விஜய் ரோடு ஷோ ரத்தான நிலையில் புதுச்சேரியில் 9ம் தேதி தவெக பொதுக்கூட்டம்: அனுமதி கேட்டு போலீசிடம் மனு
புதுச்சேரி: புதுச்சேரியில் ரோடு ஷோ நடத்த அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், தவெகவினர் 9ம்தேதி பொதுக்கூட்டம் நடத்த அனுமதி கேட்டு காவல்துறை சீனியர் எஸ்பியிடம் மனு கொடுத்துள்ளனர். புதுச்சேரியில் தவெக கட்சி தலைவர் விஜய் ரோடு ஷோ நடத்த அனுமதி கேட்டு பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், முதல்வர் ரங்கசாமி, டிஜிபியிடம் மனு அளித்தனர். 4வது முறையாக அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், பொதுக்கூட்டம் வேண்டுமென்றால் நடத்தி கொள்ளலாம்.
அதற்கான இடத்தை அவர்களே தேர்வு செய்து கொள்ளலாம்.கிறிஸ்துமஸ் விழாவுக்குள் எந்த தேதியில் வேண்டுமானால் நடத்திக் கொள்ளலாம் என புதுச்சேரி போலீசார் தெரிவித்தனர். இதையடுத்து இன்று நடத்த திட்டமிட்டிருந்த நடிகர் விஜய்யின் ரோடு ஷோ ரத்து செய்யப்பட்டது. இதனால் பொதுக்கூட்டம் நடத்த தவெகவினர் முடிவு செய்தனர்.
அதன்படி, உப்பளம் புதிய துறைமுக வளாகத்தில் (எக்ஸ்போ) வரும் 9ம்தேதி பொதுக்கூட்டம் நடத்த தவெகவினர் அனுமதி கேட்டு சீனியர் எஸ்பி கலைவாணனிடம் நேற்று கடிதம் கொடுத்தனர்.
இதையடுத்து போலீஸ் அதிகாரிகள் பொதுக்கூட்டம் நடத்த திட்டமிட்டுள்ள இடத்தை பார்வையிட்டு ஆய்வு செய்து, மேடை அமைக்கும் இடம், விஐபிக்கள் வரும்வழி, பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், போக்குவரத்து மாற்றம் உள்ளிட்டவை குறித்து ஆலோசனை நடத்தினர்.

