புதுடெல்லி: நாட்டின் 15வது துணை ஜனாதிபதியாக தேர்வான சி.பி.ராதாகிருஷ்ணன் நாளை பதவியேற்கிறார். அவருக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு பதவிப்பிரமாணம் செய்து வைக்கிறார். நாட்டின் துணை ஜனாதிபதியாக இருந்த ஜெகதீப் தன்கர், தனது உடல்நிலையை காரணம் காட்டி கடந்த ஜூலை 21ஆம் தேதி தனது பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து நடந்த துணை ஜனாதிபதி தேர்தலில் ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணியின் வேட்பாளராக மகாராஷ்டிரா ஆளுநராக இருந்த சி.பி.ராதாகிருஷ்ணனும், ‘இந்தியா’ கூட்டணி சார்பில் உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி பி.சுதர்சன் ரெட்டியும் நிறுத்தப்பட்டனர்.
நேற்று முன்தினம் நடந்த தேர்தலில் சி.பி.ராதாகிருஷ்ணன் 452 வாக்குகளைப் பெற்று அபார வெற்றி பெற்றார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட சுதர்சன் ரெட்டி 300 வாக்குகளை மட்டுமே பெற்றார். இந்த தேர்தலில் வெற்றி பெற்ற சி.பி.ராதாகிருஷ்ணனை பிரதமர் மோடி நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
துணை ஜனாதிபதி தேர்தலில் சி.பி.ராதாகிருஷ்ணன் வெற்றி பெற்றதற்கான சான்றிதழில் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார், தேர்தல் ஆணையர்கள் விவேக் ஜோஷி, எஸ்.எஸ்.எஸ். சந்து ஆகியோர் நேற்று கையெழுத்திட்டனர். துணைத் தேர்தல் ஆணையர் பானு பிரகாஷ் யெதுரு மற்றும் செயலாளர் சுமன் குமார் தாஸ் ஆகியோர் இந்த சான்றிதழை ஒன்றிய உள்துறை செயலாளரிடம் ஒப்படைத்தனர்.
இது சி.பி.ராதாகிருஷ்ணன் பதவியேற்பு விழாவின் போது வாசிக்கப்படும். நாளை காலை 10 மணிக்கு ஜனாதிபதி மாளிகையில் தர்பார் மண்டபத்தில் நடக்கும் விழாவில் புதிய துணைஜனாதிபதியாக சி.பி.ராதாகிருஷ்ணன் பதவி ஏற்க உள்ளார். அவருக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு பதவிப்பிரமாணம் செய்து வைப்பார்.
இந்த விழாவில் பிரதமர் மோடி, ஒன்றிய அமைச்சர்கள் அமித் ஷா, ராஜ்நாத் சிங், ஜே.பி.நட்டா மற்றும் மக்களவை, மாநிலங்களவையைச் சேர்ந்த மூத்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் பங்கேற்கின்றனர். தேசிய ஜனநாயக கூட்டணியின் கூட்டணிக் கட்சித் தலைவர்கள், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி உள்ளிட்ட தலைவர்களும் விழாவில் கலந்துகொள்கிறார்கள்.
* சி.பி.ராதாகிருஷ்ணனை சந்தித்தார் சுதர்சன் ரெட்டி
துணை ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்ற சி.பி.ராதாகிருஷ்ணனை இந்தியா கூட்டணி வேட்பாளர் பி.சுதர்சன் ரெட்டி நேற்று சந்தித்து பேசினார். டெல்லியில் உள்ள மகாராஷ்டிரா சதனில் தங்கியிருக்கும் சி.பி. ராதாகிருஷ்ணனை சந்தித்து அவரது வெற்றிக்கு வாழ்த்து தெரிவித்தார்.