விஜய் கூட்ட நெரிசலில் 41 பேர் பலியான சம்பவம் 7 எஸ்ஐ உட்பட 19 பேரிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை: மேலும் பல போலீசாருக்கு சம்மன் அனுப்ப முடிவு
கரூர்: கரூர் கூட்ட நெரிசலில் 41 பேர் பலியான சம்பவத்தில் 7 சப் இன்ஸ்பெக்டர்கள் உட்பட 19 பேரிடம் சிபிஐ குழுவினர் விசாரணை நடத்தினர். மேலும் பல போலீசாருக்கு சம்மன் அனுப்பி விசாரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
கரூரில் கடந்த மாதம் 27ம்தேதி தவெக தலைவர் விஜய் பிரசாரத்தின் போது கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த வழக்கை ஐபிஎஸ் அதிகாரி பிரவீன்குமார் தலைமையிலான 12பேர் குழுவினர் விசாரித்து வருகின்றனர். சம்பவம் நடந்த வேலுச்சாமிபுரத்தை சேர்ந்த 306 பேருக்கு விசாரணைக்கு ஆஜராகும்படி சிபிஐ சம்மன் அனுப்பி இருந்த நிலையில் கடந்த 2ம் தேதி 13 பேர், நேற்றுமுன்தினம் 15 பேர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள பயணியர் விடுதியில் சிபிஐ அதிகாரிகள் முன்னிலையில் தனித்தனியாக ஆஜராகி விளக்கமளித்தனர். அவர்கள் அளித்த வாக்குமூலங்களை அதிகாரிகள் பதிவு செய்து கொண்டனர்.
சம்பவத்தன்று வேலுச்சாமிபுரத்தில் பாதுகாப்பு பணியில் இருந்த 12 காவலர்கள், 10 சப் இன்ஸ்பெக்டர்கள் என 22 பேருக்கு சிபிஐ சம்மன் அனுப்பியிருந்த நிலையில் நேற்று காலை 10.30 மணியளவில் கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள பயணியர் விடுதியில் சிபிஐ அதிகாரிகள் முன்னிலையில் 8 பெண் உட்பட 12 காவலர்கள், 7 சப் இன்ஸ்பெக்டர்கள் ஆஜராகினர். 3 சப் இன்ஸ்பெக்டர் ஆஜராக வில்லை. மாலை 6.30 மணி வரை தனித்தனியாக அவர்களிடம், வேலுச்சாமிபுரத்திற்கு எத்தனை மணியில் இருந்து ரசிகர்கள் வர தொடங்கினார்கள், விஜய் வருவதற்கு முன் எவ்வளவு பேர் கூடியிருந்தார்கள், எவ்வளவு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர் என அடுக்கடுக்கான கேள்விகளை கேட்டு விசாரித்தனர். மேலும் பல போலீசாருக்கு சம்மன் அனுப்பி விசாரிக்கவும் சிபிஐ அதிகாரிகள் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
