* 2 பெண் எஸ்பிக்கள், 3 டிஎஸ்பிக்களும் குழுவில் சேர்ப்பு, ஏடிஎஸ்பி பிரேமானந்த் ஆவணங்களை ஒப்படைத்தார்
கரூர்: கரூரில் கடந்த 27ம் தேதி தவெக தலைவர் விஜய் பிரசார கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். நூற்றுக்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். இந்த துயர சம்பவம் நாட்டையே உலுக்கியது. இதையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக விசாரித்து அறிக்கை அளிக்க ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒரு நபர் ஆணையத்தை முதல்வர் அமைத்தார். அதன்படி நீதிபதி அருணா ஜெகதீசன் கரூரில் 2 நாள் முகாமிட்டு விசாரணை நடத்தினார்.
மீண்டும் அவர் முழுமையாக விசாரணை நடத்தி அறிக்கையை அரசிடம் அளிப்பேன் என்று தெரிவித்துள்ளார். இதனிடையே கரூர் போலீசாரும் விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில், வழக்கின் விசாரணை அதிகாரியாக ஏடிஎஸ்பி பிரேமானந்த் நியமிக்கப்பட்டார். இது தொடர்பாக கரூர் மேற்கு மாவட்ட தவெக செயலாளர் மதியழகன், கரூர் மேற்கு மாவட்ட செயலாளர் மதியழகன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில் கரூர் சம்பவம் தொடர்பான வழக்குகள் சென்னை உயர்நீதிமன்றத்தில் நேற்று முன்தினம் விசாரணைக்கு வந்தது.
அப்போது, நீதிபதி செந்தில்குமார், ‘‘தவெகவின் செயலை நீதிமன்றம் கண்டிக்கிறது, விஜய் தலைமை பண்புக்கே தகுதி இல்லாதவர், இது என்ன மாதிரியான கட்சி’’ என்று கடுமையாக கண்டனம் தெரிவித்தார். பின்னர், கரூர் சம்பவம் தொடர்பாக விசாரிக்க வடக்கு மண்டல ஐஜி அஸ்ரா கார்க் தலைமையில் சிறப்பு புலனாய்வு குழுவை அமைத்து உத்தரவிட்டார். மேலும் ஆதவ் அர்ஜுனா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவு பிறப்பித்தார்.
இதனிடையே கரூர் விசாரணை அதிகாரியாக ஏற்கனவே நியமிக்கப்பட்டு இருந்த ஏடிஎஸ்பி பிரேமானந்த், கடந்த ஒரு வாரமாக சம்பவம் நடைபெற்ற இடம், அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றோர், உயிரிழந்த குடும்பத்தினர் மற்றும் நிகழ்ச்சி நடைபெற்ற பகுதியை ஒட்டி வசித்து வந்த பொதுமக்கள், கடை உரிமையாளர்கள், சம்பவ இடத்தில் இருந்த ஜெனரேட்டர் ஆப்ரேட்டர், ஒளிரும் விளக்கு பொருத்தியவர்கள் உட்பட 100க்கும் மேற்பட்டவர்களிடம் விசாரணை மேற்கொண்டார்.
இந்நிலையில் உயர் நீதிமன்றம் அமைத்த சிறப்பு புலனாய்வு குழு தனது விசாரணையை நேற்று தொடங்கியது. இந்த சிறப்பு புலனாய்வு குழுவில் நாமக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விமலா, சிபிசிஐடி எஸ்பி சியாமளா தேவி ஆகிய 2 பெண் எஸ்பிக்கள் இடம்பெற்றுள்ளனர். மேலும், 3 ஏடிஎஸ்பிக்கள், டிஎஸ்பிக்கள், இன்ஸ்பெக்டர்கள் மற்றும் எஸ்கள் இந்த குழுவில் இடம்பெற்றுள்ளனர். குழுவில் இடம்பெற்றுள்ள 2 பெண் எஸ்பிக்களும் நேற்று ஐஜி அஸ்ரா கார்க்குடன் ஆலோசனை நடத்தினர்.
