Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

துணை ஜனாதிபதி தேர்தலில் மின்னணு இயந்திரங்கள் பயன்படுத்தாதது ஏன்? தேர்தல் அதிகாரி விளக்கம்

புதுடெல்லி: மக்களவை, சட்ட பேரவை தேர்தல்களில் பயன்படுத்தப்படும் மின்னணு வாக்கு பதிவு இயந்திரங்கள் துணை ஜனாதிபதி தேர்தலில் பயன்படுத்தப்படாதது ஏன்? என்பது குறித்து அதிகாரி விளக்கம் அளித்துள்ளார். துணை ஜனாதிபதியாக இருந்த ஜெகதீப் தன்கர் சமீபத்தில் ராஜினாமா செய்தார். உடல்நிலையைக் காரணமாகச் சொல்லி மழைக்காலக் கூட்டத்தொடர் நடைபெறும்போதே ஜெகதீப் தன்கர் பதவியை ராஜினாமா செய்தார்.

இதையடுத்து துணை ஜனாதிபதி பதவி காலியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டு,செப்.9ம் தேதி தேர்தல் நடக்கும் என அறிவிக்கப்பட்டது. இதில் ஆளும் பாஜ கூட்டணி சார்பில் மகாராஷ்டிரா கவர்னர் சி.பி.ராதாகிருஷ்ணன் போட்டியிடுகிறார். எதிர்க்கட்சிகள் கூட்டணியின் சார்பில் உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி சுதர்ஷன் ரெட்டி போட்டியிடுகிறார்.மக்களவை,சட்ட பேரவை தேர்தல்களில் மின்னணு வாக்கு பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன.

கடந்த 2004ம் ஆண்டு முதல் மின்னணு வாக்கு பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதுவரை 5 மக்களவை தேர்தல்கள்,130 சட்ட பேரவை தேர்தல்களில் மின்னணு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளது. மக்களவை, பேரவை தேர்தல்களில் போட்டியிடும் வேட்பாளர்களின் பெயர்கள் அகரவரிசைப்படி வாக்கு பதிவு இயந்திரத்தில் அச்சிடப்பட்டிருக்கும். வாக்காளர் யாருக்கு வாக்களிக்க விரும்புகிறாரோ அவரது பெயருக்கும் ஒதுக்கப்பட்டுள்ள சின்னத்துக்கும் நேரே உள்ள பொத்தானை அழுத்தினால் வாக்கு பதிவாகும்.

இவ்வாறு குறிப்பிட்ட தொகுதியில் வாக்காளர்கள் யாருக்கு அதிக எண்ணிக்கையில் வாக்களிக்கின்றனரோ அவரே வெற்றி பெற்றவராக அறிவிக்கப்படுகிறார். மக்களவை , சட்ட பேரவை தேர்தல்களை போல் அல்லாமல் ஜனாதிபதி, துணை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களில் யாருக்கு முதல் முன்னுரிமை, யாருக்கு 2வது முன்னுரிமை என வாக்காளர்கள் பதிவு செய்ய வேண்டும்.

எத்தனை வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனரோ அத்தனை பேருக்கு வாக்காளர்கள் முன்னுரிமையின்படி எண்களை குறிப்பிட வேண்டும். மாநிலங்களவை தேர்தலை போல் அல்லாமல் இதில் வாக்கு பதிவு முடிந்ததும் உடனே வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும். இது குறித்து தேர்தல் அதிகாரி கூறுகையில், இது போன்ற வாக்கு பதிவு முறைக்கு மின்னணு வாக்கு பதிவு இயந்திரங்களை பயன்படுத்த முடியாது.

இந்த வாக்களிப்பு முறையைப் பதிவு செய்வதற்காக இயந்திரங்கள் வடிவமைக்கப்படவில்லை. வாக்கு பதிவு இயந்திரம் என்பது மொத்தம் பதிவான வாக்குகளை எண்ணுவதாகும். துணை ஜனாதிபதி தேர்தலில் விகிதாசார பிரதிநிதித்துவ முறையின் கீழ், விருப்பத்தின் அடிப்படையில் வாக்குகளைக் கணக்கிட வேண்டும். மேலும் அதற்கு முற்றிலும் மாறுபட்ட தொழில்நுட்பம் தேவைப்படுகிறது. வேறு வார்த்தைகளில் கூறுவதானால், வேறு வகையான இயந்திரங்கள் தேவைப்படும் என்றார்.