Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

விஜய் மல்லையாவின் ‘கிங் பிஷர்’ பங்களாவை ரூ.73 கோடிக்கு வாங்கி ‘கிங்ஸ் மேன்ஷன்’ என்று பெயரிட்ட நடிகர்: கோவாவில் சொத்து குறித்து பரபரப்பு தகவல்

பனாஜி: விஜய் மல்லையாவின் ‘கிங் பிஷர்’ பங்களாவை ரூ.73 கோடிக்கு வாங்கி ‘கிங்ஸ் மேன்ஷன்’ என்று பெயரிட்ட நடிகரின் கோவா சொத்து குறித்து பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது. பிரபல தொழிலதிபர் விஜய் மல்லையாவின் ஆடம்பர வாழ்க்கைமுறையின் மிக முக்கிய அடையாளமாக ஒரு காலத்தில் திகழ்ந்தது, கோவாவில் உள்ள அவரது ‘கிங் பிஷர் பங்களா’. பிரம்மாண்டமான விருந்துகளுக்கும், கேளிக்கைகளுக்கும் பெயர் பெற்ற இந்த சொகுசு பங்களா, ஒரு காலகட்டத்தில் பெரும் புகழுடன் விளங்கியது. ஆனால், ஐடிபிஐ வங்கியிடமிருந்து பெற்ற சுமார் ரூ. 900 கோடி கடனைத் திருப்பிச் செலுத்தத் தவறியதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்ததைத் தொடர்ந்து, பாரத ஸ்டேட் வங்கி தலைமையிலான வங்கிகளின் கூட்டமைப்பு இந்த சொத்தை முடக்கியது.

தொடர்ந்து, இந்த பங்களாவை ஏலம் விடும் முயற்சிகள் பலமுறை தோல்வியில் முடிந்தன. பல ஆண்டுகளாக விற்பனையாகாமல் இருந்த நிலையில், கடந்த 2017ம் ஆண்டு, இந்த சொத்தை பாலிவுட் நடிகர் சச்சின் ஜோஷி ரூ. 73.01 கோடிக்கு வாங்கினார். வாங்கிய பிறகு, இந்த பங்களாவின் பெயரை ‘கிங்ஸ் மேன்ஷன்’ என்று அவர் மாற்றியுள்ளார். தனது ‘கிங்ஸ் பீர்’ என்ற பிராண்டுடன் தொடர்புடையதாக இந்தப் பெயரை அவர் தேர்வு செய்துள்ளார். மூன்று ஏக்கர் பரப்பளவில், 12,350 சதுர அடியில் அமைந்துள்ள இந்த பங்களாவில், பிரம்மாண்ட நீச்சல் குளங்கள், அழகிய புல்வெளிகள் மற்றும் நடனத் தளங்கள் போன்ற ஆடம்பர வசதிகள் உள்ளன. ‘அசான்’, ‘ஜாக்பாட்’ போன்ற பாலிவுட் திரைப்படங்களிலும், தெலுங்குத் திரைப்படங்களிலும் நடித்தவரான சச்சின் ஜோஷி, ஒரு வெற்றிகரமான தொழிலதிபரும் ஆவார்.

இவர் முன்னாள் நடிகை ஊர்வசி ஷர்மாவை மணந்துள்ளார். இந்த சொத்தை வாங்கியது குறித்துப் பேசிய அவர், ‘கிங்ஸ் பீர்’ என்ற பிராண்டின் தொடர்பு மற்றும் இந்த சொத்தின் பிரம்மாண்டம் ஆகியவற்றால் ‘கிங்ஸ் மேன்ஷன்’ என்ற பெயர் பொருத்தமாக அமைந்தது. இதன் கதவுகளை திறப்பதில் மகிழ்ச்சியடைகிறேன்’ என்று தெரிவித்தார். தற்போது விஜய் மல்லையா இங்கிலாந்தில் வாழ்ந்து வரும் நிலையில், அவர் தற்போது பல்வேறு சட்ட நடவடிக்கைகளை எதிர்கொண்டுள்ளார். அவரிடமிருந்து இந்திய வங்கிகள் மீட்டெடுத்த சில முக்கிய சொத்துகளில் இந்த பங்களாவும் ஒன்றாகும் என்பது குறிப்பிடத்தக்கது.