ஹனோய்: வியட்நாமை பெங்ஷென் புயல் நெருங்கி வருவதால் மத்திய வியட்நாமில் கனமழை பெய்யும் என்றும் வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகள் ஏற்படு்ம அபாயம் உள்ளதாகவும் வானிலை ஆய்வாளர்கள் எச்சரித்து இருந்தனர். இந்நிலையில் நேற்று முன்தினம் வியட்நாமில் கனமழை பெய்தது. வரலாற்று நகரமான யூ மற்றும் ஹோய் உட்பட பல்வேறு இடங்களிலும் பெய்த மழை காரணமாக குடியிருப்புக்கள் நீரில் மூழ்கின. பல இடங்களில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதால் விவசாய நிலங்கள் நீரில் மூழ்கியுள்ளன.
தொடர்ந்து பெய்த மழை காரணமாக அணைகளில் இருந்து நீர் வெளியேற்றப்பட்டதால் ஹோய் ஆற்றின் நீர்மட்டம் சமார் 6.5அடிக்கு உயர்ந்தது. ஹோயில் இருந்து சுற்றுலா பயணிகள் படகு மூலமாக வெளியேற்றப்பட்டார்கள். இதேபோல் ஹியூவிலும் வெள்ளத்தில் வீடுகள் மூழ்கின. முக்கிய வீதிகள் துண்டிக்கப்பட்டது. நேற்று முன்தினம் ஹியூவில் மட்டும் 24 மணி நேரத்தில் 108.5 சென்டிமீட்டர் மழை பெய்துள்ளது. இது வியட்நாமில் இதுவரை பதிவான அதிகப்பட்ச மழைப்பொழிவாகும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
