முயற்சி செய்தால் தான் வாய்ப்பு கிட்டும், அந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்டு உழைத்தால்தான் சிகரம் எட்டும். முட்களுக்கு நடுவில்தான் வாழ்க்கை என்றாலும் ரோஜா சிரித்துக் கொண்டே மலர்கிறதே.. எத்தனை தோல்வி வந்தாலும் அதை துடைத்துப் போட்டு வெற்றியை தேடிப் புறப்படுவதில்தான் இருக்கிறது சந்தோஷத்திற்கான வழி. சிகரங்களை நோக்கிச் சிறகடிக்கும் ஒவ்வொரு சாதனை மனிதரின் வாழ்விலும் சோதனையான வேதனைப் பக்கங்கள் இல்லாமல் இருக்காது. கவலைப்பட்டு கலங்கி நிற்பவர்களால் வெற்றியை எட்டமுடியாது.குரு ஒருவர் மரணப்படுக்கையில் இருந்தார்,அருகில் அவரது சீடன் கவலை தோய்ந்த முகத்துடன் காணப்பட்டார். குரு அவனிடம் சிஷ்யா ஏன் கவலைப்படுகிறாய்? எப்பொழுதும் நான் உன் கூடவே இருப்பேன், கலக்கம் அடையாதே என்றார். உடனே சீடன் கூறினான். குருவே நீங்கள் கூறியபடி தினமும் தியானம் செய்துவருகிறேன். ஆனால் ஆன்மிக நிலை எப்போது வரும் எனத் தெரியவில்லை. உங்கள் காலத்திற்குப் பிறகு இதை நான் யாரிடம் கேட்பது? என்றார்.
இதைக் கேட்ட குரு சிரித்த முகத்துடன் சீடனைப் பார்த்து, கவலைப்படாதே, இந்தக் கட்டிலுக்கு அடியில் ஒரு பெட்டி இருக்கிறது.அதன் உள்ளே பிற்காலத்தில் நீ உபதேசிக்க வேண்டியதைப் பற்றி எழுதி வைத்திருக்கிறேன். அது உன்னை நல்ல முறையில் வழிநடத்தும்,எனது உபதேசம் எப்போது உனக்கு தேவைப்படுகிறதோ, அப்போது மட்டும் பெட்டியை திறந்து பார் என்றார்.அடுத்த நிமிடமே இறந்து போனார். நாட்கள் கடந்து சென்றன. சீடன்தொடர்ந்து ஆழ்ந்த தியானம் செய்து வந்தான். ஆனால் பலன் எதுவும் கிடைக்கவில்லை.ஒரு கட்டத்தில் சோர்ந்து போய் ஆன்மிகத்தில் இருந்து விடுபட்டு விடலாமா என்று நினைக்க ஆரம்பித்தான்.அப்போதுதான் குரு கடைசியாக சொன்னது நினைவுக்கு வந்தது.உடனே பெட்டியை திறந்தான். அதில் குருவின் போதனைகள் இருந்தன, அதை திறம்பட செயல்படுத்தினான். ஞானம் பெற்றான்.சீடன் பெரிய ஞானியாக மாறிப் போயிருந்தார்.ஆனாலும் பக்தர்கள் அவனது கருத்துக்களை ஏற்காமல் இகழ்ந்து பேசி வந்தனர்.இதனால் மனம் நொந்து போன சீடன் மீண்டும் பெட்டியை திறந்து தனது குருவின் உபதேச மொழியைத் திரும்பவும் படித்துப் பார்த்தார்.இதன் பின்னரும் நாட்கள் பல கடந்தன,அதன் பிறகு பக்தர்கள் சீடனின் உபதேசங்களை செவிமடுக்கத் தொடங்கினர்.
