Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

வெற்றிபெறத் தயாராகுங்கள்!

நமது எண்ணங்களும், பழக்கவழக்கங்களும் நல்லவைகளாக அமைந்தால் அவை நமக்கு வெற்றியை தருகின்றன.அந்த பழக்கங்கள் தீங்கு தரும் வகையில் அமைந்தால் அவை நமது எதிர்காலத்தை சிதைக்கும் வகையில் அமைந்து விடுகின்றன.இந்தப் பழக்கங்கள் எல்லாம் எவ்வாறு உருவாகின்றன என்பதைக் கூர்ந்து கவனித்தால் சில உண்மைகளை நாம் புரிந்துகொள்ளலாம்.பொதுவாக, நமது மனதில் ஆயிரம், ஆயிரம் எண்ணங்கள் அலையலையாய் வந்து போகும். அந்த எண்ணங்களில் நல்லது எது? கெட்டது எது? என்பதை அறிந்துகொள்ளத் தவறியவர்களுக்கு வாழ்க்கையில் பல்வேறுவடிவங்களில் சிக்கல்களும், குழப்பங்களும் உருவெடுக்கின்றன.

மனதில் தேவையற்ற எண்ணங்களைக் குப்பை போல சேர்த்து வைப்பதால் மனம் குப்பைத் தொட்டியாக மாறிவிடுகின்றது.குறிப்பாக எரிச்சல், கோபம்,பொறாமை போன்றவைகுப்பைகளாக மனதில் தேங்குவதால் ஒருவரின் மனம் எளிதில் கெட்டுப் போய் விடுகின்றது. மனம் தெளிவாக இருந்தால்தான் செயல்கள் தெளிவாக அமையும் என்பதை இந்த சம்பவம் நமக்கு உணர்த்துகின்றது.அவர்கள் இளம்ஜோடிகள்,திருமணம் ஆனபின்பு ஆறு மாதத்திற்குள் தனிக்குடித்தனம் போனார்கள். புத்தம்புதிய வீடு அடுக்குமாடி கட்டிடத்தில் அமைந்திருந்தது. அவர்களின் சமையலறை ஜன்னல் வழியாக பார்த்தால் எதிர்வீட்டின் வாசல் தெரியும்.ஒருநாள் ஜன்னல் வழியாக எதிர்வீட்டு வாசலைக் கவனித்த மனைவி தனதுகணவனிடம் சொன்னாள். எதிர் வீட்டுக்காரம்மா துணி துவைத்து விட்டு வாசலிலே காயப் போடுகிறார்கள், அந்த துணிகளை கவனித்தீர்களா? ஒரே அழுக்காகவே இருக்கிறது. அவர்துணியை துவைத்த பின்பும் ஒரே அழுக்காக இருக்கிறது என்றாள். மனைவி பேச்சை கணவன் கூர்ந்துகவனித்தான்.

வீட்டு மாடியில் இருந்து ஜன்னல் வழியாக பார்த்த போது எதிர்வீட்டு வாசலில் உலர்த்தப்பட்ட துணிகள் அழுக்காகவே தெரிந்தன, மறுநாளும் தனது கணவனை அழைத்து மனைவி சொன்னாள்.கொஞ்சம் கூட பொறுப்பில்லாமல் அந்த அம்மா இருக்கிறார்கள். வீட்டு வாசலில் துவைத்துப் போடப்பட்ட துணிகள் ஒரே அழுக்காக இருக்கிறது என்றாள். அன்றும் ஜன்னல் வழியாக கவனித்தான் கணவன். எதிர் வீட்டு வாசலில் உலர்த்தப்பட்ட துணிகள் அழுக்காகவே காணப்பட்டது. கணவன் எந்தப் பதிலும் சொல்லாமல் சமையல் அறையை விட்டு நகர்ந்தான். எதிர்வீட்டை பார்த்து குறை சொல்லும் பழக்கம் தொடர்ந்தது, இருந்தபோதும் மனைவி சொல்லும்போதெல்லாம் அமைதி காத்தான் கணவன். இந்தப் பழக்கம் தொடர்ந்து வழக்கமானது. நாள்தோறும் குறை சொல்லும் பழக்கம் தொடர்ந்தது.

