கரூரில் விஜய் கூட்ட நெரிசலில் 41 பேர் பலி;கரூரில் சிபிஐ அதிகாரிகள் 3 குழுவாக விசாரணை; கண்காணிப்பு குழு இன்று வருகை?
கரூர்: கரூரில் விஜய் கூட்ட நெரிசலில் 41 பேர் இறந்தது தொடர்பாக சிபிஐ அதிகாரிகள் இன்று 3 குழுக்களாக பிரிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் சிபிஐ விசாரணையை கண்காணிக்க கண்காணிப்பு குழு கரூர் வர இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
கரூரில் கடந்த செப்டம்பர் 27ம் தேதி தவெக தலைவர் விஜய் பிரசாரத்தின்போது கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த வழக்கை ஐபிஎஸ் அதிகாரி பிரவீன்குமார் தலைமையிலான 12 பேர் குழுவினர் விசாரித்து வருகின்றனர். சம்பவம் நடந்த வேலுசாமிபுரத்தில் நவீன கருவிகளின் உதவியுடன் அளவீடு செய்து ஆய்வு செய்தனர். இதைத்தொடர்ந்து வேலுசாமிபுரத்தை சேர்ந்த 306 பேருக்கு விசாரணைக்கு ஆஜராகுமாறு சம்மன் அனுப்பி இருந்த நிலையில் 28 பேர் மட்டுமே சிபிஐ அதிகாரிகள் முன்னிலையில் தனித்தனியாக ஆஜராகி விளக்கமளித்தனர்.
சம்பவத்தன்று வேலுசாமிபுரத்தில் பாதுகாப்பு பணியில் இருந்த 12 காவலர்கள், 10 எஸ்ஐக்கள் என 22 பேருக்கு சம்மன் அனுப்பியிருந்த நிலையில் நேற்று முன்தினம் 8 பெண் உட்பட 12 காவலர்கள், 7 எஸ்ஐக்கள், சிபிஐ அதிகாரிகள் முன்னிலையில் தனித்தனியாக ஆஜராகி விளக்கமளித்தனர். மாலை 6.30 மணிக்கு மேல் ஆஜராக வந்த ஒரு பெண் எஸ்ஐ, 2 எஸ்எஸ்ஐக்களிடம் விசாரிக்க போதிய நேரம் இல்லாததால் அவர்களிடம் நேற்று விசாரணை நடத்தினர். இந்நிலையில் பயணியர் மாளிகையில் 12 சிபிஐ அதிகாரிகளில் 3 பேர் மட்டுமே இன்று உள்ளனர். மீதமுள்ள 9 அதிகாரிகள் 3 குழுக்களாக பிரிந்து சென்று விசாரித்து வருகின்றனர்.
இதனிடையே சிபிஐ சம்மன் அனுப்பியதில் ஒரு சிலரிடம் விசாரணையின்போது எப்படி பேச வேண்டும், தவெகவுக்கு ஆதரவாக எப்படி பதில் அளிக்க வேண்டும் என்று அப்பகுதியை சேர்ந்த ஒரு வக்கீல் ஆலோசனை வழங்கி வருவது தெரியவந்துள்ளது. இதனால் அந்த வக்கீல் யார் என்று சிபிஐ விசாரித்து வருகின்றனர். இந்நிலையில் சிபிஐ விசாரணையை கண்காணிக்க உச்ச நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி அஜய் ரஸ்தோகி தலைமையில் மூத்த ஐபிஎஸ் அதிகாரிகள் சுமித் சரண், சோனல் பி.மிஸ்ரா ஆகியோர் கொண்ட குழுவை உச்சநீதிமன்றம் நியமித்தது. அதன்படி சிபிஐ விசாரணை குறித்து ஆய்வு செய்வதற்காக சுமித் சரண், சோனல் பி.மிஸ்ரா ஆகியோர் கரூருக்கு இன்று மாலை வர இருப்பதாக கூறப்படுகிறது.
சிபிஐ சம்மன் அனுப்பிய சிலரிடம், விசாரணையின்போது, தவெகவுக்கு ஆதரவாக எப்படி பதில் அளிக்க வேண்டும் என்று அப்பகுதியை சேர்ந்த ஒரு வக்கீல் ஆலோசனை வழங்கி வருவது தெரியவந்துள்ளது.