இந்த நிலையில் சீடனுக்கு வயதாகிவிட்டது.அப்போது அவருக்கு ஒரு சீடன் இருந்தான். அவனை அருகில் அழைத்து என் அன்புக்குரிய சிஷ்யனே!இறுதி நாட்களில் எனது குரு எனக்கு அளித்த உபதேசத்தை இப்போது நான் உனக்கு அளிக்கிறேன்.பிற்காலத்தில் எனது உபதேசம் உனக்கு தேவைப்படும் காலத்தில் இந்த பெட்டியை திறந்து பார்,உபதேசம் உனக்கு கிடைக்கும் என்றார்.சீடனின் சீடனும் அதனைப் பெற்றுக் கொண்டான்.பின்னர் அவரும் ஆன்மிக ஈடுபாட்டில் தீவிரமாக இருந்தார்.ஆனால் அவரை யாரும் ஞானியாக அங்கீகரிக்கவில்லை.இதனால் நொந்து போன சீடன் தனது குரு அளித்த பெட்டியை திறந்து உபதேசத்தை தெரிந்து கொள்ள நினைத்தான். ெபட்டியை திறந்தான்.அதில் காணப்பட்ட உபதேசத்தை வாசித்தான்.அதில் என்ன வாசகம் எழுதி இருந்தது தெரியுமா..? “இன்னொரு முறை முயற்சி செய்”சாதிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் தொய்வு இல்லாமல் ஈடுபட வேண்டும். முயற்சியில் கிளர்ச்சி அடையும் போதெல்லாம் இன்னொரு முறை முயற்சி செய் என்று மனதிற்குள் மீண்டும் மீண்டும் கூறிக்கொண்டே முயற்சிக்க வேண்டும்.
முயற்சி செய்யுங்கள், முயற்சி செய்யுங்கள், உங்களை சுற்றி இருள் சூழ்ந்திருந்த போதும் முயற்சி செய்யுங்கள்.ஒளி வருகின்ற வேளையிலும் முயற்சி செய்யுங்கள். பயப்படாதீர்கள், உழைப்புடன் முயற்சி செய்யுங்கள்.உலகில் எந்த விஷயமும் உடனடியாக பலனை தருவதில்லை. ஆனால் முயற்சி மட்டுமே பலனை தரும், முயற்சி நம்மை முன்னேற்றப் பாதையில் செல்ல உதவுகிறது என்கிறார் சுவாமி விவேகானந்தர். அப்படி தொடர் முயற்சியால் ஒரு மிகப்பெரிய பதவியைப் பெற்ற ஒரு சாதனை மங்கைதான் கீர்த்தனா. திரை உலகில் நுழைவது அத்தனை சாதாரணமான விஷயம் கிடையாது, அதிலும் நடிகராக - நடிகையாக ஜொலிப்பது மிகவும் கடினமானது. சின்ன கேரக்டர் ரோலிலாவது தலைகாட்டி விட மாட்டோமா என்ற திரையுலக ஏக்கத்திலேயே இங்கு பலரும் தங்கள் இளமைக் காலங்களை வீணடித்து வருகின்றனர். அப்படி இருக்க திரைத்துறையின் உச்சம் தொட்ட நடிகை ஒருவர், தனது திரையுலக வாழ்க்கைக்கு முழுக்கு போட்டுவிட்டு, தனது கனவை நிஜமாக்க யு.பி.எஸ்.சி தேர்வு எழுதி அதில் வெற்றி பெற்று தற்போது ஐ.ஏ.எஸ் அதிகாரியாக மாறிஇருக்கிறார். 90களில் திரையுலகில் கோலோச்சிக் கொண்டிருந்த நடிகை கீர்த்தனா தான், நடிப்புக்கு முழுக்கு போட்டுவிட்டு ஐ.ஏ.எஸ் அதிகாரியாக மாறிய அந்த பிரபலம். தனது திரையுலக வாழ்க்கையை குழந்தை நட்சத்திரமாக நான்கு வயதில் தொடங்கியவர் கீர்த்தனா. வெகுவிரைவாகவே சினிமாத் துறையில் தனக்கென ஒரு இடத்தை கெட்டியாக பிடித்துக் கொண்ட கீர்த்தனா, பல படங்களிலும் குழந்தை நட்சத்திரமாக முன்னணி நடிகர்களுடன் நடித்து புகழ் வெளிச்சத்தில் இருந்தார்.பல படங்கள், தொலைக்காட்சி தொடர்களில் நடித்தவர் கீர்த்தனா.இது வரை 32 படங்களிலும், 48 தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்து உள்ளார்.