இந்நிலையில், வழக்கு தொடர்பான அனைத்து ஆவணங்களை சிறப்பு புலனாய்வு குழுவிடம் ஒப்படைக்க நேற்று காலை ஏடிஎஸ்பி பிரேமானந்த் சென்ைன வந்தார். அவர் ஐஜி அஸ்ரா கார்க்கிடம் ஆவணங்களை ஒப்படைத்தார். இந்நிலையில், ஐஜி அஸ்ரா கார்க் தலைமையிலான சிறப்பு விசாரணை குழுவினர் இன்று அல்லது நாளை கரூருக்கு செல்ல உள்ளதாக தெரிகிறது. அவர்கள் தொடர்ந்து சம்பவம் நடந்த கரூர் வேலுச்சாமிபுரத்தில் முதற்கட்ட விசாரணை துவக்க உள்ளனர். பின்னர், இறந்தவர்களின் வீடுகளுக்கு நேரிடையாக சென்று விசாரிக்க உள்ளனர். இதையடுத்து, காயமடைந்தவர்களையும் நேரில் சென்று விசாரிக்க முடிவு செய்துள்ளனர்.
* 50 ஆம்புலன்ஸ் டிரைவர்களிடம் விசாரணை
கரூர் வேலுசாமிபுரத்தில் விஜய் பிரச்சாரத்தின் போது, நெரிசலில் சிக்கி 41 பேர் இறந்தனர். 100க்கு மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். அப்போது, தனியார் மற்றும் 108 ஆம்புலன்ஸ்கள் கூட்டத்தின் நடுவில் வந்து, பாதிக்கப்பட்டவர்களை மீட்டு கரூர் அரசு மருத்துமவனை மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கு கொண்டு சென்றனர். இந்நிலையில், இந்த சம்பவம் நடைபெற்றபோது, ஆம்புலன்ஸ் ஒட்டுநர்களுக்கு யார் தகவல் அளித்தது.
எந்த நேரத்தில் உள்ளே சென்றீர்கள், எத்தனை முறை சென்று வந்தீர்கள், எந்தெந்த மருத்துவமனைகளுக்கு பாதிக்கப்பட்டவர்களை அழைத்துச் சென்றீர்கள்? என சம்பவம் தொடர்பான அனைத்து ஆதாரங்களையும் கரூர் டவுன் காவல் நிலையத்தில் ஒப்படைக்க தனியார் மற்றும் 108 ஆம்புலன்ஸ் ஒட்டுநர்களுக்கு டவுன் காவல் நிலையத்தில் இருந்து சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. அதனடிப்படையில் நேற்று காலை வரை 50 தனியார் மற்றும் 108 ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் காவல் நிலையம் வந்து ஆவணங்களை ஒப்படைத்தனர். அவர்களிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி அனுப்பினர்.
* தேசிய எஸ்சி-எஸ்டி ஆணைய குழு ஆய்வு
கரூர் வேலுச்சாமிபுரத்திற்கு நேற்று காலை 10 மணியளவில் தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணைய (எஸ்சி எஸ்டி ஆணையம்) தலைவர் கிஷோர், இயக்குநர் ரவிவர்மன், முதுநிலை விசாரணை அதிகாரி லிஸ்டர் உட்பட 6 பேர் கொண்ட குழுவினர் வந்து சம்பவம் நடைபெற்ற இடம், செருப்புகள் குவிந்து கிடந்த இடத்தில் ஆய்வு செய்தனர. தொடர்ந்து, வேலுச்சாமிபுரம், நெரூர் போன்ற பகுதிகளில் விஜய் பிரசார நிகழ்வில் உயிரிழந்த குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறியதோடு, சம்பவம் தொடர்பாகவும் விசாரணை மேற்கொண்டனர்.
* விஜய் மீது வழக்கு? நிர்வாகிகளுக்கு சம்மன்
கரூர் சம்பவம் தொடர்பாக தவெகவின் முக்கிய நிர்வாகிகளுக்கு சம்மன் அனுப்பபட்டு அவர்களை நேரிடையாக அழைத்து விசாரணை செய்யவும் சிறப்பு விசாரணை குழு முடிவு செய்துள்ளனர். மேலும், கரூர் வேலுச்சாமிபுரம் சம்பந்தமாக சமூக வலைதளங்களில் பரவி வரும் வீடியோக்கள் மற்றும் அதனை வெளியிட்டவர்கள் குறித்தும் விசாரணை மேற்கொள்ள உள்ளனர்.
சம்பவத்தன்று, போலீசார் எடுத்துள்ள டிரோன் காட்சிகள் மற்றும் விஜய் வந்த பகுதிகளில் உள்ள கண்காணிப்பு கேமராக்களின் காட்சி பதிவுகளையும் ஆய்வுக்கு உட்படுத்தி விசாரணை துவக்க உள்ளனர். முக்கியமாக சிறப்பு விசாரணை குழுவினர் அளிக்கும் அறிக்கையில் அடிப்படையில் தவெக தலைவர் விஜய் மற்றும் முக்கிய நிர்வாகிகள் மீது வழக்கு பதிவு செய்யப்படலாம் என்று தெரிகிறது.