கரூர்: கரூர் வேலுசாமிபுரத்தில் கடந்த அக்டோபர் 27ம் தேதி தவெக தலைவர் விஜய் பிரசாரத்தின் போது கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த வழக்ைக ஐபிஎஸ் அதிகாரி பிரவீன்குமார் தலைமையிலான சிபிஐ குழுவினர் விசாரித்து வருகின்றனர். நேற்றுமுன்தினம் காலை 8 மணியளவில் கரூர் திரும்பினர். இதைத்தொடர்ந்து பயணியர் விடுதிக்கு வந்த கரூர் டவுன் இன்ஸ்பெக்டர் மணிவண்ணனிடம் ஒரு மணி நேரம் சிபிஐ அதிகாரிகள் விசாரித்தனர்.
பின்னர் வேலுசாமிபுரத்தை சேர்ந்த பொதுமக்களில் ஒருவரான கனகராஜ், அந்த பகுதியில் டிபார்ட்மென்ட் ஸ்டோர் வைத்துள்ள ஆனந்த் மற்றும் காவல்துறைக்கு வீடியோ எடுத்து கொடுத்த புகைப்படக்காரர் ராஜசேகரனிடம் தனித்தனியாக விசாரணை நடத்தினர். பின்னர் பிரவீன்குமார் தலைமையிலான 6 பேர் குழுவினர், நேற்று மதுரையில் இருந்து கூடுதலாக வந்த சிபிஐ அதிகாரிகள் 6 பேர் என 12 பேரும் சேர்ந்து நேற்று காலை 11 மணியளவில் 2 கார்களில் சம்பவம் நடைபெற்ற வேலுசாமிபுரத்துக்கு வந்து விசாரணை நடத்தினர்.
கரூர்-ஈரோடு சாலையில் 600 மீட்டர் தூரத்துக்கு சாலையின் நீளம், அகலத்தை அளந்து ஆய்வு செய்தனர். 60க்கும் மேற்பட்ட கடைகளுக்கு சென்ற அதிகாரிகள், நீங்கள் காலையில் எத்தனை மணிக்கு கடை திறப்பீர்கள், இரவு எத்தனை மணிக்கு பூட்டுவீர்கள். சம்பவம் நடந்த நாளில் கடை திறந்த நேரம், பூட்டிய நேரம் குறித்து விசாரித்தனர். தொடர்ந்து 2வது நாளாக இன்று காலை 7 மணிக்கு சிபிஐ அதிகாரிகள் வேலுசாமிபுரத்துக்கு வந்து ஆய்வை தொடர்ந்தனர். நேற்று சாலை அளவீடு செய்த நிலையில் மீதமுள்ள சாலையில் இன்று காலை அளவீடு செய்யும் பணி நடைபெற்றது. அவர்கள் தாங்கள் கொண்டு வந்த 3டி லேசர் ஸ்கேனர் கருவியை கொண்டு சாலையை அளவீடு செய்தனர். விஜய் பிரசார வாகனம் வந்த சாலை, அவர் நின்று பேசிய இடத்தின் நீள, அகலம் கருவி மூலம் அளவீடு செய்யப்பட்டது.
