துணை ஜனாதிபதி தேர்தலில் சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு வாக்களித்த 14 எம்பிக்கள் யார்? இந்தியா கூட்டணியில் சலசலப்பு
புதுடெல்லி: துணை ஜனாதிபதி தேர்தலில் இந்தியா கூட்டணி சார்பில் பி.சுதர்சன் ரெட்டியும், தேசிய ஜனநாய கூட்டணி சார்பில் மகாராஷ்டிரா ஆளுநரும், தமிழ்நாட்டை சேர்ந்தவருமான சி.பி.ராதாகிருஷ்ணனும் போட்டியிட்டனர். இதில் சி.பி.ராதாகிருஷ்ணன் 452 வாக்குகள் பெற்று புதிய துணை ஜனாதிபதியாக தேர்வு செய்யப்பட்டார். இந்தியா கூட்டணி வேட்பாளர் சுதர்சன் ரெட்டிக்கு 300 வாக்குகள் மட்டுமே கிடைத்தது. 15 வாக்குகள் செல்லாத வாக்குகளாக பதிவானது. சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு 438 வாக்குகள் மட்டுமே கிடைத்து இருக்க வேண்டும்.
ஆனால் 14 வாக்குகள் கூடுதலாக 452 வாக்குகள் பெற்றார். அதே சமயம் இந்தியா கூட்டணி சார்பில் 315 வாக்குகள் பதிவாகி இருக்க வேண்டும். ஆனால் சுதர்சன் ரெட்டிக்கு 300 வாக்குகள் மட்டுமே கிடைத்தது. இந்த தேர்தலில் 15 வாக்குகள் செல்லாத வாக்குகளாக பதிவானதும், 14 வாக்குகள் இடம் மாறி சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு கிடைத்ததும் இந்தியா கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
இதுதொடர்பாக ஒன்றிய அமைச்சர் கிரண் ரிஜிஜூ தனது எக்ஸ் தள பதிவில்,’ துணை ஜனாதிபதி தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு மனசாட்சியுடன் வாக்களித்த இந்தியா கூட்டணியின் சில எம்பிக்களுக்கு சிறப்பு நன்றி. இந்தியாவின் புதிய துணைஜனாதிபதியாக ஒரு பணிவான மற்றும் திறமையான மனிதரையும் உண்மையான தேசபக்தரையும் தேர்ந்தெடுத்ததற்கு அனைவருக்கும் வாழ்த்துக்கள்’ என்று பதிவிட்டு இருந்தார்.
அவரது பதிவால் ஆத்திரம் அடைந்த காங்கிரஸ் மூத்த தலைவர் மணீஷ் திவாரி கூறுகையில்,’ துணை ஜனாதிபதி தேர்தலில் அணி மாறி வாக்குகள் பதிவாகி இருந்திருந்தால், அதை இந்தியா கூட்டணியின் ஒவ்வொரு அங்கத்தினரும் தீவிரமாக விசாரிக்க வேண்டும். அணி மாறி வாக்குகள் பதிவு செய்வது மிகவும் தீவிரமான விஷயம். சொல்லப்படும் அல்லது ஊகிக்கப்படும் விஷயங்களில் சிறிதளவு உண்மை இருந்தால், அது முறையான மற்றும் உரிய விசாரணைக்கு தகுதியானது’ என்று குறிப்பிட்டார். இதனால் இந்தியா கூட்டணியில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.
* நாங்க இல்ல..
தேசியவாத காங்கிரஸ் கட்சியின் சுப்ரியா சுலே கூறுகையில், ‘வாக்களிப்பு ரகசியமாக நடந்திருப்பதால், அணி மாறி வாக்களித்தது உங்களுக்கு எப்படித் தெரியும்? யாருடைய வாக்குகள் பிரிந்துள்ளன என்று எனக்குத் தெரியவில்லை? 14 வாக்குகள் அணி மாறி இருந்தால் அதற்கு மகாராஷ்டிரா என்ன செய்தது? இதனால் எங்கள் மாநிலம் அவமதிக்கப்படுகிறது’ என்றார்.
* செல்லாத ஓட்டு போட்ட எம்பிக்கள் யார்?
சிவசேனாவின் உத்தவ் தாக்கரே பிரிவின் எம்.பி. அரவிந்த் சாவந்த் கூறுகையில்,’ வாக்குகளை செல்லாததாக்கிய அந்த எம்.பி.க்கள் யார்?. அவர்கள் படித்தவர்களா, முட்டாள்களா? அவர்கள் மனசாட்சியைக் கேட்டு வாக்களித்தார்களா அல்லது அவர்களின் வாக்குகள் வாங்கப்பட்டதா?. அவர்கள் தவறாக வாக்களித்திருக்க வேண்டும், அதனால்தான் அது செல்லாததாகிவிட்டது. பாஜ துரோகத்தின் விதைகளை விதைத்துள்ளது. அனைத்து நிர்வாக அமைப்புகளும் பாஜவின் அடிமைகள். இந்த நிர்வாகத்தின் பலத்தையும் அவர்கள் மிரட்டியிருக்க வேண்டும்’ என்றார்.
* ஒரே மாதிரியில் செல்லாத வாக்குகள் பதிவு
துணை ஜனாதிபதி தேர்தலில் மொத்தம் 15 வாக்குகள் செல்லாத வாக்குகளாக பதிவாகி இருந்தது. இதில் 7 வாக்குகள் ஒரே மாதிரி தவறு செய்து செல்லாத வாக்காக பதிவு செய்யப்பட்ட தகவல் வெளியாகி உள்ளது. இந்த 7 வாக்குகளும் சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு ஆதரவு அளிக்க முயன்று தவறான இடத்தில் குறியிடப்பட்டது. இரண்டு வாக்குகள் டிக் செய்யப்பட்டு இருந்தன. மூன்று வாக்குகளில் ஒரு எண் எழுதப்பட்டு இருந்தது.