Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

முயற்சியே வெற்றியின் அடித்தளம்!

முயற்சி என்பதுநம்மிடம்உள்ள ஆற்றலை பயன்படுத்தி நாம் தீர்மானித்த இலக்கை முடிக்க முயல்வதாகும். செயல்களைச் செய்து முடிக்க உதவும் உந்து சக்தியே முயற்சி. எடுத்துக்கொண்ட ஒர் இலக்கை அடைவதன் மூலம் மன நிறைவும்,சக்தியும் நமக்கு கிடைக்கிறது.மாறாக முடிக்கப்படாத செயல்கள் தொட்டியில் ஏற்படுகின்ற ஓட்டை போன்றதாகும்.தண்ணீர் எவ்வளவு ஊற்றினாலும் தொட்டி நிறையாமல், தண்ணீர் வீணாகி வெளியேறி கொண்டே இருக்கும்.

மகாத்மா காந்தியடிகளின் முயற்சி சுதந்திரம் பெற்று தந்தது,எடிசனின் முயற்சி மின் விளக்கை தந்தது.அலெக்சாண்டரின் முயற்சி தொலைபேசியை கண்டு பிடித்தது, இதுபோல உலகக் கண்டுபிடிப்புகளும்,சாதனைகளும் முயற்சியின் மூலமே சாத்தியமாயின.ஆகவே முடிவில்லா முயற்சிகளை மூலதனம் ஆக்கினால் எல்லையில்லா வெற்றிகளை எளிதில் குவிக்கலாம்.

வாழ்க்கையில் வெற்றி பெற வேண்டும் என்றால் தேனீயைப் போல ஓய்வின்றி உழைத்துக் கொண்டே இருக்க வேண்டும் என்பதைவிட புதிய,புதிய முயற்சிகளை எடுத்துக் கொண்டே இருக்க வேண்டும்.முயற்சி என்னும் சிறகுகளை அசைக்காமல் வளர்ச்சி என்னும் வானத்தில் வலம் வர முடியாது. உள்ளத்தில் இலட்சியம் அக்னியாக ஒளிர்ந்தாலும், முயற்சி எடுப்பதற்குத் தயக்கம் காட்டினால் வெற்றிப் படிகட்டுகளில் ஒருபோதும் முன்னேறிச் செல்ல முடியாது.ஆகவே தயக்கத்தை தகர்த்துவிட்டு,தன்னம்பிக்கையோடு தொடர்ந்து முயற்சித்து ஜெயித்துக் கொண்டே இருங்கள்.ஏனென்றால் முதன்மையாக இருப்பதல்ல வெற்றி, முயன்று கொண்டே இருப்பது தான் வெற்றி.இதற்கு உதாரணமாய் இந்த சாதனை பெண்மணியை சொல்லலாம்.

நீதித்துறையில் பெண் ஒருவர் நீதிபதியாகி இருப்பதே மிகவும் பாராட்டுதலுக்கு உரியது.அதிலும் பழங்குடியினத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் முதன் முறையாக சிவில் நீதிபதியாக இருப்பது பலரது மதிப்புமிக்க பார்வையை ஈர்த்திருக்கிறது.திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த ஜவ்வாது மலை அருகில் இருக்கும் புலியூர் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் ஸ்ரீமதி.இவர் நீதித்துறை இறுதி கட்ட நேர்முகத் தேர்வில் கலந்து கொள்ள 200 கிலோமீட்டர் தூரம் பயணம் செய்து சென்னை வந்திருக்கிறார்.குழந்தை பெற்று இரண்டே நாட்கள் தான் அப்போது ஆகி இருந்தது என்பது குறிப்பிடத்தக்க செய்தி.

ஸ்ரீபதியின் செயல் பாடுகளுக்கு பக்கபலமாக இருந்தவர் மகாலட்சுமி என்ற தமிழ் ஆசிரியை.பழங்குடி மாணவர்களுக்காகக் கல்வி சேவை புரிந்து வருபவர்.இவர் தனது முகநூல் பக்கத்தில், குழந்தை பெற்று இரண்டே நாட்களில் நேர்முகத் தேர்வுக்காக ஸ்ரீபதி சென்னைக்கு பயணப்பட்டதை விவரித்து இருக்கிறார்.ஸ்ரீபதியின் தாயாரும் பாராட்டுக்குரியவர் தான் திருமணம் செய்து கொண்ட ஊரில் இருந்தால் பிழைக்க முடியாது என்று எண்ணி தன் சொந்த ஊருக்கே சென்று அங்குள்ள பள்ளியில் தன் மகளை சேர்த்து படிக்க வைத்த அவரின் வைராக்கிய குணம் தான் ஸ்ரீபதிக்கு அப்படியே வந்துள்ளது.யார் சொன்னால் எல்லாருக்கும் கேட்குமோ அந்த இடத்திற்கு எங்கள் வலியைத் தெரிந்த, உணர்ந்த, புரிந்த, ஒருவர் சென்று இருப்பது அவ்வளவு நிம்மதியாகவும்,பெருமையாகவும், பக்கபலமாகவும் உள்ளது என்கிறார் ஆசிரியை மகாலட்சுமி.

