தனிநபர் வருமானம் என்பது ஒரு நாட்டில் தனிநபர், தனது வேலைவாய்ப்பு, சுயதொழில் மூலம் பெறும் வருமானம் உள்ளிட்டவற்றை கணக்கிட்டு கூறப்படுவதாகும். சில சமயங்களில் தனிநபர் சார்ந்த கூட்டுத்தொழில் மூலமும், குடும்ப உறவுகள் மூலம் பெறப்படும் வருமானமும் கணக்கிடப்படும். அந்த வகையில் இந்தியாவின் தனிநபர் வருமானம், கடந்த 2024-25ம் ஆண்டில் ரூ.1,14,710 ஆக உயர்ந்துள்ளது. 2014-2015ம் ஆண்டு கணக்கெடுப்பின்படி தேசிய அளவில் தனிநபர் வருமானம் ரூ.72,805 ஆக இருந்தது. தற்போது சுமார் 58 சதவீதம் வரை உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவை பொறுத்தவரை கடந்தாண்டில் தனிநபர் வருமானம் அதிகமுள்ள மாநிலத்தில் கர்நாடகா முதலிடத்தை பிடித்துள்ளது. இம்மாநிலத்தில் தனிநபர் வருமானம் ரூ.2 லட்சத்து 6 ஆயிரத்து 605 ஆக உள்ளது. தமிழகத்தில் தனிநபர் வருமானம் ரூ.1 லட்சத்து 96 ஆயிரத்து 309 ஆக உள்ளதாக ஒன்றிய அரசு வெளியிட்ட புள்ளிவிபரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது 2023-24ம் ஆண்டை விட 9.69 சதவீத பொருளாதார வளர்ச்சியாகும்.
சென்னை உட்பட பல மாவட்டங்களில் இயற்கை பேரிடர் பாதிப்பு கடுமையான சூழலிலும், தனிநபர் வருமானத்திற்கு எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை. இது திராவிட மாடல் அரசின் பொருளாதார வளர்ச்சியை நோக்கிய பயணத்தில் முக்கிய மைல் கல்லாக பார்க்கப்படுகிறது. தமிழகத்தை பொறுத்தவரை திமுக அரசு கடந்த மே 7, 2021ல் ஆட்சிப் பொறுப்பை ஏற்ற பின் மாநிலத்தில் முதலீட்டாளர்கள் மாநாட்டை தொடர்ந்து நடத்தி வந்தது. முதல்வர் மு.க.ஸ்டாலின் வரும் 2030ம் ஆண்டுக்குள் ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக உயர வேண்டுமென தொடர்ந்து கூறி வந்தார்.
2021ல் திமுக அரசு பொறுப்பேற்றதில் இருந்து நடத்தப்பட்ட முதலீட்டாளர்கள் மாநாடு, சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாடு, வெளிநாட்டு முதலீடு சார்ந்த பயணங்கள் உள்ளிட்டவை மூலம் சுமார் 895 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளன. சுமார் ரூ.10.15 லட்சம் கோடி முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளன. 33 லட்சத்துக்கும் மேற்பட்டோர் வேலை வாய்ப்பு பெறும் சூழல் உருவாக்கப்பட்டுள்ளன.
ஆண்களுக்கு நிகராக பெண்களும் படித்தும், உழைத்தும் முன்னேற வேண்டும் என்பதற்காக தமிழகத்தில் நிறைவேற்றப்பட்ட திட்டங்களும் தனிநபர் வருமானத்தை உயர்த்துவதில் முக்கிய பங்காற்றுகின்றன. அதாவது, ஆட்சிப் பொறுப்பை ஏற்றதுமே அரசு நகர பேருந்துகளில் மகளிருக்கு இலவச பயணம் என்று அறிவித்த திட்டத்தின் மூலம், சுமார் 700 கோடி இலவச பயணங்கள் இந்த 4 ஆண்டுகளில் நிகழ்ந்துள்ளன.
இது கல்வி, வேலை, சுயதொழில் உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகளில் பெண்களை பொருளாதார சிரமமின்றி பங்கேற்க வைத்துள்ளது என்று கூறுவது மிகையல்ல. மேலும், 4.95 லட்சம் கல்லூரி மாணவிகளுக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் புதுமைப்பெண் திட்டம், 1.15 கோடி மகளிர்க்கு மாதந்தோறும் ரூ.1,000 உரிமைத்தொகை, மாணவர்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் தமிழ் புதல்வன் திட்டம், வீடு தேடி மருத்துவம், வீடு தேடி கல்வி தரும் திட்டம் உள்பட மக்களின் நலன் மற்றும் வாழ்வாதரத்தை உயர்த்தும் எண்ணற்ற திட்டங்களும், மிக முக்கிய காரணங்களாக பார்க்கப்படுகிறது.
தனிநபர் வருமானத்தை மென்மேலும் உயர்த்தி இந்தியாவிலேயே முதன்மையானதாகவும், பொருளாதாரத்தை மேலும் உயர்த்தி, நம்பர் ஒன் மாநிலமாக தமிழகத்தை உருவாக்க வேண்டுமென்ற லட்சிய இலக்கை நோக்கி பயணிக்க வேண்டுமென்பதே முதல்வர் மு.க.ஸ்டாலின் விருப்பமாகும். அதை தமிழகம் அடையும் நாட்களும் வெகுதூரத்தில் இல்லை என்பதே நிதர்சனம்.