எனினும் தனது 15 வயதில் புகழின் உச்சத்தில் இருந்தபோதே சினிமாத்துறையில் இருந்து விலகிய நடிகை கீர்த்தனா தனது தந்தையின் ஆசைப்படி, தான் ஒரு ஐஏஎஸ் ஆக வேண்டும் என்பதற்காக படிப்பில் கவனம் செலுத்தினார். தந்தையின் கனவை தனது கனவாக மாற்றிக் கொண்டார். தனது கனவை நிஜமாக்க தொடர் முயற்சியை கையாண்டார். முதல் 5 முயற்சிகளில் தோல்வி அடைந்த கீர்த்தனா, மன உறுதியுடன் மீண்டும் தேர்வு எழுதி தனது ஆறாவது முயற்சியில் 2020 ஆம் ஆண்டு யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்றார். கர்நாடக மாநிலத்தின் மாண்டியா மாவட்டத்தின் துணை கமிஷனராக அவர் தனது முதல் குடிமைப் பணியை தொடங்கினார். இரண்டு ஆண்டு கால பயிற்சிக்குப் பின்னர் அவர் தற்போது அதே மாண்டியாவின் துணை கமிஷனர் ஆக பணியாற்றி வருகிறார்.முன்னதாக அவர் 2011 ஆம் ஆண்டு கர்நாடகா மாநில நிர்வாக பணியாளர் தேர்வில் வெற்றி பெற்று இரண்டு ஆண்டு காலம் பணியாற்றி வந்தார். என்னிம் தன் இலட்சியத்தை அடைந்தே தீர வேண்டும் என்று தொடர்ந்து யுபிஎஸ்சி தேர்வில் வெற்றிபெற்று தற்போது ஐஏஎஸ் ஆக மாறி இருக்கிறார்.
2013ம் ஆண்டு முதல் யுபிஎஸ்சி தேர்வு எழுதிவரும் கீர்த்தனா 2020 ஆம் ஆண்டு தனது ஆறாவது முயற்சியிலேயே வெற்றி பெற்றுள்ளார். இதனை அவர் மகிழ்ச்சியுடனும் கூறுகிறார் ஏனெனில் பலரும் தாங்கள் எத்தனை முறைக்கு பின்னர்யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்றோம் என்பதை சொல்வதற்கு தயங்குகின்றனர்.ஆனால் இது என்னுடைய மன உறுதியை காட்டுகிறது.எனவே நான் ஆறாவது முயற்சிலேயே தான் வெற்றி பெற்றேன் என்பதை பெருமிதமுடன் கூறுவேன் என கீர்த்தனா கூறியிருக்கிறார். பொதுவாக நடிகர்களிடம் நீங்கள் நடிக்க வராவிட்டால் என்னவாக இருப்பீர்கள் என கேள்வி கேட்பார்கள். ஆனால் கீர்த்தனா நீங்கள் ஐஏஎஸ் ஆகாவிட்டால் என்ன ஆகி இருப்பீர்கள் என்றால், நாமே அதற்கு நிச்சயமாக அவர் ஒரு புகழ் பெற்ற நடிகையாக மாறி இருப்பார் என்பதை கூறலாம். புகழின் வெளிச்சத்தில் இருந்த கீர்த்தனா திரைத்துறையிலும் சாதித்து தற்போது தனது கனவுப் பணியான ஐஏஎஸ் தேர்விலும் வெற்றி பெற்று பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.இவரைப் போல உழைப்புடன் கூடிய தொடர்பு முயற்சியை செயல்படுத்த வேண்டும். நம்முடைய முயற்சி வெற்றி பெறுமா?வெற்றி பெறாதா?என்ற சிந்தனையில் குழம்ப வேண்டியதில்லை.முயற்சிகள் தோற்கலாம். ஆனால் முயற்சி செய்பவன் ஒருபோதும் தோற்பதில்லை.உறுதியான உழைப்போடு முயற்சி செய்யுங்கள். அது வெற்றிக்கு வழிவகுக்கும்.