உள்ளூர் ஊடகங்களில் ஸ்ரீபதி பற்றிய செய்தி வெளியான பிறகு அவரது சாதனை பரவலான வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது.கிராம மக்கள் இவரது வெற்றியை கொண்டாடும் விதமாக இசைக்கருவிகளை ஒலித்தும், மாலைகள் அணிவித்தும், ஊர்வலமாக அழைத்துச் சென்றும் கௌரவித்தார்கள். ஸ்ரீபதி தன்னுடைய பள்ளிப்படிப்பை ஏலகிரி மலையில் முடித்திருக்கிறார்.அதன் பின்னர் இளங்கலைப் பட்டமும்,சட்டப்படிப்பும் பயின்று இருக்கின்றார்.படிப்புக்கு இடையிலேயே திருமணமானது. ஆனாலும் படிப்பை ஸ்ரீபதி நிறுத்தவில்லை 22 வயதை நிரம்பியவர் என்பதும், பழங்குடியினத்தைச் சேர்ந்தவர் என்பதும், நீதிபதி பதவியை அடைந்திருப்பவர் என்பதும் மகத்தான சாதனையாக பார்க்கப்படுகின்றது.ஸ்ரீபதிக்குத் தேர்வு வரும் தேதியில்தான் அவரது பிரசவத்திற்கான தேதியும் குறிப்பிடப்பட்டிருந்தது,தேர்வுக்கு இரண்டே நாட்கள் இருக்கும்போது குழந்தையும் பிறந்து விட்டது.குழந்தை பிறந்து இரண்டே நாட்களில் 200 கிலோமீட்டர் பயணம் செய்து நேர்முகத் தேர்வையும் எதிர்கொள்வது லேசுப்பட்ட காரியமா என்ன?ஆனால் அந்தச் சவாலை துணிகரமாக எதிர் கொண்டார் ஸ்ரீபதி.அதில் ஜெயித்துக் காட்டிஅசைத்திருக்கிறார்.

திருமணத்திற்கு பிறகு கிராம சபை கூட்டத்தில் பங்கேற்று கிராம வளர்ச்சி தொடர்பாக பல கேள்விகளையும் கேட்டிருக்கிறார்.பலரும் இவரெல்லாம் படித்து என்ன சாதித்து விட போகிறார் என்று புறம் பேசி இருக்கின்றார்கள். ஆனால் அதை எல்லாம் ஊதித் தள்ளிவிட்டு சாதனைத் திலகமாக ஜொலிக்கிறார் ஸ்ரீபதி.மன உறுதி இருந்தால் எந்த சூழ்நிலையும் எதிர்கொண்டு வெற்றி பெற முடியும் என்பதற்கு ஸ்ரீபதி ஒரு நடமாடும் உதாரணம்.இவருக்கு தமிழ்நாடு முதல்வர் வாழ்த்து தெரிவித்திருக்கின்றார்.தனது எக்ஸ் பக்கத்தில் மலை கிராமத்தில் அதிக வசதிகள் இல்லாத பழங்குடி சமூகத்தைச் சேர்ந்த இளம் பெண் ஒருவர் இந்த நிலையை அடைந்திருப்பதைக் கண்டு நான் மகிழ்ச்சி அடைகின்றேன்.ஸ்ரீபதியின் சாதனைக்கு உறுதுணையாக இருந்த அவர் தாயார் மற்றும் கணவருக்கு பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறேன் என்று குறிப்பிட்டு இருக்கிறார்.முயற்சியும்,பயிற்சியும் தொடர்ச்சியாக இருந்தால் இலட்சிய சிகரத்தில் இவரைப்போல வெற்றிக் கொடி நாட்டலாம்.ஆகவே முயற்சித்துப் பாருங்கள்!வெற்றிகனிகள் உங்களுக்காகவும் காத்திருக்கின்றன.