விஜய் கூட்ட நெரிசலில் 41 பேர் பலி ஆம்புலன்ஸ் சென்றபோது தவெகவினர் தாக்கினரா? டிரைவர்களிடம் 9 மணி நேரம் சிபிஐ விசாரணை
கரூர்: கரூரில் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியான சம்பவத்தில் ஆம்புலன்ஸ் சென்றபோது தவெகவினர் அடித்ததாக ஆம்புலன்ஸ் டிரைவர் புகார் அளித்த நிலையில், எதற்காக தவெகவினர் அடித்தார்கள், ஏன் இடையூறு செய்தார்கள் என அவர்களிடம் 9மணி நேரம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தினர். கரூரில் கடந்த செப்டம்பர் 27ம்தேதி தவெக தலைவர் விஜய் பிரசாரத்தின்போது கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த வழக்கை சிபிஜ விசாரித்து வருகிறது. சம்பவத்தன்று வேலுச்சாமிபுரத்தில் பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் 22 பேர் சிபிஐ அதிகாரிகள் முன்னிலையில் ஆஜராகி விளக்கமளித்தனர். கூட்ட நெரிசல் ஏற்பட்டபோது, விரைந்து வந்த ஆம்புலன்ஸ் டிரைவர்களை தவெகவினர் தாக்கி இடையூறு செய்ததாக அவர்கள் புகார் அளித்திருந்தனர்.
இதுதொடர்பான வீடியோவும் வைரலானது. இந்த விவகாரம் தொடர்பாக சேலம் கிழக்கு மாவட்ட செயலாளர் வெங்கடேசன் உட்பட ஏராளமான தவெகவினர் மீது கரூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர். இந்த விவகாரம் குறித்து விசாரிக்க சிபிஐ சம்மன் அனுப்பி இருந்ததில், நேற்றுமுன்தினம் 6 ஆம்புலன்ஸ் உரிமையாளர்கள், 5 டிரைவர்கள் ஆஜராகி வாக்குமூலம் அளித்தனர். நேற்று 2வது நாளாக 1 ஆம்புலன்ஸ் உரிமையாளர், 7 டிரைவர்கள் என 8 பேர் சிபிஐ அதிகாரிகள் முன்னிலையில் தனித்தனியாக ஆஜராகினர். காலை 10 மணிக்கு தொடங்கிய விசாரணை இரவு 7 மணி வரை நடந்தது.
கூட்ட நெரிசலில் சிக்கியவர்கள் மயக்கம் அடைந்ததாக எந்த நேரத்தில் தகவல் கிடைத்தது, எந்த இடத்தில் இருந்து ஆம்புலன்சை சம்பவம் நடந்த இடத்திற்கு கொண்டு வந்தீர்கள், எவ்வளவு நேரத்திற்குள் வந்தீர்கள், ஆம்புலன்ஸ் சென்றபோது தவெக நிர்வாகிகள் எதற்காக தாக்கினார்கள்? என்னென்ன இடையூறு செய்தார்கள்?, மயக்கம் அடைந்தவர்களை ஆம்புலன்சில் ஏற்றி செல்வதற்கு அவர்கள் உதவி செய்தார்களா, எத்தனை பேரை மருத்துவமனைக்கு அழைத்து சென்றீர்கள், வழியில் யாரேனும் உயிரிழந்தார்களா, சம்பவ இடத்தில் நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் உடல்களை ஏற்றி சென்றீர்களா என்பது போன்ற கேள்விகளை கேட்டனர். அவர்கள் அளித்த விளக்கத்தை சிபிஐ அதிகாரிகள் வாக்குமூலமாக பதிவு செய்தனர்.

