காட்பாடி: தேவை இருந்தால் விஜய்யை கைது செய்வோம் என்று அமைச் சர் துரைமுருகன் தெரி வித்துள்ளார். காட்பாடியில் அமைச்சர் துரைமுருகன் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: ‘கரூர் விவகாரத்தில் தவெக குறித்து நீதிபதிகள் சொல்வதுதான் முக்கியம். நீதிபதிகள் உண்மையை கூறி உள்ளார்கள். 41 பேர் உயிரிழந்தது மிக சாதாரணமானது அல்ல, உலகமே பார்த்த ஒன்று. விஜய்யை கைது செய்யும் நிலை வந்தால் கைது செய்வோம்.
தேவையில்லாத சூழலில் பண்ண மாட்டோம். அனாவசியமாக நாங்கள் யாரையும் கைது செய்ய மாட்டோம். கரூர் துயர சம்பவம் தொடர்பாக ஆதாரங்கள் என்பது தவிர்க்க முடியாமல் இருந்தால் அப்போது அரசு தனது கடமையை செய்யும். எங்களை யாராவது பயமுறுத்தி விடுவார்கள், முடக்கி விடுவார்கள் என சொல்வதற்கு தயாராக இல்லை.
எந்த கொம்பனாலும் எங்களை ஆட்டிப் பார்க்கவும், அசைத்துப் பார்க்கவும் முடியாது. யார் எந்த வேஷம் போட்டாலும், எந்த அணியில் சேர்ந்தாலும் எங்களுக்கு கவலை இல்லை. நாங்கள் வெற்றி பெறுவோம். பாஜவிற்கு ஒண்டிக்கொள்ளவும், தாங்கிக் கொள்ளவும் ஒரு இடம் வேண்டும். ஆகையால் யாருக்கு என்ன வந்தாலும் ஓடி ஓடி போய் பார்ப்பார்கள். இவ்வாறு அவர் கூறினார்.