Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

வெற்றிப்பயணம்...

முத்திரை பதிக்கும் முத்தான திட்டங்களால் ஒட்டு மொத்த இந்திய தேசத்தின் கவனத்ைதயும் ஈர்த்து நிற்கிறது தமிழ்நாடு. முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசால் செயல்வடிவம் பெறும் திட்டங்கள் அனைத்தும், இதர மாநிலங்களையும் கவர்ந்துள்ளது. மக்கள் பயன்பெறும் திட்டங்கள் ஒரு புறம் என்றால், மாநிலம் வளம் பெறும் தொழில் மேம்பாடுகள் மறுபுறம் பிரதானமாக உள்ளது. இதில் தனித்துவமாக இருப்பது அயல்நாட்டு முதலீடுகளை தமிழ்நாட்டிற்கு கொண்டு வரும் முதல்வரின் தொலைநோக்கு பார்வை சார்ந்த சுற்றுப்பயணங்கள்.

தமிழ்நாட்டில் கடந்த 2021ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில், திமுக அமோக வெற்றி பெற்றது. இதையடுத்து அமைந்தது முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு. இந்த அரசு அமைந்ததும் தமிழகத்தின் பொருளாதாரத்தை, வரும் 2030ம் ஆண்டிற்குள் ஒரு டிரில்லியன் அமெரிக்க டாலராக மாற்றவேண்டும் என்று பெரும் இலக்கு ஒன்றை நிர்ணயித்தார் முதல்வர். இதற்காக அவரது தலைமையில் அமைந்துள்ள அரசு பல்வேறு நடவடிக்கைகளை துரிதகதியில் மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, தொழில்துறை சார்பில் முதலீடுகளை ஈர்க்கும் பணிகள் சீரியமுறையில் நடைபெற்று வருகிறது.

குறிப்பாக முதல்வர் நடத்தும் முதலீட்டாளர்கள் மாநாடும், முதலீட்டாளர் சந்திப்பும் சிறந்த பலனை கொடுத்து வருகிறது. இது மட்டுமன்றி முதல்வர் வெளிநாடுகளுக்கும் அவ்வப்போது பயணம் செய்து முதலீட்டாளர்கள் கூட்டத்தை நடத்தி வருகிறார். அப்போது, தமிழ்நாட்டில் தொழில் முதலீடுகள் தொடங்க நிறுவனங்கள் மற்றும் தொழிலதிபர்களுக்கு அழைப்பு விடுத்து வருகிறார். இந்த வகையில் ஐக்கிய அரபு அமீரகம், துபாய், சிங்கப்பூர், ஜப்பான், அமெரிக்கா, ஸ்பெயின் என்று நான்கு வெளிநாட்டு பயணங்களை வெற்றிகரமாக முடித்துள்ளார் முதல்வர்.

அதன் தொடர்ச்சியாக இங்கிலாந்து, ஜெர்மனி ஆகிய நாடுகளுக்கு சென்று தொழில் முதலீட்டு புரிந்துணர்வு ஒப்பந்தங்களை மேற்கொள்ள முடிவு செய்தார் முதல்வர். இதற்காக சென்னை விமான நிலையத்தில் இருந்து, நேற்று ஜெர்மனிக்கு பயணப்பட்டுள்ளார். ஜெர்மனியில் 3நாட்கள் தங்கும் முதல்வர் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதோடு தொழில் முனைவோரை சந்தித்து, தமிழகத்தில் முதலீடு செய்ய வருமாறு அழைப்பு விடுக்கிறார். தனது பயணம் குறித்து கருத்து தெரிவித்த முதல்வர், ‘‘தமிழகத்திற்கான பெருமுதலீடுகளை ஈர்ப்பதற்காக, வெளிநாடுகளுக்கு சுற்றுப்பயணம் செய்கிறேன்.

திமுக ஆட்சிக்கு வந்த பிறகு, கடந்த 4ஆண்டுகளில் இதுவரை 10.62லட்சம் கோடி ரூபாய் முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளது. பல்வேறு நிறுவனங்களுடன் 922 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி உள்ளது. புதிய தொழில் முதலீடுகள் ஈர்க்கப்பட்டதன் காரணமாக 32.81லட்சம் பேர், வேலைவாய்ப்புகளை பெற்றுள்ளனர். தமிழகம் தொழில் முதலீடுகளால் வளர்ந்துள்ளதா? என்று கேட்பவர்களுக்கு ஒன்றிய அரசின் புள்ளிவிபரங்களே பதிலாகும்,’’ என்று பெருமிதம் தெரிவித்துள்ளார். இந்த வகையில் உற்சாகம் மிகுந்த முதல்வரின் தற்போதைய சுற்றுப்பயணமும், முதலீடுகளை குவிக்கும் வெற்றிப்பயணமாகும் என்கின்றனர் பொருளாதார நிபுணர்கள்.

அதே நேரத்தில், தொழில் முதலீடுகளை ஈர்க்கச்செல்லும் முதல்வரின் பயணத்திட்டத்தில், தமிழ்நிலத்தின் தனித்துவமும் உயர்ந்து நிற்கிறது. குறிப்பாக முதல்வரின் 7நாள் பயணத்திட்டத்தில், பல்வேறு நிகழ்ச்சிகள் இடம் பெற்றுள்ளது. இதில் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியாரின் திருவுருவ படத்தை முதல்வர் திறந்து வைக்கிறார். இதன்மூலம் பெரியார் பெருமையோடு தமிழ்நிலப் ெபருமையும் உலகமயமாகும் என்பதே நிதர்சனம்.