சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் காணொலி காட்சி வாயிலாக இன்று நடக்கிறது. இதுகுறித்து திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்ட அறிவிப்பு: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் 9ம் தேதி(இன்று) நண்பகல் 12 மணியளவில் காணொலி காட்சி வாயிலாக நடைபெறும். இதில் மாவட்ட திமுக செயலாளர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளும்படி கேட்டு கொள்கிறேன். இதில் திமுக முப்பெரும் விழா, ஓரணியில் தமிழ்நாடு-உறுப்பினர் சேர்க்கை பொருள் குறித்து பேசப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டின் மண்-மொழி-மானம் காக்கவும், நம்முடைய திராவிட மாடல் அரசின் சாதனைகளை எடுத்து சொல்லி தமிழ்நாட்டு மக்களை ஓரணியில் கொண்டுவர வீடு, வீடாக சென்று பரப்புரை மேற்கொள்ளவும், திமுகவில் உறுப்பினர்களாக சேர்க்கவும், ஓரணியில் தமிழ்நாடு முன்னெடுப்பை திமுக தொடங்கியது. இதில் 2.5 கோடி பேரை திமுக உறுப்பினர்களாக சேர்க்க வேண்டும் என்று இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இந்த இலக்கை தாண்டி உறுப்பினர் சேர்க்கை நடந்துள்ளது. இந்த உறுப்பினர் சேர்க்கை குறித்தும் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளது.
மேலும் திமுக சார்பில் ஒவ்வொரு ஆண்டும் அண்ணா பிறந்த நாள், பெரியார் பிறந்த நாள், திமுக தொடக்க நாள் ஆகியவற்றை முப்பெரும் விழா கோலாகலமாக கொண்டாடாப்பட்டு வருகிறது. அந்த வகையில் வரும் 17ம் தேதி திமுக முப்பெரும் விழா கரூரில் நடைபெறுகிறது. முப்பெரும் விழாவில் திமுக துணை பொதுச்செயலாளர் கனிமொழி எம்பி உள்ளிட்ட 6 பேருக்கு விருதுகள் வழங்கப்படுகிறது. இந்த முப்பெரும் விழாவை சிறப்பாக நடத்துவது குறித்து மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளது.