Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

திடமான இலக்கு! தீர்க்கமான வெற்றி!

அசைக்க முடியாத இலக்கு வெற்றியாளரின் முதலாவது குணாதிசயம் ஆகும். திடமான இலக்கு இல்லாதவர்கள் தங்கள் வாழ்வில் பெரும்பாலும் தோல்வியைச் சந்திக்கும் நிலை ஏற்படும். இன்று நம் கண் முன்னே காணும் வெற்றியாளர்கள் பலரும் தங்கள் இலக்கைத் திடமாக அமைத்துக் கொண்டு அதன் வழியே சீராக பயணம் செய்ததால் தான் சிறப்பான வெற்றியை அவர் களால் பெற முடிந்தது. உங்களின் இலக்கு வைரம் போல் பளிச்சென்று மின்னும்படி இருக்க வேண்டும். அப்போதுதான் மற்றவர்களிடம் இருந்து உங்களை நீங்கள் வித்தியாசப்படுத்தி காண்பித்து முன்னேற்றப் பாதையில் ஜொலிக்க முடியும். சரியான இலக்குடன் மெல்லமெல்ல அடி எடுத்து வைத்துச் சரியான திசையில் சென்றால் தீர்க்கமான வெற்றி கிடைக்கும். அப்படி சரியான,திடமான இலக்குடன் கூடிய உழைப்பை கொண்டு தீர்க்கமான வெற்றியைப் பெற்ற ஒரு சாதனை மங்கைதான் அனுப்பிரியா.வாழ்வில் எத்தகைய சூழலிலும் திடமான இலக்குடன் விடாமுயற்சி செய்தால் பிறருக்கு நாம் முன்மாதிரியாக இருக்கலாம் என்பதை நிரூபித்திருக்கிறார் 27 வயது அனுப்பிரியா மதுமிதா லக்ரா. மாவோயிஸ்ட்டுகள் நடமாட்டம் அதிகம் இருக்கும் ஒடிசாவின் மலங்கிரி மாவட்டத்தைச் சேர்ந்த அனுப்பிரியா இந்தியாவின் முதல் பழங்குடியின பெண் பைலட் என்ற பெருமையை பெற்றிருக்கிறார்.

பைலட் ஆக வேண்டும் என்ற தனது வாழ்க்கைக் கனவை நிறைவேற்றி இண்டிகோ ஏர்லைன்ஸ்-ல் இணை பைலட்டாக பணியில் சேர்ந்திருக்கிறார் அனுப்பிரியா. இவரின் தந்தை மரினியாஸ் லக்ரா மலங்கிரி காவல் நிலையத்தில் கான்ஸ்டபிளாக பணியாற்றுகிறார். லக்ராவின் தாயார் ஜிமாஜ் தனது மகள் அடைந்திருக்கும் உச்சத்தால் ஒட்டு மொத்த மாநிலமுமே பெருமைப் படுவதாகவும், இது தங்கள் குடும்பத்திற்கு மகள் தேடித் தந்திருக்கும் மதிப்பு, மரியாதை என்று பெருமையோடு சொல்கிறார். எங்களுக்குப் போதுமான பொருளாதார உதவிகள் இல்லாவிட்டாலும் மகள் லக்ராவின் கனவுகளுக்கு ஒரு போதும் தடை போட்டதில்லை என்கிறார் ஜிமாஜ்.

பைலட் பயிற்சிக்காக அனுவிற்கு கட்டணம் கட்டுவதற்குக் கூட என்னிடம் பணம் இல்லை. கடன் வாங்கியும், உறவினர்களிடம் உதவி கேட்டும் நிதியுதவி பெற்றேன் என்கிறார் அவரது தந்தை. எவ்வளவோ கஷ்டங்களை வாழ்வில் சந்தித்த போதும் என்னுடைய மகளின் கல்வி பற்றிய கனவில் அவை பிரதிபலிக்கக் கூடாது என்பதில் நான் உறுதியாக இருந்தேன். அனுப்பிரியா விரும்பும் துறையில் அவள் சிகரம் தொட உறுதுணையாக இருக்க வேண்டும் என்று நினைத்தேன். அது இன்று நிறைவேறி இருக்கிறது என்று மகிழ்ச்சியோடு சொல்கிறார்.என் மகள் அவளது கனவை அடைந்துள்ளார். அனுப்பிரியா மற்ற பெண்களுக்கு உதாரணமாக இருக்க வேண்டும் என்று நான் நினைத்தது நிரூபணம் ஆகியுள்ளது. எல்லா பெற்றோரும் தங்கள் மகளின் முடிவுகளுக்கு துணை நிற்க வேண்டும் என்று ஆலோசனை கூறுகிறார் ஜிமாஜ்.அனுப்பிரியா லக்ரா பைலட் ஆகி இருப்பதற்கு முதலமைச்சர் நவீன் பட்நாயக் சமூக வலைதளத்தில் பாராட்டு தெரிவித்துள்ளார். அனுப்பிரியாவின் சாதனை மகிழ்ச்சியளிக்கிறது. இவர் மற்ற பெண்களுக்கு ஒரு முன்மாதிரியாகியுள்ளார் என்றும் அவர் பாராட்டியுள்ளார்.

ஒடிசாவில் ரயில்வே போக்குவரத்து கூட இல்லாத மலங்கிரி மாவட்டத்தைச் சேர்ந்த பழங்குடியினப் பெண் பைலட் ஆகிஇருக்கிறார். இந்தியாவின் முதல் பழங்குடியினப் பெண் பைலட் ஆக சாதித்துள்ளார் அனுப்பிரியா.ரயில் தண்டவாளம் கூட இல்லாத எங்கள் கிராமத்தைச் சேர்ந்த பெண் விண்ணில் தன்னுடைய சிறகை விரித்து பறக்கப் போகிறார் என்பது எங்களுக்கு மிகவும் மகிழ்ச்சியான செய்தி என்று பழங்குடியினத் தலைவரும், ஒடிசா ஆதிவாசி கல்யாண் மஹாசங்ஹாவின் தலைவருமான நிரஞ்சன் பிஸி கூறியுள்ளார்.வசிப்பதற்கு நல்ல வீடு கூட இல்லாத பாழடைந்த வீட்டில் அனுப்பிரியா அவரின் தாய், தந்தை மற்றும் சகோதரர் வசித்து வருகின்றனர். மலங்கிரியில் பிறந்து வளர்ந்த அனுப்பிரியா, மிஷினரி பள்ளியில் படிப்பை முடித்தார். அருகில் இருந்த கோரபுட் மாவட்டத்தில் உயர்நிலை கல்வி படித்தவர் 2012ம் ஆண்டு புவனேஸ்வரில் உள்ள அரசு பொறியியல் கல்லூரியில் சேர்ந்தார்.பொறியியல் படிப்பில் சேர்ந்த சில மாதங்களிலேயே அவருக்கு பைலட் பணியில்தான் விருப்பம் இருக்கிறது என்பது புரிய பொறியியல் கல்லூரியில் இருந்து வெளியேறியவர் அரசு விமானப் பயிற்சி மையத்தில் சேர்ந்து விமானிக்கான பயிற்சி பெற்றார்.

கடந்த 7 ஆண்டுகளாக விமானி பயிற்சி பள்ளி கட்டணத்திற்காக பல்வேறு கடனை வாங்கியுள்ளோம். கமர்ஷியல் பைலட் உரிமம் பெறுவதற்காக அனு பல தேர்வு எழுத வேண்டி இருந்தது. எனினும் இலக்கை அடைய பணம் தடையாக இருக்காத வகையில் அனுப்பிரியாவை மனம் தளராமல் பார்த்துக் கொண்டதாகக் கூறுகிறார் ஜிமாஜ்.4.2 கோடி மக்கள் தொகையைக் கொண்ட ஒடிசாவில் 22.95 சதவிகிதம் பழங்குடியின மக்கள் இருக்கின்றனர்.57.4 சதவிகித மாவட்டங்களில் பழங்குடியின மக்கள் வசிக்கும் நிலையில் மலங்கிரியில் அதிக சதவிகித பழங்குடியினர் வசிக்கின்றனர். ஒடிசா 73 சதவிகிதம் படிப்பறிவு பெற்ற மாநிலமாக இருந்தாலும் 41.20% பழங்குடியின பெண்கள் மட்டுமே கல்வியறிவு பெற்றுள்ளனர். இத்தகைய வாழ்க்கைச் சூழலில்தான் தன்னுடைய கனவை அடைந்திருக்கும் அனுப்பிரியா லக்ராவை நினைத்து நாடே பெருமை கொள்கிறது.இவரைப் போல தெளிவான இலக்கை தீர்மானித்துக் கொள்ளுங்கள்.  அந்த இலக்கை நோக்கி துணிச்சலுடன் பயணம் செய்யுங்கள். உங்கள் வாழ்வில் வெளிப் படைத்தன்மை, நேர்மையை கையாளுங்கள். தொடர்ந்து விடாமுயற்சியுடன், உழைத்துக்கொண்டே இருங்கள்.தடைகளுக்குள் சிக்கிக்கொள்ளாமல், துணிச்சலுடன் அதை எதிர்கொண்டு வெற்றி பெற முயற்சி செய்து கொண்டே இருங்கள். நிச்சயம் ஒரு நாள் வெற்றி உங்கள் வசப்படும்.