரூரில் நேற்று நேரில் சென்று சுமார் 45 நிமிடம் ஆய்வு செய்து விசாரணை நடத்தினர். கரூர் வேலுச்சாமிபுரத்தில் தவெக தலைவர் விஜய் கடந்த மாதம் 27ம் தேதி பிரசாரம் மேற்கொண்டார். அங்கு பகல் 12 மணியளவில் விஜய் பேசுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால், அவர் இரவு 7 மணிக்குத் தான் வேலுச்சாமிபுரத்திற்கு வந்தார். இதனால் அவரை பார்ப்பதற்காக ஏராளமானோர் அங்கு கூடியிருந்தனர். மேலும் நாமக்கல்லில் இருந்து அவரது பிரசார பஸ்சை தொடர்ந்தும் ஏராளமானோர் வந்தனர். வேலுச்சாமிபுரத்தில் இரவு 7 மணிக்கு மேல் பேச தொடங்கினார். விஜய்யை பார்ப்பதற்காக கூட்டத்தில் இருந்தவர்கள் முண்டியடித்ததால் கடும் நெரிசல் ஏற்பட்டது. இந்த நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். மேலும், 100க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.
சம்பவம் நடைபெற்ற உடனே விஜய் திருச்சி சென்று அங்கிருந்து தனி விமானம் மூலம் சென்னை சென்று விட்டார். இந்த சம்பவம் தொடர்பாக விசாரித்து அறிக்கை அளிக்க ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒரு நபர் ஆணையத்தை முதல்வர் அமைத்தார். அதன்படி நீதிபதி அருணா ஜெகதீசன் கரூரில் 2 நாள் முகாமிட்டு விசாரணை நடத்தினார். மீண்டும் அவர் முழுமையாக விசாரணை நடத்தி அறிக்கையை அரசிடம் அளிப்பேன் என்று தெரிவித்துள்ளார்.மேலும், கரூர் போலீசார் இந்த சம்பவம் குறித்து விசாரித்தனர்.
விசாரணை அதிகாரியாக ஏடிஎஸ்பி பிரேமானந்த் நியமிக்கப்பட்டார். இதையடுத்து, கரூர் மேற்கு மாவட்ட தவெக செயலாளர் மதியழகன், கரூர் மாநகர பொறுப்பாளர் பவுன்ராஜ் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். மேலும், தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், துணைப்பொதுச்செயலாளர் நிர்மல்குமார் ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதனால் அவர்கள் கைதுக்கு பயந்து தலைமறைவாகி, முன்ஜாமீன் கோரி இருவர் தரப்பிலும் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுதாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது.
ரோடு ஷோ நடத்த வழிகாட்டு நெறிமுறைகளை வகுக்கக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கை விசாரித்த நீதிபதி செந்தில்குமார், கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியானதற்கு வேதனை தெரிவித்து, தொண்டர்களை அப்படியே விட்டுவிட்டு சென்ற விஜய் தலைமைப்பண்பே இல்லாதவர் என கடுமையாக சாடியதோடு, இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த வடக்கு மண்டல ஐஜி அஸ்ரா கார்க் தலைமையில் சிறப்பு விசாரணை குழு (எஸ்ஐடி) அமைக்க உத்தரவிட்டார். அதன்படி ஐஜி அஸ்ரா கார்க் தலைமையில் சிறப்பு விசாரணை குழு அமைக்கப்பட்டது.
இதையடுத்து, கரூர் சம்பவம் தொடர்பாக முதற்கட்ட விசாரணை நடத்திய கரூர் ஏடிஎஸ்பி பிரேம் ஆனந்த் நேற்று முன்தினம் சென்னையில் ஐஜி அஸ்ரா கார்க்கை சந்தித்து விசாரணை தொடர்பான ஆவணங்களை வழங்கினார். இந்நிலையில் ஐஜி அஸ்ரா கார்க் தலைமையிலான சிறப்பு விசாரணை குழு நேற்று (ஞாயிறு) கரூருக்கு நேரில் சென்று விசாரணையை தொடங்கினர்.
ஐஜியுடன் நாமக்கல் எஸ்பி விமலா, சிவில்சப்ளை சிஐடி எஸ்பி ஷியாமளா உள்ளிட்டோரும் வந்திருந்தனர். சம்பவம் நிகழ்ந்த கரூர் வேலுச்சாமிபுரம் பகுதிக்கு ஐஜி அஸ்ரா கார்க் தலைமையிலான குழுவினர் நேற்று பிற்பகல் 1.30 மணிக்கு சென்று சுமார் 45 நிமிடங்கள் அந்த இடத்தை ஆய்வு செய்தனர். அப்போது, ஐஜி அஸ்ரா கார்க்கிடம் கரூர் தனிப்பிரிவு காவலர் மோகன்ராஜ் மற்றும் சைபர் கிரைம் எஸ்ஐ சுதர்சன் ஆகியோர் சம்பவம் தொடர்பாக விளக்கினர்.
ஆய்விற்குப்பிறகு ஐஜி அஸ்ரா கார்க் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி: உயர்நீதிமன்ற உத்தரவின்படி இந்த சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்பட்டுள்ளது. அதன்படி இன்று (நேற்று) நாங்கள் முறைப்படி விசாரணையை தொடங்கியுள்ளோம். தற்போது தான் விசாரணையை நாங்கள் தொடங்கியுள்ளோம். அதனால் இந்த வழக்கு தொடர்பாக இப்போதைக்கு முழுமையான தகவல்கள் கூறமுடியாது. என்னை தவிர இந்த குழுவில் 2எஸ்பிகள், ஒரு ஏடிஎஸ்பி, 2 டிஎஸ்பிகள் மற்றும் ஐந்து இன்ஸ்பெக்டர்கள் இருக்கிறார்கள். இப்போதைக்கு வேறு எதுவும் சொல்ல முடியாது. இவ்வாறு அவர் கூறினார்.
* 7 நாட்களுக்கு பின் ஆறுதல் கூறிய தவெகவினர்
41 பேர் பலி செய்தி கேட்டதும் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறாமல் தவெக நிர்வாகிகள் தலைமறைவான நிலையில், ஐகோர்ட் மற்றும் பல்வேறு தரப்பினர் கடும் கண்டனம் தெரிவித்தனர். இந்நிலையில், 7 நாட்களுக்கு பின் தவெக கரூர் கிழக்கு மாவட்ட நிர்வாகி பாலசுப்ரமணியன் உட்பட கட்சி நிர்வாகிகள் பாதிக்கப்பட்டவர்கள் வீடுகளுக்கு நேற்று முன்தினம் சென்று ஆறுதல் தெரிவித்தனர். ஆனால் விஜய் அறிவித்த நிவாரண உதவி வழங்கவில்லை. விரைவில் விஜய் சந்திப்பார் என்று மட்டும் சொல்லிவிட்டு சென்று உள்ளனர்.