தவக்களைக்கு கூடத்தான் கூட்டம் வந்துச்சு... விஜய்யை பார்க்க அவரோட ரசிகர்கள் தான் வர்றாங்க...செல்லூர் ராஜூ செம ரவுசு
மதுரை: விஜய்யை காண அவருடைய ரசிகர்கள் மட்டுமே வருகிறார்கள். கட்சி உறுப்பினர்களாக யாரும் வரவில்லை. அந்த கூட்டத்தில் கட்டுக்கோப்பு இல்லை. இது என்ன எழுச்சி என செல்லூர் ராஜூ கேள்வி எழுப்பியுள்ளார்.மதுரையில் அதிமுக மாநகர் மாவட்டம் சார்பில் தேர்தல் ஆலோசனை கூட்டம் நேற்று முன்தினம் இரவு நடந்தது. கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ பேசியதாவது:
தேர்தல் வருகிறது, என்னதான் வீரனாக இருந்தாலும் மல்யுத்தத்தில் ஜெயித்து விடுவோம் என்று நம்பினால் தான் ஜெயிக்க முடியும். புதுக்கதைக்கு புது வரவேற்பு இருக்கும். இப்போது தம்பி விஜய் கட்சி தொடங்கியுள்ளார். சனிக்கிழமை மட்டும் மக்களைச் சந்திக்கிறார். தமிழக வெற்றிக் கழகத்திற்கு வரக்கூடிய கூட்டம் எல்லாம் அவருடைய ரசிகர்கள் மட்டுமே. கட்சி உறுப்பினர்களாக யாரும் வரவில்லை. அந்தக் கூட்டத்தில் கட்டுக்கோப்பு இல்லை. இது என்ன எழுச்சி? இந்தக் கூட்டத்தை வைத்து நான் முதலமைச்சராக வந்து விடுவேன் என்று சொன்னால் அதெல்லாம் முடியுமா? முடியவே முடியாது.
எந்த கூட்டத்தையும் பார்த்து நாம் பயப்பட வேண்டாம். எம்ஜிஆர் மாதிரி ஒருவர் பிறக்கவே முடியாது. எம்ஜிஆரின் சாணக்கியத்தனம் விஜய்யிடம் கிடையவே கிடையாது. சிரஞ்சீவி, சிவாஜி, டி.ராஜேந்தர், பாக்யராஜ் இப்படி பலரும் வந்தார்கள். அவர்களுக்கும் பெரும் கூட்டம் வந்தது. முந்தானை முடிச்சு படத்தில் நடித்து பிரபலமான தவக்களையை 84ல் மதுரை மேற்கு தொகுதிக்கு தேர்தல் பிரசாரத்திற்கு கூட்டி வந்தோம். முருங்கைக்காயும், தவக்களையும் அந்த படத்தில் பிரபலமா இருந்தாங்க. எக்குத்தப்பான கூட்டம், வீட்டு மாடியில் எல்லாம் கூட்டம் இருந்தது. ஆனால் ஓட்டுப்போட்டாங்களா? ஓட்டுப் போடல. தவக்களை வராத தொகுதியில் கூட நாம லீடிங்கில் இருந்தோம். சிலருக்கு கூடுகிற கூட்டத்தை வைத்து ஏமாந்து விடக்கூடாது. இவ்வாறு அவர் பேசினார்.
* ‘இது வேற அணில்...’
செல்லூர் ராஜூ பேசுகையில், ‘‘ராமர் பாலத்தை கட்டியது அணில்னு சொல்வாங்க. அதைப்போல அதிமுக ஆட்சி அமைய தொண்டர்களாகிய நீங்கள் உதவ வேண்டும். இதைச் சொன்னதும், நீங்கள் வேற அணிலை நினைத்து விடாதீர்கள்...’’ என்று, மறைமுகமாக விஜய்யை குறிப்பிட்டு கிண்டலடித்தார்.