துணை ஜனாதிபதி தேர்தலில் கட்சி மாறி வாக்களித்தது பற்றி விசாரணை நடத்த வேண்டும்: மணிஷ் திவாரி வலியுறுத்தல்
புதுடெல்லி: துணை ஜனாதிபதி தேர்தல் கடந்த 9ம் தேதி நடந்தது. இதில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணன் 452 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணி வேட்பாளர் பி.சுதர்சன் ரெட்டி 300 வாக்குகளுடன் தோல்வி அடைந்தார். இதில் இந்தியா கூட்டணி எம்பிக்கள் 14 பேர் கட்சி மாறி வாக்களித்ததாக புகார் எழுந்துள்ளது.
இந்த புகார் குறித்து தீவிர விசாரணை நடத்த வேண்டும் என காங்கிரஸ் தலைவர் மணிஷ் திவாரி வலியுறுத்தி உள்ளார். இதுகுறித்து டெல்லியில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய மணிஷ் திவாரி, “கட்சி மாறி வாக்களித்தது என்பது மூன்று பரிமாணங்களை கொண்டுள்ளது. முதலாவது, பேராசை, இரண்டாவது நம்பிக்கை மீறல் மற்றும் மூன்றாவது கட்சி தலைமையின் தோல்வி. எனவே இதுஒரு தீவிரமான விவகாரம். ஒவ்வொரு கட்சியின் தலைமையும் இதுபற்றி தீவிர விசாரணை நடத்த வேண்டும். இவ்வாறு தெரிவித்தார்.