வரும் 13ம் தேதி திருச்சியில் தொடக்கம் விஜய் பிரசாரத்துக்கு அனுமதி: 23 நிபந்தனைகளுக்கு எழுத்துப்பூர்வமாக தவெகவினர் ஒப்புதல்
திருச்சி: 23 தவெக தலைவர் விஜய் கட்சி தொடங்கிய பின் முதல்முறையாக தமிழகம் முழுவதும் மக்களை சந்திக்க திட்டமிட்டு, வரும் 13ம் தேதி திருச்சியில் இருந்து அவர் பிரசார பயணத்தை தொடங்க முடிவு செய்தார். இதற்காக கடந்த 6ம் தேதி தவெக சார்பில் திருச்சி மாநகர காவல் ஆணையரிடம் மனு அளிக்கப்பட்டது. இதில் சில இடங்கள் மக்கள் அதிகம் கூடும் இடங்கள் என்பதாலும், போக்குவரத்து நெரிசல் அதிகம் ஏற்படும் என்பதாலும் சில இடங்களில் மாற்றி அமைக்க போலீசார் அறிவுறுத்தினர். இதற்காக மாற்று இடங்களை போலீசார் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து, திருச்சி மாநகர காவல்துணை ஆணையர் (வடக்கு) அலுவலகத்திற்கு நேற்று வந்த தவெகவினரிடம் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர்.
பின்னர், திருச்சி மரக்கடை பகுதியில் விஜய் பிரச்சாரம் செய்து பேசுவதற்கு அனுமதி அளிக்கப்பட்டது. இதில் ரோடு ஷோ நடத்தக்கூடாது, பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படும் வகையில் அதிகளவு வாகனங்களை சாலையில் நிறுத்தக்கூடாது, விஜய் பிரசார வாகனத்திற்கு முன்பும் பின்பும் அதிக அளவில் இருசக்கர வாகனம், நான்கு சக்கர வாகனங்கள் செல்லக்கூடாது, போலீசாரின் உத்தரவுக்கு கட்டுப்பட்டுநிபந்தனைகளை முறையாக பின்பற்ற வேண்டும் என்பது உள்பட 23 நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளது. இந்த நிபந்தனைகளுக்கு எழுத்து பூர்வமாக தவெக நிர்வாகிகள் ஒப்புதல் அளித்தால், பிரசாரம் மேற்கொள்ளலாம் என அறிவுறுத்தப்பட்டது.