ஒரு நாள் சமையல் அறை ஜன்னல் வழியாக பார்த்த மனைவிக்கு ஆச்சரியமாக இருந்தது. எதிர் வீட்டில் துவைக்கப்பட்டு உலர்த்தப்பட்ட ஆடைகள் அனைத்தும் பளிச்சென சுத்தமாக இருந்தது. மனைவி கணவனை அழைத்தாள். அவசர அவசரமாக சமையலறைக்கு வந்தான் கணவன். இங்கே பாருங்க எதிர் வீட்டு அம்மா இப்போது நன்றாக துணிகளை துவைக்க ஆரம்பித்து விட்டார்கள்.சோப்பைமாற்றிவிட்டார்கள் என்று நினைக்கின்றேன். நல்ல சோப்பாக இருப்பதால் துணிகள் பளிச்சென்று வெண்மையாகத் தெரிகின்றன என்றாள் மனைவி.கணவன் தனது மனைவி அருகில் சென்று மெதுவாகச் சொன்னான்,

நீ நினைத்தது போல, அந்த அம்மா புதிய சோப்பு பயன்படுத்தியதால் அவர்களின் ஆடைகள் வெண்மையாகத் தெரியவில்லை. நான் இன்றைக்கு நமது வீட்டு சமையலறையை சுத்தம் செய்யும் போது சமையலறை ஜன்னலிலுள்ள கண்ணாடிகளையும் சுத்தம் செய்தேன். நம் வீட்டுக் கண்ணாடி இப்போது தெளிவாக இருப்பதால் உனக்கு எதிர்வீட்டில் காயப்போட்டு இருக்கின்ற துணிகள் பளிச்சென்று தெரிகின்றன. இவ்வளவு நாளும் நீ அந்த அம்மாவைக்குறை சொல்லிக் கொண்டிருந்தாய்,, ஆனால் உண்மையில் குறை அந்த அம்மாவிடம் இல்லை. உன்னிடம் தான் இருக்கிறது.அழுக்கு அவர்கள் துணியில் இல்லை, நம் வீட்டுக் கண்ணாடியில்தான் இருக்கிறது என்றான் கணவன்.

பல நேரங்களில் நாம் அடுத்தவர்களைக்குறை சொல்வதை வழக்கமாகக் கொண்டிருக்கின்றோம்.நமது மன அழுக்குகளை நீக்க முயற்சி செய்யாமல் அடுத்தவர்கள்மீது குற்றம் சொல்லும் குணம் நமது எதிர்காலத்தையே கேள்விக்குறியாக்கிவிடும்.

நம்மைப்பல்லாக்கில் ஏற்றுவதும், நம் பல் உடைந்து போக வழி வகுப்பதும் நமது இளமைகாலப்பழக்கங்கள் தான்.எனவே நல்ல பழக்க வழக்கங்களை இளம் வயதில் பழகிக் கொண்டு உயர்ந்த இலக்கை தீர்மானித்து வெற்றிகளை குவிக்க பழகுவோம். இதற்கு உதாரணமாய் இந்த சாதனை பெண்மணியைச சொல்லலாம்.உலகின் மிக உயரமான போர்க்களமான சியாச்சின் பனிப்பாறைப் பகுதியில் பணியாற்றிய இந்திய ராணுவ வான் பாதுகாப்புப்படையின் முதல் பெண் அதிகாரி என்ற பெருமையை கேப்டன் சுப்ரீதா CT படைத்துள்ளார்.தனது அர்ப்பணிப்பு மற்றும் விடாமுயற்சியை வெளிப் படுத்தி, ஒரு மாதகாலக் கடுமையான பயிற்சியை முடித்த பிறகு அவர் இந்தப் பகுதியில் பணிபுரிய நியமிக்கப்பட்டிருக்கிறார்.2021 ஆம் ஆண்டு,இந்திய இராணுவத்தில் லெப்டினன்டாக சுப்ரீதா சேர்ந்தார்.பல சாதனைகளையும் அவர்படைத்திருக்கிறார்.

