Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
Chettinad Cements
search-icon-img
Advertisement

நடிகர் விஜய் கூட்டத்திற்கு 4 வாரங்களுக்கு முன்பே அனுமதி கேட்க வேண்டும்: தவெக நிர்வாகிக்கு போலீஸ் பதில்

சேலம்: சேலத்தில் நடிகர் விஜய் பிரச்சாரம் தொடங்க அனுமதி கேட்ட விவகாரத்தில் குறைகளை நிவர்த்தி செய்து அனுமதி கேட்குமாறு போலீசார் பதில் அளித்துள்ளனர். புதியதாக கட்சி தொடங்கியுள்ள நடிகர் விஜய், தேர்தல் பிரச்சாரம் செய்து வருகிறார். கடந்த செப்டம்பர் மாதம் கரூரில் நடத்திய கூட்டத்தில் நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். மாலை 4 மணிக்கு பிரச்சாரத்திற்கு வருவதாக போலீசாரிடம் அனுமதி பெற்றுவிட்டு, பகல் 12மணிக்கு விஜய் கரூர் வந்துவிடுவார் என கட்சியின் சமூகவலைதளத்தில் பதிவிட்டனர். இதனால் நடிகர் விஜயின் ரசிகர்கள் 12 மணிக்கே கூட்டம் நடக்கும் இடத்திற்கு வந்துவிட்டனர்.

இங்கு குடிதண்ணீர் உள்ளிட்ட எந்த வசதியும் செய்யாமல் இருந்ததால் ரசிகர்கள் குடிப்பதற்கு தண்ணீர் இல்லாமலும், சாப்பிட ஏதும் இல்லாத நிலையில் கடும் பசியுடன் இருந்தனர். இதற்கிடையில் நடிகர் விஜய் இரவு 7 மணிக்கு சம்பவ இடத்திற்கு வந்தார். சிறிய இடத்தில் அளவுக்கு அதிகமாக ரசிகர்கள் இருந்ததால் கூட்டநெரிசலில் சிக்கி 41 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். அதே நேரத்தில் நீதிமன்றம் விதித்த விதிமுறைகளையும் நடிகர் விஜய் தரப்பில் பின்பற்றவில்லை என்ற குற்றச்சாட்டும் இருந்து வருகிறது. கரூரில் 41 பேர் உயிரிழந்த வழக்கை சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் 2 மாதத்திற்கு பின் நடிகர் விஜய் மீண்டும் சேலத்தில் இருந்து தேர்தல் பிரச்சாரத்தை தொடங்க இருக்கிறார். இதையடுத்து வருகிற 4ம்தேதி சேலத்தில் பிரசாரம் தொடங்குவதற்கு அனுமதி கேட்டு சேலம் மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில், த.வெ.க. மாவட்ட செயலாளர் தமிழன் பார்த்தீபன் கடிதம் கொடுத்தார். சேலம் கோட்டை மைதானம், போஸ் மைதானம், தாளமுத்து நடராஜன் வீட்டின் அருகில் இருக்கும் மைதானம் என ஏதாவது ஒரு இடத்தில் அனுமதி கொடுக்குமாறு கேட்டிருந்தார்.

இதனை பரிசீலனை செய்த டவுன் உதவி கமிஷனர் சரவணன், த.வெ.க.வினருக்கு விளக்கம் அளித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: தங்களின் கட்சி நிகழ்ச்சி நடைபெறுவதாக சொல்லும் 4ம்தேதி, காவல்துறையினர் வெளிமாவட்ட பாதுகாப்பு பணிக்கு செல்வதால் தேவையான போலீசாரை நியமிக்க முடியாது. நடிகர் விஜயின் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெறுவதாக கூறியுள்ள இடங்களில் எத்தனை நபர்கள் கலந்து கொள்வார்கள் என்ற விவரத்தை தெரிவிக்கவில்லை. 4ம்தேதியன்று சேலம் மாவட்டம் மற்றும் வெளிமாவட்டங்களில் இருந்து எவ்வளவு பொதுமக்கள் கலந்து கொள்வார்கள் என்ற விவரம் இல்லை.

எனவே தங்களின் மனு மீது உரிய நடவடிக்கை எடுக்க இயலாது. இனி வரும் காலங்களில் தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜயின் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிக்கு அனுமதி வேண்டி மனு அளிக்கும் பட்சத்தில், நிகழ்ச்சி நடக்க இருக்கும் தேதியில் இருந்து 4 வாரங்களுக்கு முன்னதாகவே மனு அளிக்குமாறும், மேற்கண்ட குறைபாடுகளை நிவர்த்தி செய்து மனு அளிக்கும் பட்சத்தில் காவல்துறை அம்மனு மீது நடவடிக்கை எடுத்து தகுந்த பாதுகாப்பு அளிக்கும். இவ்வாறு அதில் தெரிவிக்கப் பட்டுள்ளது. போலீசார் அளித்த விளக்கத்தை மாவட்ட செயலாளர் தமிழன் பார்த்தீபன் ஏற்றுக்கொண்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.