சிவகங்கை: ‘‘ஊரை காலி செய்ய வைத்தது அதிமுக அரசு’’ என 2019ம் ஆண்டில் நாட்டகுடி கிராம மக்கள் புலம்பும் வீடியோ தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது. சிவகங்கை மாவட்டம், நாட்டாகுடி கிராமத்தை விட்டு வெளியேறிய மக்களை மீண்டும் குடியமர்த்தி தேவையான அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி இன்று (ஆக. 13) அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
இந்நிலையில், 2019ம் ஆண்டு தொலைக்காட்சிகளில் நாட்டாகுடி கிராமம் குறித்து வெளியான செய்தி காட்சிகள், தற்போது அதிமுகவின் ‘அரசியல் நாடகம்’ என இணையதளத்தில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோ காட்சியில் ராஜகோபால் என்பவர், ‘‘மந்திரி தமறாக்கி பாஸ்கரன் எங்க ஊரு பக்கத்துல தான் இருக்காரு. இங்கிருந்து 2 கிமீ தான். அவர் ஜெயித்தவுடன் நாங்கள் போய் கேட்டதற்கு, உங்கள் ஊருக்கு எதைப் போட்டாலும் வேஸ்ட், என்ன செஞ்சாலும் வேஸ்ட், நீங்க எதுவுமே கேட்காதீங்க என அனுப்பிட்டாரு.
நாங்களும் என்னென்னமோ பண்ணி பார்த்தோம். இங்கு ஒரு உப்பு டேங்க், அங்கு ஒரு உப்பு டேங்க், எல்லாமே உப்பு. மாத்தூரில் இருந்து எங்களுக்கு தண்ணீர் வந்து கொண்டிருந்தது, அப்புறம் அவங்களும் தர மாட்டேன் என்கிறார்கள். இப்ப அதனால ஒரே வறட்சியா இருக்கு’’ என்கிறார். மேலும் கிராமத்தினர் கூறுகையில், ‘‘இங்க 40, 50 வருஷமா தண்ணி பிரச்னை இருக்கு. ஆட்சி மாறினாலும் காட்சி மாறவில்லை.
இதேபோல் தான் நடந்து கொண்டிருக்கிறது. பிள்ளைகளின் பள்ளிக்கூடம் 7, 8 வருஷமா நின்னு போச்சு. எல்லாரும் இந்த ஊரை விட்டு குடி பெயர்ந்து வேறு இடத்திற்கு சென்று விட்டனர்’’ என்கின்றனர். மேலும், குடிநீர் பிரச்னையால் ஒரு ஊரே காலியாவதற்குள் மாவட்ட நிர்வாகம் விழித்துக் கொண்டு உதவிக்கரம் நீட்ட வேண்டும் என்பது அனைவரது கோரிக்கையாக உள்ளது என்று வீடியோ முடிகின்றது.2011 முதல் 2021 வரை 10 ஆண்டுகள் அதிமுக ஆட்சி என்பது குறிப்பிடத்தக்கது.