அவர் லடாக்கின் காரகோரம் மலைத்தொடரில் சுமார் 20,000 அடி உயரத்தில் அமைந்துள்ள சியாச்சின் பனிப்பாறைப் பகுதியில் பணியமர்த்தப்பட்டுள்ளார். இவரது கணவர் ஜெர்ரி பிளேஸ் என்பவரும் ஒரு ராணுவ வீரர் தான்.மேஜராக பணிபுரிகிறார்.சுப்ரீதாவுக்கு இன்னொரு பெருமையும் உண்டு. புதுடெல்லியில் நடைபெற்ற 75வது குடியரசுத்தின அணிவகுப்பில் இந்திய ராணுவ ஜோடியான மேஜர் ஜெர்ரி பிளேஸ் மற்றும் சுப்ரிதா ஆகிய இருவரும் கலந்துகொண்டனர். கார்த்தவ்யா பாதையில் இருவரும் மிடுக்காக அணிவகுப்பில் பங்கேற்றனர்.ராணுவத்தில் பணிபுரியும் கணவன்,மனைவி இருவரும் குடியரசு அணிவகுப்பில் ஒன்றாகக் கலந்து கொண்டது இதுவே முதல் முறையாகும். கல்லூரிக் காலத்தில் இருவரும் என்சிசியில் இருந்திருக்கின்றனர்.கேப்டன் சுப்ரீதாவுக்கு சொந்த ஊர் மைசூர். சட்டம் பயின்றவர். படித்தது அங்கே இருக்கும் ஜே.எஸ்.எஸ் சட்டக் கல்லூரியில், நீலகிரி மாவட்டத்தில் இருக்கும் வெலிங்டனைச்சேர்ந்தவர் மேஜர் ஜெர்ரி பிளேஸ்.இவர் பட்டப்படிப்பை பெங்களூரில் இருக்கும் ஜெயின் பல்கலைக்கழகத்தில் முடித்திருக்கிறார்.இருவரும் வசிப்பது டெல்லியில்.

இருவரும் அணிவகுப்பில் கலந்து கொள்வது தற்செயலாக நடந்தது என்கின்றனர். முதலில் சுப்ரீதா அவரது படைப்பிரிவில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். அதைத் தொடர்ந்து ஜெர்ரி பிளேஸ் அவரது பிரிவிலிருந்து தேர்வாகியிருக்கிறார். இந்த நிகழ்ச்சி தங்களுக்கும்,குடும்பத்தினருக்கும் மிகவும் பெருமை அளிக்கிறது என்கின்றனர்.சுப்ரீதா பணியாற்றும் சியாசின் பனிப்பாறைப் பகுதியில் வெப்பம் -50°Cக்கும் குறைவாக இருக்கும். காற்றின் வேகம் மணிக்கு 100 கி.மீ வரை வீசும். மிகக் கடுமையான தட்பவெப்ப நிலையில் சவால்களை சமாளித்து பணியாற்றுகிறார் இந்த வீரமங்கை. கேப்டன் சுப்ரீதாவின் சாதனை பலருக்கும் தூண்டுகோலாக இருக்கிறது. குறிப்பாக இந்திய ராணுவத்தில் சேர்ந்து,நாட்டுக்காகச் சேவை செய்ய நினைக்கும் இளம் பெண்களுக்கு சுப்ரீதா ஒரு ரோல்மாடலாகத்திகழ்கிறார்.

எவ்வளவு பெரிய கட்டிடமாக இருந்தாலும்,அது ஒரே நாளில் உயர்ந்து வானத்தை தொடவில்லை. ஒரு பெரிய மரம் ஒரே நாளில் வளர்ந்து, வளர்ந்து உயர்ந்து விடவில்லை. பெரிய காவியங்கள் ஒரே நாளில் படைக்கப்படவில்லை.ஆயிரம் மைல் பயணம் என்றாலும் அது ஒற்றை அடியில் தான் தொடங்குகிறது என்று சொல்வார்கள்.ஆகவே சுப்ரீதாவை போலவே நீங்களும் உங்களுடைய முதல் அடியை எடுத்து வையுங்கள்,வெற்றிபெற தயாராகுங்கள்.